அட்சய திருதியையா? - ஓர் எச்சரிக்கை
அட்சய திருதியை என்ற ஒன்று சமீப காலங்களில் ஒரே களேபரம்.
ஜோதிட சாத்திரப்படி - 15 திதிகளில் இந்த அட்சய திருதியைக்கு விசேஷமான பலன்கள் உண்டாம்.
சித்திரை மாதத்தில் சுக்லபட்சத்தில் சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் ரிஷப ராசியிலும் அமையும் நாள் இதுவாம்.
சென்னை - பிர்லா கோளரங்கத்திற்குச் சென்று இந்த அட்சய திருதியைக்குச் சான்று பெற்றுவரத் தயாரா?
எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் மூடத்தனத்தைப் பரப்பி, அதனை மூலதனமாகக் கொண்டு வியாபாரம் செய்து மக்களைச் சுரண்டும் இவையில்லாமல் வேறு என்னவாம்?
ஒரு அப்துல்கலாமோ - ஒரு மயில்சாமி அண்ணாதுரையோ - இந்த ஜோதிடப் பித்தலாட்டமான அட்சய திருதியை சரிதான் என்று சொன்னதுண்டா?
மாறாக மறுத்துதான் வந்திருக்கிறார்கள்!
அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்த நேரம் -பி.ஜே.பி.யைச் சேர்ந்த பிரமோத் மகாஜன் - நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுத்தபோது, அப்துல்கலாம் நகைத்தார் - எனக்கு அவற்றில் நம்பிக்கை இல்லை என்று அவருக்கே உரித்தான நயத்தக்க நாகரிகத்துடன் மறுத்தாரே!
விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் - இது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-ஏ எச்) கூறும் நிலையில், இதுபோன்ற அட்சய திருதியைகளை தடை செய்வதுதானே நல்லதோர் அரசின் கடமையாக இருக்க முடியும்?
அட்சய திருதியையில் ஒரு குன்றிமணி அளவு தங்கமாவது - கடன் வாங்கியாவது வாங்கவேண்டுமாம் - அப்படி வாங்கினால், ஆண்டு முழுவதும் செல்வலட்சுமி அவர்கள் வீட்டில் தாண்டவமாடுவாளாம்.
இதுவரை அப்படி வாங்கியவர்கள் வீட்டில் செல்வம் பொங்கி வழிகிறது என்பதற்கு ஆதாரம் உண்டா? புள்ளி விவரங்கள் உண்டா?
ஏற்கெனவே கடன் பட்டு விழி பிதுங்கிக் கிடக்கும் பாமர மக்களை கடன் வாங்கித் தங்கத்தை வாங்கத் தூண்டுவது சமூக விரோதச் செயல் அல்லவா!
அதுவும் தங்கத்தின் விலை நாளும் ராக்கெட் வேகத்தில் விண்ணில் விர்ரென்று ஏறிக்கொண்டு இருக்கிறது.
அட்சய திருதியை என்று சொல்லி அந்நாளில் தங்கத்தை வாங்கினால் க்ஷேமம் என்று நகை வியாபாரிகள் விளம்பரங்களை பக்கம் பக்கமாக வெளியிட்டு பாமர மக்களின் மூக்கைச் சொறிந்து விடுகிறார்கள். ஆதாயம் இல்லாமலா ஆற்றைக் கட்டி இறைப்பார்கள்?
புதுச்சேரியில் நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தினர் கடந்த நான்கு ஆண்டுகாலமாக நல்லதோர் பணியைச் செய்து வருகிறார்கள்.
பொதுமக்களே, உஷார்! உஷார்!! அட்சய திருதியை என்று விளம்பரம் செய்து, நகை வியாபாரிகள் போலியான நகைகளை உங்கள் தலையில் கட்டுகிறார்கள் - ஏமாறாதீர்கள்! ஏமாறாதீர்கள்!! என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
தங்கம் அரசின் கஜானாவில் இருக்கட்டும் - மக்களைத் திவாலாக்கும் அட்சய திருதியை என்னும் கண்ணிவெடியில் சிக்கவேண்டாம்! சிக்கவேண்டாம்!!
No comments:
Post a Comment