Thursday, March 24, 2011

புதைகுழிக்குள்....சிபிஐ விசாரணை ?

புதைகுழிக்குள்....சிபிஐ விசாரணை ?

மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஸ்பெக்ட்ரம் விசாரணை, புதைகுழிக்குள் தள்ளப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

சிபிஐ ன் வரலாற்றை எடுத்துக் கொண்டால், முரண்பாடுகளும், அந்தர் பல்டிகளும் நிறைந்திருக்கும்.   பாரதீய ஜனதா கட்சி கூறுவது போல, சிபிஐ, சென்ட்ரல் ப்யூரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் என்பதை விட, காங்கிரஸ் ப்யூரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் என்ற அடைமொழிக்கேற்றவாறே செயல்பட்டு வந்திருக்கிறது.
பொய் வழக்குகளை போடுவதும், உண்மை வழக்குகளை மூடுவதும், சிபிஐக்கு கை வந்த கலை.   பிஜேபியின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமணனை லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து, இந்திய ராணுவம் ஆயுதம் வாங்குவதில் பல்லாண்டு காலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஆபரேஷன் வெஸ்ட் என்ட் என்ற ஸ்டிங் ஆபரேஷனில் முக்கிய பங்கு வகித்த, குமார் பாதலை சிபிஐ எப்படி அலைகழித்தது என்பது தெரியாதா என்ன ? அன்று காலை சிபிஐ அவரை வீட்டுக்கு வந்து கைது செய்த போது அவரது மனைவி இரண்டு மாத கர்ப்பிணி. .இப்படி...





இப்படி பொய் வழக்கு போட்ட அதே சிபிஐ, இந்திய மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்துச் சென்ற ஒத்தாவியோ கொட்டரோச்சி, அந்தோனியோ மொய்னோவின் குடும்ப நண்பர் என்ற ஒரே காரணத்துக்காக அவரை தப்பிக்க விட்டதுமில்லாமல், பணத்தை எடுத்துச் செல்லவும் சிபிஐ அனுமதிக்கவில்லையா ?

இப்போது, சிபிஐ தனக்கு எப்போதும் கைவந்த கலையை மீண்டும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் செய்யத் தொடங்கியிருக்கிறது. ஊழலுக்கெல்லாம் தலைமை ஊழல் என்று அழைக்கப் படும் ஸ்பெக்ட்ரம் ஊழல், இந்தியாவின் மனசாட்சியை உலுக்கியது. மக்களை பதைபதைக்க வைத்தது. இந்த ஊழலிலும், ப்ரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காவிட்டால், எப்ஐஆர் போட்டு விட்டு 15 மாதங்கள் உறங்கிய சிபிஐ விழித்திருக்கவே இருக்காது. ஸ்பெக்ட்ரம் விசாரணையும், படு பாதாளத்தில் புதைக்கப் பட்டிருக்கும்.

உச்சநீதிமன்றம் எத்தனை கண்டனங்களை தெரிவித்தாலும் சரி, பத்திரிக்கைகளில் பத்தி பத்தியாக எழுதினாலும் சரி, ஆட்சி அதிகாரத்தில் உள்ள மேட்டுக் குடி வர்க்கத்தினர் தவறு செய்தால், அவர்களை சிபிஐ, பத்திரமாக காப்பாற்றும் என்ற கூற்று நிரூபிக்கப் படும் என்றுதான் தோன்றுகிறது.

ஸ்பெக்ட்ரம். பயனீர் நாளேடு, இந்த ஊழலை அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் தினம் தினம் வெளியிட்ட போது, மக்கள் அதிர்ச்சியானார்கள். எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திலும், வீதிகளிலும் கேள்விகள் எழுப்பின.   வேறு வழியின்றி சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்தது. ஆனால் அந்த முதல் தகவல் அறிக்கையிலும், யாரென்ற அடையாளம் தெரியாத சில அதிகாரிகள் என்று குற்றவாளிகளுக்கான இடத்தில் பதிவு செய்தது சிபிஐ. ஆ.ராசா இந்த ஊழலில் வகித்த பங்கு பற்றி, ஊருக்கே தெரிந்திருந்தும், சிபிஐக்கு மட்டும் தெரியாமல் போனது வினோதமே..

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, உறக்கத்தில் இருந்த சிபிஐ திடீரென்று தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்தில் சோதனைகளை நடத்தியது. இந்த சோதனைகள் நடத்திய போது, இவ்வழக்கின் முதன்மைக் குற்றவாளியான ஆண்டிமுத்து ராசா, அந்த தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சர் என்பதுதான் வேதனை.

ராசாவின் அமைச்சகத்திலேயே சிபிஐ சோதனை நடத்தியும், முத்துவேல் கருணாநிதி, ராசா குற்றமற்றவர் என்று சாதித்தார். ஆண்டிமுத்து ராசாவோ, ஸ்பெக்ட்ரம் ஏலத்தால், அரசுக்கு லாபம் என்றார். ஏழைகளுக்கு செல்போனை கொடுத்தேன் என்றார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒரு ரூபாய் அரிசி 3ஜி ஸ்பெக்ட்ரம் பாசுமதி அரிசி என்றார் அனைத்தும் மன்மோகனுக்கு தெரிவிக்கப் பட்டுதான் முடிவெடுக்கப் பட்டது என்றார் மன்மோகனோ, மவுனச் சாமியாராக அமர்ந்திருந்தார்.

ஊடகங்கள் பக்கம் பக்கமாய் ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி எழுதின ஆனால் ராசாவோ, தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக உட்கார்ந்து கொண்டு, விழாக்களில் பங்கெடுத்துக் கொண்டு, டெக்னாலஜி பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார்.   இந்த நிலையில் தான் நீரா ராடியாவின் உரையாடல்கள் வெளியாகின. அவுட்லுக் இணையதளமும், ஓபன் வார இதழும் இந்த உரையாடல்களை பதிப்பித்த போது, ராசாவின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறியது. அமைச்சராவதற்காக, நீரா ராடியாவை தொடர்பு கொண்டு, ராசா பேசியதும், ராசாவுக்காக ராணி மன்னிக்கவும், கனிமொழி பேசியதும் வெளியானது.   அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதை, நீரா ராடியா போன்ற ஒரு தரகர் முடிவு செய்தது தெரிய வந்ததும், மன்மோகன் ஒரு பொம்மை பிரதமர் என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.
  
உச்சநீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் பற்றிய பொதுநல வழக்கு விசாரணை வந்ததும் தான் வழக்கு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியது. எஃப்ஐர் பதிவு செய்து 15 மாதங்கள் கழித்து, சம்பந்தப் பட்ட அனைவரும், தடயங்களை அழிக்க போதுமான அவகாசம் கொடுத்த பின், சிபிஐ 2010ல் சோதனைகளை நடத்தியது. இந்தச் சோதனைகளை பிஜேபி TOO LITTLE AND TOO LATE என்று வர்ணித்தது.   மொத்த தேசமும், சிபிஐ சோதனைகளை கண்துடைப்பாகவே கருதியது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் கவனமான கண்காணிப்பால், விசாரணை சரியான திசையிலேயே நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது.
 சோதனைகளைத் தொடர்ந்து, பல கைதுகள் நடந்தன. ராசா, பெஹுரா, சந்தோலியா என்று பல்வேறு கைதுகள் தொடர்ந்தன. ஆனால், திமுகவோ, இறுமாப்பாக மாவட்டந்தோறும், ஆண்டிமுத்து ராசாவுக்கு ஆதரவாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று கூட்டங்கள் நடத்தியது. இது பத்தாது என்று, குருமாராஜ் தனது நண்பரை காப்பாற்றுவதற்காக, ஊடகப் பேரவை, தமிழ் சிமிழ் என்ற பெயரில், எச்சில் சோற்றுக்கு அலையும் காகங்களான, சுபவீரபாண்டியன், குஞ்சாமணி போன்றவர்களை வைத்து ஸ்பெக்ட்ரம் விசாரணையே பார்ப்பன சதி என்று ஜல்லியடித்தார்கள். ஆனால், கருணாநிதியைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், ராசாவுக்கு கருணாநிதி அளிக்கும் ஆதரவு, ஒரு அளவுக்கு தான். அதற்கு மேல், கருணாநிதி தனது மனைவியாக இருந்தாலும் காவு கொடுக்கத் தயங்க மாட்டார் என்றுதான் கருதினார்கள்.. அதுதான் நடந்தது ராசா விவகாரத்திலும்.

கருணாநிதியின் ராசா ஆதரவு நாடகம் கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் 214 கோடி ரூபாய் கடன் கொடுத்தது என்ற செய்தி வெளிவரும் வரைக்கும் தான். அது வரை ராசாவை தகத்தகாய கதிரவன் என்று பாராட்டி எழுதிக் கொண்டிருந்த கருணாநிதி, அமைதியானார். கலைஞர் டிவி விவகாரம், தனது குடும்பத்திற்கு பெரும் சிக்கலை இழுத்து விடும் என்பதை உணர்ந்த கருணாநிதி, சோனியா காலில் விழத் தயாரானார்.   ஆனாலும், ஜாபர் சேட் கலைஞர் டிவி விவகாரம் பெரிய அளவில் பிரச்சினையை உண்டு பண்ணாது என்று அளித்த தைரியத்தில் இருந்த போதுதான், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில், சிபிஐ கலைஞர் டிவிக்கு கொடுத்த ஊழல் பணத்தைப் பற்றி குறிப்பிட்டது.
  
 ஆனால், கருணாநிதி பனங்காட்டு நரியாயிற்றே.   உடனடியாக கலைஞர் டிவி எம்டி சரத்குமாரை வைத்து, அறிக்கை வெளியிடச் செய்தார். அந்த அறிக்கையில், கலைஞர் டிவி, டிபி ரியாலிட்டிஸின் துணை நிறுவனமான சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து, 216 கோடியை கடனாகத்தான் பெற்றது, அந்தத் தொகையும் 31 கோடி ரூபாய் வட்டியோடு திருப்பி கொடுக்கப் பட்டது என்று ஒரு பெரிய கதையை அறிக்கையாக வெளியிட வைத்தார்.
ஆனால், சரத் குமார் தனது அறிக்கையில் வசதியாக வெளியிட மறந்த விஷயம், எப்போது அந்த கடன் திருப்பி அளிக்கப் பட்டது என்பதுதான்.

 கருணாநிதி, சோனியாவிடம் கெஞ்சிய கெஞ்சல்களும், பலன் அளிக்கத் தான் செய்தன.
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் விதித்திருந்த கெடு நெருக்கத்தில் வந்ததால், எவ்வளவு போலியாக இருந்தாலும், ஒரு ரெய்டு நடத்தியே காட்ட வேண்டும் என்ற கட்டாயத்தில், சிபிஐ நடத்தியது. அந்தச் சோதனைகள், பதின்பருவத்தில் இருக்கும் சிறுவன், விலைமகளிர் வீட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைவது போல, நள்ளிரவில் பத்திரிக்கையாளர்கள் ஒருவருக்கும் தெரியாமல், ரகசியமாக நடந்தது. நள்ளிரவில் தொடங்கிய சோதனை விடியற்காலையில் ஒருவருக்கும் தெரியாமல் முடிக்கப் பட்டது. இந்த சோதனையை நடத்துவதற்கு முன்னதாகவே, கருணாநிதிக்கு தெரியப்படுத்த சிபிஐ மறக்கவில்லை என்பது கூடுதல் செய்தி.

அடுத்து கனிமொழியும், தயாளு அம்மாளும் எப்போது விசாரிக்கப் படப்போகிறார்கள் என்ற கேள்வியை ஊடகங்களும் மக்களும் எழுப்பினார்கள்.   அந்தக் கேள்விக்கு விடை தருவது போலவும், உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வருகையில், உச்சநீதிமன்றத்தின் கண்ணில் மண்ணைத் தூவுவதற்காகவும் கனிமொழியும் தயாளுவும், சிபிஐ ஆல் விசாரிக்கப் பட்டார்கள்.

ஆனால், இந்த விசாரணை நடைபெற்ற விதம்தான் மிகுந்த ஐயங்களை எழுப்பியது.   வழக்கமாக மற்றவர்களை விசாரிப்பது போல, சிபிஐ விசாரிக்கவில்லை. இவர்கள் இருவரையும் விசாரிக்க வேண்டும் என்றும், விசாரிக்காவிட்டால், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதையும் விளக்கி கருணாநிதியிடம் அனுமதி பெற்று விட்டு, இடத்தையும், நேரத்தையும், கருணாநிதியே தேர்ந்தெடுக்கும் படி சிபிஐ கேட்டுக் கொண்டது.

அதன் படி கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலம் நூலகத்தை தேர்ந்தெடுத்தார். அன்று அறிவாலயத்தில், திமுக சார்பில் போட்டியிட விண்ணப்பம் கொடுக்க வந்தோரின் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் பத்திரிக்கையாளர்கள் அனைவரும், பேச்சுவார்த்தை நடத்தும் காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழுவின் வருகையை எதிர்ப்பார்த்து காத்துக் கிடப்பார்கள். யாருக்கும் தெரியாமல், இவர்கள் இருவரையும் விசாரணைக்குப் பிறகு அழைத்துச் செல்லலாம் என்று திட்டமிட்டு, இதை மிக ரகசியமாக வைத்திருந்தார்கள்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டல்லவா ?   விசாரணை அன்று காலை 6.45 மணிக்கு இந்த இடத்தில் தான் விசாரணை நடைபெறப் போகிறது என்று, சவுக்கு முக்கிய பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பியது. விஷயத்தை கேள்விப் பட்ட பத்திரிக்கையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் என 200 பேர் குழுமினர். இந்த பத்திரிக்கையாளர்களின் வருகை, அவர்களை மிகவும் எரிச்சலடையச் செய்தது.

காங்கிரஸ் திமுக இடையே, தொகுதி பங்கீடு, சுமூகமாக முடிந்து விட்ட நிலையில், ஒன்றாக தேர்தலில் இரு கட்சிகளும் போராடும் நிலையில், ஸ்பெக்ட்ரம் விசாரணையை புதைகுழிக்குள் தள்ள, முயற்சிகள் நடந்து வருவதாகத் தெரிகிறது.

மிக முக்கிய இடத்திலிருந்து வரும் தகவல்கள், கலைஞர் டிவி 214 கோடி கடனை ஆண்டிமுத்து ராசாவின் கைதுக்குப் பிறகே திருப்பிக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இவ்வாறு கடனை திருப்பி அளித்ததற்காக கொடுக்கப் பட்ட பணம் எங்கிருந்து வந்தது என்பதுதான் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சிபிஐ விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியதும், கலைஞர் டிவி விவகாரம் வெடித்து எப்படியும் தன்னை நெருக்கும் என்பதை கருணா உணர்ந்தார்.   உடனடியாக தனது தலைமைத் தரகரை களத்தில் இறக்குகிறார். தலைமைத் தரகர் என்றதும் யார் என்று யோசிக்காதீர்கள். நமது ஒட்டக் கூத்தர் தான்.

ஒட்டக் கூத்தரும், வோல்டாஸ் கட்டிடத்தையும், ஊட்டி வின்ட்ஸர் எஸ்டெட்டையும் கனிமொழிக்காக தனது பெயரில் வாங்கி அடைகாத்து வரும் மர்ம மனிதரான டாக்டர் சண்முகநாதனும், இந்தியா சிமென்ட்ஸ் அதிபர் என்.சீனிவாசன் மற்றும் செட்டிநாடு சிமென்ட்சின் உரிமையாளர் எம்ஏஎம்.ராமசாமியை, கையில் திருவோட்டோடு சந்தித்திருக்கிறார்கள்.  

இவர்கள் இருவரும் கலைஞர் டிவியின் மொத்தக் கடனையும் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்கள். இதற்கு கைமாறாக, கலைஞர் டிவியில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செட்டிநாடு சிமென்ட்சின் விளம்பரங்கள் கலைஞர் டிவியில் வருவதாக ஒப்பந்தமாம் (கலைஞர்டிவியமூடப்போறாங்கன் னு,எழுதுனத சீனுபடிக்கலயோ?) 
இந்த ஆண்டு சென்னை சங்கமம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால் விளம்பரதாரர்கள் ஸ்பான்சர் செய்வதை தடுத்த போதும், செட்டிநாடு சிமென்ட்சும், இந்தியா சிமென்ட்சும் சென்னை சங்கமத்திற்கு ஸ்பான்சர் செய்ததை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு இவர்கள் இருவரும் கலைஞர் டிவியின் கடனை அடைத்த விவகாரம், அதிர்ச்சி என்றால் சிபிஐ அதிகாரிகளுக்குத் தெரியாதா என்ன ? தெரியும் தான்..   ஆனால், இவர்கள் இருவருக்கும் வழங்கப்படுவதாக இருந்த சம்மன், கடைசி நேரத்தில் நிறுத்தப் பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிகிறது.

இப்போது அடுத்த கட்ட அதிர்ச்சியாக, ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை ஆ.ராசாவோடு முடிந்து விடும் என்ற தகவலும் வந்திருக்கிறது.   ராசா மீது, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற்கு உள்துறை அமைச்சகத்தின் எதிர்ப்பையும் மீறி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததற்காக தேசத்துரோக குற்றச் சாட்டுகள் சுமத்தப்படும் என்ற செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், தனது குடும்ப உறுப்பினர்களை காப்பாற்றுவதற்காக, கருணாநிதி ஆ.ராசாவை கோவில் திருவிழாவில் ஆடு போல வெட்டுவதற்கு தயாராகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த விவகாரத்தில் முழு மூச்சாக இறங்கியிருக்கும் டாக்டர் சுப்ரமணிய சுவாமியும், ராசாவைத் தாண்டி, இவ்விவகாரத்தை கிளராத வண்ணம் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் மூலமாக சரிசெய்யப் பட்டதாக தகவல் தெரிகிறது. தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானது அல்லவா ?
உச்ச நீதிமன்றம் தலையிட்டும் கூட, பல்வேறு வழக்குகளை வசதியாக புதைகுழிக்குள் தள்ளிய அனுபவம் உள்ள சிபிஐ, இந்த வழக்கையும் புதைகுழிக்குள் தள்ள மேற்கொள்ளும் முயற்சிகள், ஆண்டிமுத்து ராசாவை நிரந்தரமாக சிறைக்குள் வைக்கும். கருணாநிதி குடும்பத்தினரை பத்திரமாக வாழ வைக்கும்.
 

சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். அதுவே எங்களை ஊக்கப் படுத்தும். அநானிகளும், வரவேற்கப் படுகிறார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...