சென்னைக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கொஞ்ச நாளாகவே ஒத்து வரவில்லை. இவர் முன்பு தனது ஆட்சியில் சென்னையில் ஒரு இடத்தில் புதிதாக தலைமைச் செயலகம் கட்ட முயன்றார். ஏகப்பட்ட தடைகள். எதிர்ப்புக் குரல்கள். அவர் செய்ய எண்ணியதை கருணாநிதி முடித்துக் கொண்டார். இப்போது ஜெயலலிதா சிறிது இடைவெளிக்குப் பின்பு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்.. தனி மெஜாரிட்டி இருந்தாலும், சென்னையில் எந்த காரியம் தொடங்கி னாலும், கோர்ட் அது இது என்று இழுத்துக் கொண்டு போகிறது.
சென்ற முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ராணிமேரிக் கல்லூரியின் இடத்தை தேர்ந்தெடுக்காமல், வேறொரு இடத்தை தேர்ந்தெடுத்து இருந்தால், தலைமைச் செயலகத்திற்கு இவரது காலத்திலேயே புதிய கட்டிடம் உருவாகி இருக்கும். அப்போது பிரச்சினை என்று வந்தபோது மற்ற மாவட்ட மக்கள் நமக்கென்ன என்று இருந்து விட்டார்கள். இவரை ஆதரித்து அப்போது யாரும் குரல் கொடுக்கவில்லை. ஏனெனில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சென்னைக்கே முதலிடம் தருகின்றனர். சென்னை நகருக்கு மட்டுமே புதிய சாலைகள்,புதிய பேருந்துகள், புதிது புதிதாக மேம்பாலங்கள். மெட்ரோ ரயில், பெரிய நூலகங்கள், துணை நகரத் திட்டங்கள், பூங்காக்கள் என்று சென்னைக்கே அள்ளித் தந்தனர். சென்னையை மட்டுமே முதன்மை படுத்தினார்கள். மற்ற மாவட்ட மக்களுக்கு கிள்ளி கூட தரவில்லை. இன்னும் மற்ற மாவட்டங்களில் உள்ள சாலைகளும், பாலங்களும், குடிநீர்த் தொட்டிகளும், ஆண்டுக் கணக்கில் பராமரிப்பு கூட இல்லாமல் இருக்கின்றன. காவிரிக் கரையில் உள்ள திருச்சி போன்ற நகரங்களில் உள்ள மக்கள் இன்னும் தண்ணீர் தேடி குடங்களோடு அலைகின்ற சூழ்நிலை.
எனவே முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தி.மு.க ஆட்சி போன்று சென்னைக்கு மட்டுமே முதலிடம் தராமல் மற்ற மாவட்ட மக்களுக்கும் புதிய திட்டங்களை உருவாக்கினால் சரித்திரத்தில் அவர் பெயர் நிற்கும். அதற்கு முன்னோடியாக தமிழகத்தின் நடுவில் இருக்கும் அவரது தொகுதியான ஸ்ரீரங்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டினால் முதல்வர் ஜெயலலிதா பெயர் சொல்லும். யாரும் எதிர்த்து பேச முடியாது. ஸ்ரீரங்கமும் சுற்றியுள்ள இடங்களும் வளர்ச்சி பெறும். மற்ற மாவட்டங்களில் சில புதிய அலுவலகங்களை தொடங்கலாம். அனைத்து மாவட்ட மக்களும் பயனடை வார்கள். எதற்கெடுத்தாலும் சென்னையிலேயே எல்லோரும் குவிய வேண்டியதில்லை. செய்வாரா?
No comments:
Post a Comment