ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் அருட்பரம்பரையில் வந்துதித்த வள்ளல் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் ஆவார். 1942-ல் திருப்பராய்த்துறையில் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் அமைத்து ஆன்மிக, கல்விப்பணிகளை இனிதே நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது ஒரு நாள் தபோவனத்திற்குள் 13 வயது நிரம்பிய ஒரு சிறுவன் நுழைகிறான். நேரே பெரிய சுவாமி சித்பவானந்தரின் அறையை அடைகிறான். அவர் இச்சிறுவனை மேலும் கீழும் பார்க்கிறார்.(நயன தீட்சை கொடுத்தாயிற்று)
“நீ எங்கிருந்து வருகிறாய்? உன் பெயர் என்ன?” இது சுவாமி.
சிறுவன்: என் பெயர் நடராஜன். கோவை மாவட்டம் கொடுமுடி வட்டத்திலுள்ள “காகம்” எங்கள் கிராமம்.
சுவாமி: இங்கு எதற்கு வந்தாய்?
சிறுவன்: நான் துறவியாக விரும்புகிறேன்.
சுவாமி: அப்படியா! நீ சிறு பிள்ளையாக இருக்கிறாய். ஊருக்குச் சென்று SSLC படித்து முடித்துவிட்டு certificate எடுத்துக்கொண்டு வா.. சேர்த்துக்கொள்கிறேன்.
சிறுவன் நடராஜன்: கட்டாயம் சேர்த்துக்கொள்வீர்களா?
சுவாமி: ஒரு முடிவு எடுத்துவிட்டால் நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். சாப்பிட்டுவிட்டு போய் வா!
இதற்கிடையில் நடராஜன் SSLC முடிக்கிறான். SSLC mark sheet எடுத்துக்கொண்டு திரும்பவும் தபோவனப் பிரவேசம் ஆகிறான்.
சுவாமி: என்னை விடமாட்டாய் போலிருக்கே! சரி நான் சொல்கிறபடி செய்கிறாயா?
நடராஜன்: அதற்குத்தானே வந்திருக்கிறேன்.
பெரியசுவாமியுடன் எடுத்துக்கொண்டு திரும்பவும் தபோவனப் பிரவேசம் ஆகிறான்.
சுவாமி: என்னை விடமாட்டாய் போலிருக்கே! சரி நான் சொல்கிறபடி செய்கிறாயா?
நடராஜன்: அதற்குத்தானே வந்திருக்கிறேன்.
பெரியசுவாமியுடன் Presidency Collegeல் படித்த சகமாணவர் ஒருவர் கத்தோலிக்க பாதிரியாராக மாறி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வராக அப்போது பதவி வகித்து வந்தார். அவருடைய பெயர் பிரிட்டோ. பெரிய சுவாமி அவருடன் தொடர்புகொண்டு நடராஜனை Intermediate வகுப்பில் சேர்க்கிறார். வேட்டி, முழுக்கை சட்டை போட்டுக்கொண்டு மதிய உணவு எடுத்துக்கொண்டு தினமும் எலமனூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு பயணமாகி கல்லூரி சென்று வந்து கொண்டிருந்தார் நடராஜன். கல்லூரியை ஒட்டி லூர்துமாதா பேராலயம் இருந்தது.(இப்போதும் இருக்கிறது) அக்கோயிலின் வாசலில் ஒரு வயதான மூதாட்டி பசியால் வாடிக்கொண்டிருந்ததை நடராஜன் கவனிக்கிறார். தான் கொண்டு வந்த மதிய உணவை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். அந்தப் பாட்டி தினந்தோறும் இவர் வருகைக்காக காத்திருக்கிறார். நடராஜனும் தினந்தோறும் தன் அன்னதான திட்டத்தை எவருக்கும் தெரியாமல் நிறைவேற்றி வருகிறார். Intermediate course முடிந்தது. முதல் வகுப்பில் தேர்ச்சியடைகிறார்.
பெரியசுவாமி நடராஜனை B.A. Maths(with logic Ancillary) சேர்க்கிறார். அப்போது அவருடைய Bench mates மற்றும் Class mates இருவர். ஒருவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆங்கிலத்துறைத் தலைவர் டாக்டர் நாகராஜன். இவர் லால்குடியிலிருந்து ரயிலில் வருவார். மற்றொருவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல கலாம். இவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். நடராஜனின் கணிதத் திறமையைப் பார்த்து அப்துல் கலாம் புகழாத நாளே இல்லை என்று டாக்டர் நாகராஜன் சென்ற ஆண்டு சென்னையில் அவரை நான் சந்தித்தபோது கூறினார்.
பாட்டிக்கு கிடைக்க வேண்டிய சாப்பாடு தினமும் நடராஜன் மூலமாக கிடைத்து வந்தது. ஒரு நாள் தன் தோழர்களிடம் நடராஜன், “எனக்கு லௌகீகப் படிப்பில் விருப்பமில்லை. ஆன்மிகக் கல்வியில் மட்டுமே விருப்பமுள்ளது. நான் கல்லூரியிருந்து நின்றுகொள்ளலாம் என்றிருக்கிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்கிறார். நண்பர்களும், நடராஜனின் கருத்தை ஆமோதித்தனர். அன்று மாலை பெரியசுவாமியிடம் சென்று தனக்கு லௌகீகப் படிப்பில் பிரியமில்லை என்றும் ஆத்ம சாதனத்தில் தீவிரமாக ஈடுபட விரும்புவதாகவும் கூறுகிறார். உடனே குருநாதர் சித்பவானந்தர், “சபாஷ்! நீ எடுத்த முடிவு சரியானது. நானாவது தேர்வு வரைக்கும் சென்றேன். நீ 3ஆம் வருஷம் பட்டப்படிப்பு தேர்வுக்கு முன்பே முடிவெடுத்துவிட்டாய். அப்படியே ஆகட்டும். இன்று முதல் நீ குருகுல மாணவர்களுக்கு வார்டனாக இரு!” என்று உத்தரவிடுகிறார்.
ஒரு நாள் மட்டும் கல்லூரிக்குச் சென்று வருவதாக குருநாதரிடம் கூறிவிட்டு அங்கு சென்று பாட்டியைப் பார்த்து அன்றைய மதிய உணவை வழங்கிவிட்டு, “நாளை முதல் நான் வரமாட்டேன். நீங்கள் உணவிற்கு என்ன செய்வீர்கள்?” என்று கேட்டுவிட்டுத் தன்னிடம் இருந்த 5 ரூபாயை பாட்டியிடம் கொடுத்து தெரு ஓரமாக ஒரு சிறிய கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி விடைபெறுகிறார்.
சில ஆண்டுகளில் பெரியசுவாமி இவருக்கு சந்நியாச தீட்சை வழங்கி நித்தியானந்தர் என்ற பெயரைச் சூட்டுகிறார். மாணவர்களுக்கு வார்டனாக இருந்ததால் அனைவரும் WARDEN SWAMIJI என்றே அழைத்து வந்தனர். குருநாதர் ஏற்பாட்டின்படி வட இந்திய யாத்திரைக்கு சென்று வருகிறார். குறிப்பாக கமார்புகூர்(பரமஹம்ஸர் பிறந்த ஊர்), ஜெயராம்பாடி(அன்னை சாரதா தேவியார் பிறந்த ஊர்), விவேகானந்தர் அவதரித்த தலங்களுக்கு சென்றும், பேலூர் மடத்துக்கு சென்றும் பண்பட்ட துறவியாகத் திரும்புகிறார். அவரிடம் வித்யாவன உயர்நிலைப்பள்ளியின் செயலர் பொறுப்பும், குலபதி பொறுப்பும், தர்மச்சக்கரம் இதழின் ஆசிரியர் பொறுப்பும் ஒப்படைக்கப்படுகிறது. பல பள்ளிகளை கவனிக்கும் பொறுப்பை பெரியசுவாமி நித்தியானந்தரிடம் ஒப்படைக்கிறார். குருவின் ஆணையை சிரமேற்கொண்டு அனைத்து பள்ளிகளையும் சீரிய முறையில் நிர்வகித்து வந்தார்.
தமக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது சித்பவானந்தர் ஆசிர்வாத நிகழ்ச்சிக்கு நித்யானந்தரை தம்முடன் அழைத்துச் செல்கிறார். அந்த வருடம் பெரியசுவாமியும், நித்தியானந்தரும் அருகருகே அமர்ந்து இருக்கிறார்கள். ஒரே ஒரு மாணவனுக்கு மட்டும் பெரியசுவாமிஜி ஆசிர்வாதம் செய்கிறார். மற்றவர்களுக்கு நீ ஆசிர்வாதம் செய் என்று நித்தியானந்தரைப் பார்த்து ஆணையிடுகிறார். அப்போது நித்தியானந்தர், “ஆசிர்வாதம் செய்யும்போது என்ன மந்திரம் சொல்ல வேண்டும்?” என்று வினவுகிறார். பெரியசுவாமி, “ சூரிய காயத்ரி மந்திரத்தை சொல்ல வேண்டும். முழுமையாக சொன்ன பிறகுதான் பிள்ளைகளின் தலையிலிருந்து கையை எடுக்க வேண்டும்” என்று விளக்குகிறார். அது முதல் எல்லோருக்கும் நித்தியானந்தர்தான் ஆசிர்வாதம் செய்ய ஆரம்பித்தார். சுவாமி குஹானந்தர் தலைவராக இருந்த ஒரு குறுகிய காலகட்டத்தில் குஹானந்தரும், நித்தியானந்தர் இருவருமே பிள்ளைகளுக்கு ஆசிர்வாதம் செய்தார்கள்.
குருநாதர் மறைவிற்குப் பின் தலைமைப் பொறுப்பைக்கூட அவர் விரும்பி ஏற்கவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தலைவர் பொறுப்பை ஏற்றார்.
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
என்ற கருத்துடையவர் அவர்.
தமிழ்நாடு முழுவதும் தம் குருநாதர் நிகழ்த்தி வந்த அந்தர்யோகங்களை இவரும் சிறப்பாக நடத்தி அன்பர்களின் அன்புக்கு ஆளானார். குருநாதர் உத்தரவுப்படி ஆண்டுக்கு ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து அன்பர்களுடன் பாதயாத்திரை சென்று வந்தார். இதனால் நூற்றுக்கணக்கான கிராமங்களில் இந்துமத தத்துவங்கள் உயிரூட்டப்பட்டன. அதுமட்டுமல்ல தம் குருவின் வாழ்க்கை வரலாற்றை தம் கைப்பட எழுதி பிரசுரித்தார். சித்பவானந்த குருவின் நூற்றாண்டு விழாவை குருநாதர் பிறந்த ஊரான கோவை மாவட்டம் செங்குட்டைப்பாளையத்தில் துவங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடச் செய்து மகிழ்ந்தார். 1998-ஆம் ஆண்டு தபோவனத்தில் நடைபெற்ற சித்பவானந்தரின் நூற்றாண்டு விழா குறிப்பிடத்தக்கது.
விடுதியில் மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் உணவை மட்டுமே சாப்பிடுவார். தனக்கென்று Specialஆக எதையும் தயாரித்து சாப்பிடமாட்டார். எங்கு சென்றாலும் அவரது நினைவு மட்டும் ஸ்ரீ விவேகானந்த வித்யாவன குருகுல மாணவர்கள் மீதே இருக்கும். தாய் தந்தையர்கள் கூட இவரைப் போல பிள்ளைகளை வளர்க்கமாட்டார்கள். அதனால் தான் அத்தனை மாணவர்களும் அவர் மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கின்றனர்.
தலைமை ஸ்தானத்தை அவர் தேடிச் செல்லவில்லை. அது தானே தேடி வந்தது. ராமன் இருக்க பரதன் நாடாள்வதா? என்று மறுத்து பெரியசுவாமிக்குப் பின் சுவாமி குஹானந்தரை தலைவராக்கி அழகு பார்த்தார். குஹானந்தருக்குப் பின்புதான் தான் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இத்தகைய சுயநலமற்ற கருணாமூர்த்தி 09.04.2012 இரவு 12 மணிக்கு தம் 82ஆம் வயதில் இறைநிலை எய்தினார். அவரது தேக தகனம் பெரியசுவாமியின் சமாதிக்கு அருகிலேயே 10.04.2012 அன்று மாலை 4:30 மணி அளவில் நடைபெற்றது.
(குறிப்பு: Warden Swamijiயை பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் யாவும் ஸ்ரீமத் சுவாமி நித்தியானந்தர் அவர்களிடமிருந்து சொல்லக் கேட்டவர் ஓய்வு ஆசிரியர் வ. சோமு அவர்கள். ஆசிரியர் சோமு அவர்களுக்கு பழைய மாணவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.)
No comments:
Post a Comment