உறவுகளை இழந்த விஜயலட்சுமியின் சென்ட்டிமென்ட் பிரசாரம்
யார் இந்த விஜயலட்சுமி?
கடந்த வருடம் ஆகஸ்ட் 12&ம் தேதி சேலம் சீல்நாயக்கன்பட்டியில் 78 வயதான ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ், அவரது மனைவி சந்திரம்மாள், மகன் ரத்தினம், மருமகள் சந்தானலட்சுமி, பேரன் கௌதம், 12 வயதே ஆன பேத்தி விக்னேஸ்வரி ஆகியோர் சொத்துத் தகராறில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட குப்புராஜின் மகள்தான் இப்போது நியாயம் கேட்கப் புறப்பட்டிருக்கும் விஜயலட்சுமி.
சொத்துக்காக நடந்த இந்த கொலையில் தொடர்பிருப்பதாக அமைச்சர் வீரபாண்டியாரின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்ப்பட்டதும்... அவரை சிறைக்கே சென்று வீரபாண்டியார் பார்த்துவிட்டு வந்ததும் ஏற்கனவே சர்ச்சையைக் கிளப்பின.
இந்த நிலையில்... கொலை செய்யப்பட்ட குப்புராஜின் மகள் விஜயலட்சுமி, ஆரம்பம் முதலே ஆறு பேர் கொலை விஷயத்தில் தீவிர எதிர்ப்பு காட்டி வந்த பி.ஜே.பி. வக்கீல் மணிகண்டன் ஆகியோர் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
‘அடுத்தது அ.தி.மு.க-. ஆட்சிதான். உண்மையான குற்றவாளிகள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள்’ என்று ஜெயலலிதா தந்த நம்பிக்கையைத் தொடர்ந்து, ‘என் குடும்பத்துக்கு ஏற்பட்ட கொடூர சம்பவத்தின் பின்னணியை சேலத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சொல்வேன்’ என்று புறப்பட்டிருக்கிறார் விஜியலட்சுமி.
அவரிடம் பேசினோம்.
‘‘எங்கள் குடும்பத்து நபர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டதையும், அதில் சேலம் தி.மு.க. கட்சி ஆட்கள் தலையீடு இருப்பதையும் அம்மாவிடம் சொன்னபோது கலங்கிப் போனார். ‘உங்களுக்கு நியாயம் கிடைக்க என் ஆதரவு உறுதி’ என்று சொல்லி எங்களை ஆறுதல் படுத்தினார். இன்று நான் சொந்த, பந்தங்களை பலி கொடுத்துவிட்டு அநாதையாக நிற்பதற்கு தி.மு.க ஆட்சியும், அதன் ஆட்களும்தான் காரணம். அதற்காகத்தான் இத்தேர்தலில் தி.மு.க எதிர்ப்பு பிரசாரத்தை தொடங்கியுள்ளேன்.
அ.தி.மு.க. நிர்வாகிகள் என்னை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் சேலத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்வேன். அமைச்சர் வீரபாண்டியார் போட்டியிடும் சங்ககிரி தொகுதியில் என் குடும்பத்துக்கு நடந்த கொடுமையை அதிகமாக பரப்புரை செய்வேன். அம்மா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியிலும் தி.மு.க. ஆட்சியால் எனக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமை பற்றி பேசுவதற்கு தயாராக உள்ளேன். அம்மாவை சந்தித்துவிட்டு வந்ததையடுத்து எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு சேலம் மாவட்ட தி.மு.க.வினர்தான் காரணம்’’ என்றார் உருக்கமாக.
வக்கீல் மணிகண்டனிடம் பேசினோம்.
‘‘ எனக்கும் செல்போனில் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் அஞ்சப்போவதிலை. சேலத்தில் அமைச்சர் வீரபாண்டியார் பலப்பல கோடிக்கு மேல் சொத்து சேர்த்து உள்ளார். இதெல்லாம் நியாயமாக சேர்த்த சொத்தா? இல்லை. பல பேரை மிரட்டி சம்பாதித்த சொத்து. இதை அம்மா ஆணைப்படி தேர்தல் பிரசாரத்தில் மக்கள் மனதில் படும்படி சொல்வேன். சொத்துக்காக ஒரு குடும்பத்தையே கொலை செய்த தி.மு.க. நிர்வாகிகள் அட்டூழியத்தை எடுத்துச் சொல்வேன்.
ஆரம்பத்தில் சரியாக சென்றுகொண்டிருந்த கொலை வழக்கு, இன்று செயலிழந்துவிட்டது. சி.பி.சி.ஐ.டி. ஏதோ வழக்குத் தொடுத்து விட்டோமே என்ற நினைப்பில்தான் விசாரித்து வருகிறது. உண்மையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. சுருக்கமாகச் சொன்னால் அடாவடி, அராஜகம், ஏமாற்றுல், பித்தலாட்டம், ரவுடித்தனம் இதுதான் தி.மு.க. ஆட்சியில் சேலத்தில் நடந்தது. ஆறு பேர் கொலை வழக்கு பற்றிய அத்தனை கொடூரமான விஷயங்களையும் சேலம் தொகுதிக்குட்பட்ட மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்வேன். இதுதான் அம்மா எனக்களித்த வேலை.
தி.மு.க. கூட்டணி போட்டியிடும் அத்தனை தொகுதி-களிலும் படுதோல்வி அடைய எங்களது ‘ஆறு பேர் கொலை’ பிரசாரத்தை தீவிரப்படுத்தப் போகிறோம். அமைச்சர் வீரபாண்டியார் போட்டியிடும் சங்ககிரியில் இந்தக் கொடூரத்தைப் பற்றி வீட்டுக்கு வீடு எடுத்து சொல்லி அவரை தோல்வியடையச் செய்வோம்’’ என்றார் உறுதியாய்.
இதுபற்றி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வராஜிடம் பேசினோம். ‘‘ஏற்கனவே இந்த விஷயத்தில் நாங்கள் தெருவுக்குத் தெரு கூட்டம் போட்டு மக்களுக்கு சொல்லி வருகிறோம். இதைக்கண்டு பயந்துதான் அமைச்சர் வீரபாண்டியார் சங்ககிரிக்கு மாறிவிட்டார்’’ என்றார் உற்சாகமாய்.
அ.தி.மு.க. பிரசார வியூகத்தைப் பற்றி சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கத்திடம் பேசியபோது, ‘‘எதைப்பற்றியும் எங்களுக்கு கவலையில்லை. கலைஞரின் நல்லாட்சி திட்டங்கள் எங்களது வெற்றியை எப்பொழுதோ எளிதாக்கிவிட்டது’’ என்றார் போல்டாக.
ஆனாலும், ‘‘ஜாமீனில் வெளிவந்திருக்கும் பாரப்பட்டி சுரேஷை தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டங்களில் தலைகாட்ட வேண்டாம் என்று அமைச்சரே உத்தரவிட்டிருக்கிறார். பிரசாரத்தில் சுரேஷ் இருந்தால் அதை வைத்தே அ.தி.மு.க. எங்கள் பெயரை மேலும் டேமேஜ் ஆக்கிவிடும் என்பதால்தான் இந்த உத்தரவாம்’’ என்கிறார்கள் தி.மு.க.வினர்.
No comments:
Post a Comment