Tuesday, March 1, 2011

ஓய்வு தரும் உற்சாகம்‏

ஓய்வு நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
- நன்றாக தூங்கிவிடுவேன்


- சினிமாவுக்குப் போவேன், டி.வி. பார்ப்பேன்

- நண்பர்களுடன் அரட்டை அடிப்பேன்

பெரும்பாலானவர்கள் இந்த மூன்றில் ஒரு பதிலைச் சொல்கிறார்கள்.

உழைத்துக் கொண்டிரு, ஓய்வு கொள்ளாதே' என்றுதான் பலரும் அறிவுரை வழங்குகிறார்கள். உண்மையில் உழைப்பிற்கு ஓய்வு எதிரியா? அகராதி சொல்லாத பொருளாக அப்படித்தான் பின்பற்றப்படுகிறது.

மனம் இயல்பாகவே ஓய்வைத் தான் ஆவலுடன் எதிர்பார்க்கும். ஆனால் ஓய்வு என்பது உழைப்பை நிறுத்துவது என்றும், உடலைப் புத்துணர்ச்சி பெறச் செய்வது என்றும் பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஓய்வு என்பது மனம் சம்பந்தமான விஷயம். மக்கள் எப்படி ஓய்வுப் பொழுதைக் கழிக்கிறார்கள், உண்மையில் ஓய்வை எப்படிக் கழிக்க வேண்டும்? ஓய்வை பயன்படுத்துவதால் ஏற்படும் உன்னத பலன்கள் என்ன? ஒரு அலசல்...

மனம் இளைப்பாறப் பயன்படுவது தான் உண்மையான ஓய்வாகும். மனம் இளைப்பாற வேண்டுமென்றால் அது சோர்வுறுமா? என்பது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்ட முடிவு என்னவென்றால், "உடல்தான் களைப்புறுகிறதே தவிர, மனம் எப்போதும் சக்தி இழப்பதில்லை'' என்பதுதான். சோர்வாக இருக்கிறோம் என்று நினைக்கும் வேளையில் நீங்களே வலிய வந்து ஒரு செயலைத் தொடங்கிப் பாருங்களேன். சோர்வு ஓடிப்போகும். அப்படியானால் அது விளக்கும் பாடம் என்ன? மனம் எப்போதும் சோர்வடைவதில்லை. எந்தச் செயலில் நமக்குப் பற்று இல்லையோ அதுவே நமக்கு சோர்வாக தோன்றுகிறது. நம் விருப்பத்தை அதிகப்படுத்திக் கொண்டால் சோர்வு ஏற்பட வழியே இல்லை. உண்மையில் மூளையின் (மனதின்) கட்டளையை ஏற்றுச் செயல்படும் அளவுக்கு உடலில் தெம்பில்லை என்பதுதான் நம்மால் சோர்வாக உணரப்படுகிறது.

ஓய்வு எப்படிக் கழிகிறது...
விஞ்ஞான வளர்ச்சியால் இன்றைய காலத்தில் பெரும்பாலான வேலைகளை எந்திரங்களே செய்து முடித்து விடுகின்றன. இதனால் மனிதர்களுக்கு ஓய்வு நேரம் அதிகமாகி இருக்கிறது. அதேபோல் ஓய்வைக் கழிப்பதற்கும் அனேக வழிகள், வசதிகள் இருக்கின்றன. சிலர் ஓய்வு நேரத்தில் வழக்கமான பொருளீட்டும் வேலையைத் தவிர்த்து மற்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இன்னும் சிலர் ஓய்வு நேரத்தையும் காசாக்கும் வேலையில் இறங்கி விடுகிறார்கள். இந்த இரண்டுமே ஓய்வைக் கெடுக்கும் செயல்களாகும்.

மகிழ்ச்சியாக இருப்பதை விட வேறு எதையும் மனிதன் வாழ்வில் விரும்புவதில்லை. மகிழ்ச்சியாக ஓய்வை அனுபவிப்பதிலும் மக்கள் இருகூறாகப் பிரிந்து கிடக்கிறார்கள். ஏழை-பணக்காரன் என்பது தான் அந்தக்கூறு. இவர்களில் பணம் படைத்தவர்களுக்கு அதிகம் ஓய்வு கிடைக்கிறது. ஓய்வைக் கழிப்பதற்கும் அவர்களுக்கு நிறைய வசதிகள் இருக்கிறது. கார்-பைக்கில் பறக்கிறார்கள். சினிமாவுக்குப் போகிறார்கள். சுற்றுலா செல்கிறார்கள். கச்சேரிகள், கூட்டங்கள் என பல வழிகளில் பொழுதை உல்லாசமாகக் கழிக்கிறார்கள்.

ஆனால் ஏழைகளுக்கு ஓய்வும் குறைவு. ஓய்வை அனுபவிக்கும் வசதிகளும் குறைவு. இவர்கள் பெரும்பாலும் டி.வி. பார்ப்பதில் பொழுதைக் கழித்து விடுகிறார்கள். பூங்காக்களுக்குச் செல்வது, கோவிலுக்குச் செல்வதோடு இவர்களது ஓய்வுப் பொழுது கரைந்து விடுகிறது.

ஓய்வைக் கொண்டாடும் வழிகள்
இன்னிசைக் கச்சேரி பார்ப்பது, பாட்டுக் கேட்பது, இசை நிகழ்ச்சியை ரசிப்பது என்று சிலர் ஓய்வுப் பொழுதைக்  கழிக்கிறார்கள். சுற்றுலா செல்வதை சிலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சினிமா பார்ப்பது, டி.வி. பார்ப்பது என்று பொழுது போக்குபவர்கள் ஏராளம். இன்னும் சிலர் கொஞ்ச நேரம் ஓய்வு கிடைத்தாலும் படுக்கையில் முடங்கி குறட்டை விடத் தொடங்கி விடுகிறார்கள். இவைதான் உண்மையிலேயே பொழுதுபோக்கென்று நம்புபவர்கள் தான் ஏராளம். இவையெல்லாம் ஓய்வைக் கழிக்கும் சில வழிகளே தவிர, ஓய்வை அனுபவிக்கும் முழுமையான வழிகளல்ல. மனதை மறுமலர்ச்சி பெறச் செய்வதுதான் பொழுதுபோக்கு.

மேற்கண்ட வழிகளில் பொழுது போக்கும் போது சிலர் மகிழ்ச்சி அடையத்தானே செய்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் உங்கள் பங்கு ஒன்றுமே இல்லையே. வெறும் பார்வையாளர்கள் தானே நீங்கள். ரசிப்பது மட்டும் மகிழ்ச்சியில்லையே. லயித்திருப்பதில்தானே உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உண்மையான மகிழ்ச்சியும், ஓய்வை அனுபவித்த திருப்தியும் வேண்டுமானால் நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிகள் இவைதான்...

* நீங்கள் இசையைக் கேட்டவுடன் இன்பம் உணர்பவர்கள் என்றால் அந்த இசையை உருவாக்கும் முயற்சியில் இறங்கிப் பாருங்கள் இன்னும் அதிகமாக இன்பத்தில் மிதப்பீர்கள். கூடவே இசையைக் கற்றுக் கொண்ட மகிழ்ச்சியும், புதிய இசையை உருவாக்கும் எண்ணமும் வரும். இது வாழ்வையே புதுமையாக்கும். ஆம்.. இனியாவது வயலின், மவுத்ஆர்கான் இசையை ரசிப்பதைவிட வாசிக்கக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

* பாடல்களை கேட்பதற்குப் பதிலாக பாடல்களைப் பாடுங்கள். ஆடல் காட்சிகளைப் பார்ப்பதை விட நீங்களே ஆடி மகிழுங்கள். உங்களுக்கு ரசனையானதை மட்டுமே பாருங்கள், கேளுங்கள், ரசியுங்கள்.

* சுற்றுலா செல்வதும், புத்தகங்கள் வாசிப்பதும் நல்ல பழக்கம்தான். அத்துடன் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதைப்பற்றிய ஆழமான விஷயங்களை சேகரித்து எழுதுவது சிந்தனையை சரியான திசையில் செலுத்தும் வழியாகும்.

* சிலர் ஓய்வு நேரத்தை சும்மா இருந்து கழிக்கிறார்கள். சும்மா இருந்தால் மனம் அலை பாயத்தான் செய்யும். இதனால் பழுதுகள் ஏற்படுமே தவிர, மனம் வலிவு பெறாது.

* செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது, அஞ்சல் வில்லை, நாணயம், விதவிதமான பொருட்கள் சேகரிப்பது என்பது மிகச் சிறந்த செயல்களாகும். மீன்கள் வளர்ப்பது, கால் நடைகளை பராமரிப்பது, சமையல், நூல் நூற்றல், எம்ப்ராய்டரிங் கற்றுக் கொள்வது, ஓவியம் தீட்டுவது, சிற்பம் செதுக்குவது போன்றவையெல்லாம் மனதை ஈர்க்கும் வகையில் ஓய்வை கழிக்கப் பயன்படும் சிறந்த வழிகளாகும். இவற்றுக்கு தினமும் கொஞ்சம் நேரம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால் மனம் அலைபாய்வதைக் கட்டுப்படுத்தும்.
சமுதாய அமைதியில் ஓய்வின் பங்குஓய்வு என்பது மனிதனின் பொருளாதாரச் சிக்கல், சமூகத் தொல்லைகளை மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும். நகர்ப்புறங்களில் இருப்பது போன்ற பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் எல்லா ஊர்களுக்கும் அவசியம் தேவையாகும். இவை மக்கள் சந்திக்கும் இடங்களாகவும், ஓய்வைக் கழிக்கும் இடங்களாகவும் இருப்பதால் சமுதாய மறுமலர்ச்சி ஏற்படும். உறவு முறைகள் மேம்படும். மனிதனின் அறிவு நிலை வளர்ச்சி பெறும். குழந்தைகள் சிறுவயது முதலே இதுபோன்ற இடங்களில் சந்திக்கும் பழக்கம் ஏற்பட்டால் அவர்களின் பல்வேறு பரிமாணங்களும் வியக்கத்தக்க வகையில் மாறுதல் அடையும். மக்களுக்கு ஓய்வைக் கழிக்கச் சரியான வசதிகள் இருந்தால் மனம் தெளிவும், அமைதியும் பெறும். இதனால் அவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது கணிசமாகக் குறையும். சமுதாயத்தில் அமைதி நிலவ ஏதுவாகும். மக்கட்பண்பு பெருக உதவி செய்யும். மேலைநாடுகளில் இருப்பதுபோன்ற மக்களை ஒருங்கிணைக்கும் சங்கங்கள் (இளைஞர்கள், குழந்தைகள், மக்கள் சங்கம்) உருவாக்கப்பட வேண்டும். அவை அரசியல் சாராத அமைப்புகளாக இருப்பது மிகவும் அவசியம்.  

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...