Wednesday, March 23, 2011

மதுரை தினகரன் பத்திரிகை எறிப்பு வழக்கு?

“நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா? நீயும் அந்த கொலைக்களத்தில் மாண்டு விட்டாயா?” பூம்புகார் படத்தில் வரும் கோவலன் கொலையுண்ட காட்சியில் ஒலிக்கும் பாடல் இது.
இப்போது மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு 3 ஊழியர்கள் பலியான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை என்ற செய்தியைப் பார்க்கும்போது பூம்புகார் படப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது. திமுகவின் அடுத்த வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பு முடிவு தினகரன் நாளேட்டில் வெளியானதைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள அந்த அலுவலகம் தாக்கப்பட்டது. மதுரை மேயர் உள்பட இந்த தாக்குதலில் ஈடுபட்ட காட்சி தினகரன் உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளியானதோடு சன் தொலைக்காட்சியிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பானது. இந்தத் தாக்குதலின் போது அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதில் 3 அப்பாவி ஊழியர்கள் பலியானார்கள். அப்போது மதுரைக்கு வந்த சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என்று சூளுரைத்தார். ஆனால் இன்றைக்கு தினகரன், தமிழ்முரசு பத்திரிகைகளிலோ, சன் தொலைக்காட்சியிலோ தினகரன் எரிப்பு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செய்தி கூட வெளியாகவில்லை. கலாநிதி மாறன் கூறிய நீதியை நிலைநாட்டும் விதம் இதுதானோ என்று எண்ணத்தோன்றுகிறது. தினகரன் ஊழியர்கள் கொலை என்பது யாருக்கும் தெரியாமல் நடந்த ஒன்றல்ல. பட்டப் பகலில் நடந்த ஒன்று. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து வீடியோ ஆதாரம் உள்பட விரிவான ஆதாரம் உண்டு. ஆனாலும், சர்வசாதாரணமாக குற்றம் சாட்டப்பட்ட 16 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
புகார் மனு கொடுத்தவரிலிருந்து, முதல் சாட்சியம் அளித்த காவல்துறை அதிகாரி உள்பட அனைவரும் பிறழ்சாட்சியாக மாற்றப்பட்டுள்ளனர். இந்த வழக்கை நடத்திய மத்திய புலனாய்வுத்துறை எந்த லட்சணத்தில் அல்லது எத்தகைய உள்நோக்கத்துடன் நடந்து கொண்டுள்ளது என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. தினகரன் எரிப்பைத் தொடர்ந்து முதல்வர் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டது. மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் பதவி பறிக்கப்பட்டது. சுமங்கலி கேபிள் விஷனுக்கு போட்டியாக ராயல் கேபிள் விஷன் உருவாக்கப்பட்டது. திடீரென அரசு கேபிள் டி.வி.யும் துவக்கப்பட்டது.
இடையில் கண்கள் பணித்திட, இதயம் மகிழ்ந்திட குடும்ப இணைப்பு ஏற்பட்டது. தயாநிதி மாறன் மீண்டும் மத்திய அமைச்சராக்கப் பட்டார். அரசு கேபிள் டி.வி. அறுத்துவிடப்பட்டது என்பதெல்லாம் வரலாறு அல்ல. நேற்றைக்கு நடந்த நிஜம். இதன் தொடர்ச்சியாகவே தினகரன் எரிப்பு வழக்கு ஒன்றுமில்லாமல் போய்விட்டது. முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொல்லப்பட்ட வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இப்போது தினகரன் எரிப்பு வழக்கிற்கும் அதே கதி ஏற்பட்டுள்ளது. ஒரு சாதாரண கொலை வழக்கில் கூட அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். ஆனால், தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் எத்தகைய மேல்முறையீடும் செய்யப்படவில்லை. இப்போது தினகரன் எரிப்பு வழக்கில் அரசு என்ன செய்யப் போகிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. பதில் சொல்லவேண்டிய பொறுப்பு வழக்கை நடத்திய மத்திய புலனாய்வுத்துறைக்கும், தமிழக அரசுக்கும் உண்டு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...