பிளாஸ்டிக் பைகள் அவ்வளவாக அறிமுகம் ஆகாத சமயம். மளிகைக் கடைகள் முதல் சிறிய கடைகள் வரை பொருட்களை பேப்பரில்தான் கட்டி கொடுப்பார்கள். தள்ளு வண்டிக்காரரிடம் திராட்சைப் பழம் வாங்கச் சென்றால், பழைய பேப்பர் கடையில் வாங்கிய மிகவும் மெல்லிதான டைப்ரைட்டிங் பேப்பரில் எடை போட்டு நூலில் கட்டிக் கொடுப்பார். பெரும்பாலும் நூல் ரோஸ் கலரில்தான் இருக்கும். அதேபோல மளிகைக் கடைகளிலும் எண்ணெய்ப் பொருட்களைத் தவிர எல்லா பொருட்களையும் பழைய செய்தித்தாளில் பொட்டலம் போட்டு சணல் கயிற்றால் கட்டிக் கொடுப்பார்கள். பொருட்கள் வாங்குபவர் கூடையையோ அல்லது பையையோ எடுத்துச் சென்று வாங்கி வருவார். இது அப்போதைய நடைமுறை.
இந்தியாவிலேயே முதன் முறையாக, கடலூரைச் சேர்ந்த டாக்டர் C.K. ராஜ்குமார் என்பவர் வெல்வெட் ஷாம்பூ என்ற நிறுவனத்தை தொடங்கி, 1979 – வாக்கில் தலைக்கு போடும் ஷாம்பூவை ஷாஷேயில் (சிறிய பிளாஸ்டிக் பையில்) விற்கத் தொடங்கினார்.. பெரிய கடை முதல் சாதாரண பெட்டிக் கடை வரை விற்பனை. புதிய உத்தியின் காரணமாக நல்ல வியாபாரம். பெரிய பாட்டில்களில் அடைத்து வைக்கப் பட்ட விலை அதிகமான பிரபலமான நிறுவனங்களின் ஷாம்பூ வியாபாரம் தேங்க ஆரம்பித்தது. பார்த்தார்கள் பெரிய கம்பெனி முதலாளிகள், ஷாம்பூ, ஹேர்டை மட்டுமல்லாது எல்லா பொருட்களையுமே (எண்ணெய் உட்பட) பிளாஸ்டிக் பையில் கம்பெனி பெயரோடு விற்கத் தொடங்கினார்கள். கடைகளிலும் பிளாஸ்டிக் தூக்குப் பையை (Carry Bag) அவர்கள் பங்கிற்கு இலவசமாக கொடுத்தார்கள். இந்த நடைமுறை மக்களுக்கு வசதியாகவும் பிடித்தும் போயிற்று.
ஆனால் இப்போது இத்தனை ஆண்டிற்குப் பிறகு, திடீரென்று பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கொடி பிடிக்கிறார்கள். இவ்வளவு தூரம் பயன்பாட்டிற்கு வந்த பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருள் ஏதேனும் கண்டு பிடித்தார்களா என்றால் இல்லை. பிளாஸ்டிக் பையில் இப்போதும் அடைத்து விற்கப்படும் பொருட்களை தடை செய்யவும் இல்லை. பிளாஸ்டிக் தூக்குப் பைகளையும் சின்ன குவளைகளையும் மட்டுமே தடை செய்கிறார்கள். பாதிக்கப்படுவது சிறுவியாபாரிகளும் பொதுமக்களும்தான். இதுதான் சாக்கென்று சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் மால் நடத்துபவர்களும் இதுவரை இலவசமாக கொடுத்து வந்த பிளாஸ்டிக் தூக்கு பைகளுக்கும் விலை வைத்து காசு பார்க்க ஆரம்பித்து விட்டனர். பிளாஸ்டிக் ஒழிப்பு என்றால், காசுக்கு மட்டும் பிளாஸ்டிக் தூக்கு பையை விற்பது சரியா? அதிகாரிகள் திடீர் ரெய்டு என்ற பெயரில் சிறு வியாபாரிகளை தொந்தரவு செய்வார்கள். பெரிய நிறுவனங்கள் பக்கம் எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. வழக்கம் போல பள்ளி மாணவர்களை வைத்து பிளாஸ்டிக் எதிர்ப்பு ஊர்வலம். பின்னர் போட்டோவுடன் செய்தி தருகிறார்கள்.
பிளாஸ்டிக் நல்லது இல்லை என்றால் அதற்கு மாற்று கண்டு பிடிக்க வேண்டும். அல்லது பயன்படுத்தப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாற்று சூழலுக்கு பயன்படுத்த வேண்டும். ஊராட்சி நகராட்சிகளில் அள்ள வேண்டிய குப்பைகளை அள்ளி, துப்புரவு பணிகளை தினமும் ஒழுங்காகச் செய்தாலே போதும். அதை விட்டுவிட்டு பொதுமக்களுக்கு சமூக சேவை என்ற பெயரில் இம்சைதான் நடக்கிறது.
No comments:
Post a Comment