இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று காந்தி ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் தேசிய விடுமுறை தினங்களில் ஒன்றான (அக்.2) இத்தினம், ஐ.நாவினால் அனைத்துலக வன்முறையற்ற நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காந்தி தனது பிறந்த நாளக் கொண்டாடுவதற்கு எப்போதும் விரும்பியது இல்லை. ஆனால் அரசியல் தலைவர்கள் பலர் வற்புறுத்தியதால், ஏழை மக்களின் வாழ்வாதாரமான ராட்டை தினமாக தனது பிறந்த நாளை அவர் கொண்டாட சம்மதம் தெரிவித்துள்ளார்.
இன்று காந்தியின் 144வது பிறந்த தின விழாவாகும். இன்று காலை ஆளுனர் ரோசய்யா மற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி அடிகளின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். அத்துடன் காலை 10.15 மணியளவில் மெரினா கடற்கரை அருகே உலக அமைதியை வலியுறுத்தி மிதிவண்டி பேரணியும், 11.30 மணிக்கு காந்தி அடிகளின் வாழ்க்கை வரலாற்றினை விளக்கிடும் கண்காட்சி திறப்பு விழாவும் நடைபெறவுள்ளது.
காந்தியை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திராத சில தகவல்கள் :
சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக காந்தி குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும், வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார்.
1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இந்த சத்தியாகிரகமே பின்னாளில் இந்திய விடுதலைவரை அவருக்கு துணைநின்றது.
No comments:
Post a Comment