Sunday, October 21, 2012

21 ஆண்டுகளில் 40 முறை டிரான்ஸ்பர்: அரியானா ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் சோகம்


சண்டிகர்: நில மோசடிகளை அம்பலப்படுத்தியதற்காக கடந்த 21 ஆண்டுகளில் 40 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டதாகவும், தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வேண்டியும், அரியானா தலைமைச் செயலாளருக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநில மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி டாக்டர் அசோக் கெம்கா. இவர் சமீபத்தில் மாநில தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இக்கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அரியானா மாநிலத்தில் பல நூறு கோடி மதிப்பிலான கிராமப்புற நிலங்கள், ரியல் எஸ்டேட் ஜாம்பவான்களிடம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட நிலங்களுக்கு ரியல் எஸ்டேட் அதிபர்கள் கொடுத்த தொகை என்னவோ மிகவும் குறைவு என்று குறிப்பிட்டுள்ளார். மிக முக்கியமான நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் மிகக்குறைவான தொகைக்கு இந்த நிலங்கள் கைமாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதுகுறித்து தலைமைச் செயலாளர் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார். மேலும், இது போன்ற ஊழல்களை வெளிக்கொண்டு வரும் அரசு ஊழியர்கள் அடிக்கடி இட மாற்றம் செய்யப்படுவது தொடர்வதாக குறிப்பிட்டுள்ள அவர், இது போன்ற பல நிலமோசடிகளை வெளிக்கொண்டு வந்த தான், கடந்த 21 ஆண்டுகளில் 40 முறை இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். தன்னைப்போன்ற அதிகாரிகளை இனியும் மாநில அரசு இழிவுபடுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ள கெம்கா, தற்போதைய ஊழலை வெளிக்கொண்டு வந்ததற்காக தானும், தனது குடும்பத்தினரும் தாக்கப்படலாம் என்பதால், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் கோரிக்கை விடுத்துள்ளார். பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப்., மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா மருமகன் வதேரா இடையேயான பரிவர்த்தனையை அரவிந்த் கெஜ்ரிவால் வெளிக்கொண்டு வந்துள்ள நிலையில், தற்போது இது போன்ற ஏகப்பட்ட நிலமோசடிகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...