Thursday, February 4, 2021

சசிகலா ஆதரவாளர்கள் களையெடுப்பு கதவடைப்பு!.

 'சசிகலாவுக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும், கட்சியில் இடமில்லை' என, கதவடைப்பு செய்யும் விதமாக, அ.தி.மு.க.,வில் ஆங்காங்கே தலைதுாக்கும், அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக களையெடுக்கப்பட்டு வருகின்றனர். மதில் மேல் பூனையாக இருக்கும், 'ஸ்லீப்பர் செல்' நபர்களை முடக்கவும், தினகரன் ஆட்களை இழுக்கவும், அ.ம.மு.க.,வில் இருந்து

வந்தவர்களுக்கு, கட்சி பதவிகள் வாரி வழங்கப்பட்டு வருகின்றன.

ஜெயலலிதா மறைந்ததும், சசிகலா, அ.தி.மு.க., பொதுச்செயலரானார். முதல்வர் பதவியில் இருந்து, பன்னீர்செல்வத்தை துாக்கி விட்டு, அப்பதவியில் அமர முயற்சித்தார். பதவி இழந்த பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார். அதையடுத்து, அ.தி.மு.க., உடைந்து, பன்னீர் அணி உருவானது.இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது; இ.பி.எஸ்., முதல்வரானார்.


தனி கட்சி



சசிகலா சிறைக்கு சென்றதும், பிரிந்திருந்த ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., இணைந்தனர். பொதுக்குழுவை கூட்டி, சசிகலாவை பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கினர். துணை பொதுச்செயலராக இருந்த தினகரன், கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். பொதுச்செயலர் பதவிக்கு பதிலாக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ்., உள்ளனர். இவர்கள் தலைமையில், அ.தி.மு.க.,வும், அரசும் செயல்படுகிறது. அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், அ.ம.மு.க., என்ற, தனி கட்சியை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் அதில் இணைந்த பலரும், தற்போது அங்கு இல்லை; அடைக்கலம் தேடி, அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் போய் விட்டனர்.


முற்றுப்புள்ளி



இந்நிலையில், 27ம் தேதி, சசிகலா விடுதலையானார்; வரும், 8ம் தேதி, சென்னை வருகிறார். அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்து, ஒட்டுமொத்த அ.தி.மு.க.,வே சசிகலா பக்கம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, தினகரனும், அ.ம.மு.க.,வினரும் முயற்சிகள் மேற்கொண்டு உள்ளனர்.'சசிகலா வந்ததும், பல அமைச்சர்கள், அவர் பக்கம் வந்து விடுவர். கட்சி முழுமையாக, அவர் கட்டுப்பாட்டில் வரும். அ.ம.மு.க., - அ.தி.மு.க., இணைக்கப்படும்' என, சசிகலா தரப்பினர், தகவல் பரப்பி வருகின்றனர்.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'சசிகலா மற்றும் அவரது தரப்பினரை, அ.தி.மு.க.,வில் இணைக்க, 100 சதவீதம் வாய்ப்பில்லை' என, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

எனினும், சில அமைச்சர்கள் மவுனம் காக்கின்றனர். அவர்களின் ஆதரவு நிர்வாகிகளும், 'ஸ்லீப்பர் செல்' பிரிவாக செயல்படுகின்றனர்.அவர்களில் சிலர், சசிகலாவுக்கு ஆதரவாக, 'போஸ்டர்'கள் ஒட்டினர். அவர்கள், எந்த விசாரணையும் இன்றி, அதிரடியாக நீக்கப்பட்டனர். இதன் வாயிலாக, 'ஸ்லீப்பர் செல்' நபர்களை முடக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.மேலும், சசிகலாவுக்கு, அ.தி.மு.க.,வில் இடமில்லை என்பதை, ஆணித்தரமாக தெரிவிக்கும் வகையில், நேற்று முன்தினம், அ.தி.மு.க., தலைமை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. அ.ம.மு.க.,வில் தீவிரமாக பணியாற்றி, அ.தி.மு.க.,விற்கு திரும்பிய, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் பச்சமால், அ.தி.மு.க., அமைப்பு செயலராக நியமிக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு, ஜெ., பேரவை இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சசிகலாவை சந்திக்க சென்ற, கர்நாடக மாநிலம், அ.தி.மு.க., செயலர் யுவராஜ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட, அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அ.ம.மு.க.,வில் இருந்து விலகிய, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் பாலு, செங்கப்படை ஊராட்சி தலைவர் ராமு, தாதாகுளம் ஊராட்சி தலைவர் தங்கம், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் கற்பூரசுந்தரபாண்டியன் உட்பட பத்து பேர், முதல்வரை சந்தித்து, அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.இது, சசிகலா விவகாரத்தில், அ.தி.மு.க., கதவடைப்பு செய்து விட்டதையே காட்டுகிறது என்கின்றனர், கட்சி நிர்வாகிகள்.

இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:சசிகலா ஆதரவு அமைச்சர்கள் சிலர், அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என நினைத்தாலும், முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை, கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதில், உறுதியாக உள்ளனர்.சசிகலா பக்கம் செல்லக்கூடும் என கூறப்பட்ட அமைச்சர்களும், நேற்று சட்டசபையில், 'இ.பி.எஸ்., தான் நிரந்தர முதல்வர்' என, புகழாரம் சூட்டியுள்ளனர். எனவே, கட்சி முழுமையாக, சசிகலா கட்டுப்பாட்டிற்கு செல்லும் என்பதெல்லாம் வதந்தி தான்.
பா.ஜ., - பா.ம.க., கூட்டணி முடிவாகும் நிலையில் உள்ளது. எனவே, சசிகலா வருகை, அ.தி.மு.க.,வில் சிறு சலசலப்புகளை ஏற்படுத்தலாம்; மாற்றத்தை ஏற்படுத்தாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


கொடி விவகாரம் சசிகலா மீது புகார்



'கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லாத சசிகலா, தன் காரில், அ.தி.மு.க., கொடியை பயன்படுத்தியது சட்ட விரோதம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., தரப்பில், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா, சிகிச்சைக்கு பின், பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள, சொகுசு பங்களாவில் தங்க, காரில் சென்றார். அந்த காரில், அ.தி.மு.க., கொடி கட்டப்பட்டிருந்தது. இது, சட்ட விரோதம் என, அ.தி.மு.க., தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர், நேற்று மாலை, சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில், சசிகலா மீது புகார் அளித்துள்ளனர்.
அதில், 'எங்கள் கட்சியுடன், எவ்வித தொடர்பும் இல்லாத சசிகலா, தன் காரில், அ.தி.மு.க., கொடியை பயன்படுத்தியது, சட்ட விரோதம். எங்கள் கட்சி கொடியை, அவர் பயன்படுத்துவது தொடரக் கூடாது. சசிகலா மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.


எங்களுக்குத் தான் இரட்டை இலை

புகார் குறித்து, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:
அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் இயங்கும், அ.தி.மு.க., தான் உண்மையானது. எங்களுக்குத் தான் இரட்டை இலை சின்னம் என, 2017 டிச., 23ல், தேர்தல் கமிஷன் தீர்ப்பு வழங்கி உள்ளது.இதை எதிர்த்து, சசிகலா, தினகரன் ஆகியோர், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இரண்டு நீதிமன்றங்களிலும், அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இவ்வழக்கு நடந்தபோதே, அதிலிருந்து, தினகரன் விடுவித்து கொண்டார். தனி கட்சியும் தொடங்கி விட்டார். இந்த இருவருக்கும், எங்கள் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
இவ்வாறு, அவர் கூறினார். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...