''துணை முதல்வர் மகன் தயாரிக்கும் 'ஏழாவது அறிவு’ படக் குழுவினருக்கு 'ஆறாவது அறிவு’ வேலை.
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதி கோவை போளுவாம்பட்டி வனச் சரகம். இதில் உள்ள குஞ்சராடி மலைப் பகுதியில் இருந்து உற்பத்தியாகும் சாடியாறின் கிளை ஆறு நண்டங்கரை நீரோடை. வறட்சியான காலகட்டத்திலும் தண்ணீர் வற்றாத இந்த நீரோடையில், 1 கோடியே 28 லட்சம் செலவில் அங்கு தடுப்பணை கட்டப்பட்டது. 'நமக்கு நாமே திட்டத்தின் கீழ்’ தயாரான இந்த அணையைக் கட்ட ஆன செலவில் பாதிக்கும் அதிகமான தொகையை 'சிறு துளி’ அமைப்பு தந்தது. இந்த அணையில் தண்ணீர் வற்றியதே இல்லை. இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும், விவசாயத் தேவைகளுக்கும் இந்த தடுப்பணை, நிலத்தடி நீரை வளப்படுத்துவதுடன் யானை, சிறுத்தை போன்ற விலங்குகளின் குடிநீர் பாத்திரமாகவும் இருக்கிறது. இதற்குத்தான் ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிக்கும் 'ஏழாவது அறிவு’ பட டீம் ஆப்புவைத்து இருக்கிறது. இந்தப் படப்பிடிப்பு நபர்கள், நண்டங்கரை அணைக்குள்ளும் அதைச் சுற்றிலும் அசுரத்தனமான செட்களைப் போட்டு அணை நீரை பாழ்படுத்தி இருக்கிறார்கள்
தடுப்பணையைச் சுற்றி மூன்று பகுதிகளில் பெரிய தூண்கள், தோரண வாயில் போன்ற பிரமாண்ட படிக்கட்டுகளை அமைத்து இருக்கிறார்கள். கூடவே, அணை நீருக்குள்ளும் தகர ட்ரம்கள் மற்றும் பிளைவுட்களால் மேடை அமைத்து கோயில் செட் போட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான சவுக்குக் கட்டைகளைக் குத்தி அணையின் ஆன்மாவை துள்ளத்துடிக்க வைத்திருக்கிறார்கள். மேலும் எச்சில் இலைகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் சரக்கு பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. கிட்டத்தட்ட 10 நாட்கள் நடந்த செட்டிங் பணியிலேயே 60 சதவிகிதம் அந்த அணை ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. இந்த அத்துமீறலுக்கு சுற்றியிருக்கும் விவசாயிகள் தொடக்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால், பெரிய இடத்து பையனின் தயாரிப்பு என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது ஒருபுறமிருக்க, கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் சாலையின் இடதுபுறம் சற்றே உள்வாங்கி இருக்கிறது அனுவாவி சுப்பிரமணியர் கோயில். இந்த மலைக்கோயிலின் அடிவாரத்தில் இரண்டு நாட்களாக புதுமுகங்கள் நடிக்கும் 'மருதவேலு’ என்ற சினிமாவுக்கான ஷூட்டிங் எந்த முன் அனுமதியும் இல்லாமல் நடந்திருக்கிறது. அரைகுறை ஆடையுடன் கவர்ச்சிகரமாக குத்தாட்ட பாடலுக்கு ஆடி இருக்கிறார்கள் பெண்கள். இதுவும் இந்தப் பகுதியில் பெரும் அதிருப்தியைக் கிளப்பி இருக்கிறது.

வனத் துறையோ, 'செட்டிங் அமைக்கப்பட்ட இடம் தமது துறைக்குச் சொந்தமான இடம் இல்லை. எனவே இதை நாங்கள் தடுக்க முடியாது. அதே நேரத்தில், ஷூட்டிங் டீம் அத்துமீற முயன்றால் கண்காணித்துத் தடுப்போம்’ என்கிறது.
No comments:
Post a Comment