தமிழகத்தில் மின் நிலையை சீரமைக்க, அடுத்த மூன்றாண்டுகளில், சூரிய சக்தி மூலம் 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில், தமிழக சூரிய சக்தி மின் கொள்கையை, முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல மாநிலங்களில் தற்போது, மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. அனைத்து மாநிலங்களும் மின் பற்றாக்குறையைப் போக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதே நேரத்தில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.சூரிய ஒளி மின்சாரம், எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத, அதிகளவில் கிடைக்கக் கூடிய மாற்று எரிசக்தி. இந்தியாவில், கடந்த மாதம் வரை, 2.07 லட்சம் மெகாவாட், மின் உற்பத்தி திறனுக்கான அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.இதில், காற்று, பயோ மாஸ் மற்றும் சூரிய ஒளியில் இருந்து மட்டும், 20,162 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. வரும், 2022ம் ஆண்டில், சூரிய ஒளியில் இருந்து மட்டும், 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு, ஜவகர்லால் நேரு தேசிய சூரிய சக்தி திட்டத்தின் மூலம், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சூரிய சக்தி கொள்கை :
தமிழகத்தை பொறுத்தவரை, ஆண்டுக்கு 300 நாட்கள், தெளிவான சூரிய ஒளி கிடைத்து வருகிறது. சூரிய ஒளி மின்சாரத்தை உருவாக்க, தென் தமிழக பகுதிகள், நாட்டிலேயே மிகப் பொருத்தமான பகுதிகளாக விளங்குகின்றன. இதை கருத்தில் கொண்டும், தற்போது நிலவும் மின் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாகவும், சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்க, தமிழக அரசு, "தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை - 2012'யை உருவாக்கியுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கையை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில், சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்தல், பயன்படுத்துதல், ஊக்கத்தொகை தொடர்பான பல்வேறு சலுகைகள், கட்டுப்பாடுகளும் தெரிவிக்கப் பட்டுள்ளன.சூரிய சக்தி மூலம் அடுத்த மூன்றாண்டுகளில், ஆண்டுக்கு 1,000 மெகாவாட் வீதம், 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும், சூரிய சக்தி மின்சாரத்தை உருவாக்கும் முக்கிய பகுதியாக தமிழகத்தை உருவாக்குதல், உள்நாட்டிலேயே சூரிய சக்தி சாதனங்களை உருவாக்கும் வசதி, சூரிய சக்தி மின்சாரம் தொடர்பான, ஆய்வு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை இதன் முக்கிய நோக்கம்.
இழப்பு தவிர்ப்பு:
தமிழகத்தில், காற்றாலை மின்சாரத்தை சேமிப்பதற்கான வசதிகள் இல்லாத காரணத்தால், அதிகளவு உற்பத்தி செய்தும் சில நேரங்களில் பயன்படாமல் போய் விடுகிறது. பகல் நேரங்களில் அதிகளவு உற்பத்தி, தேவைப்படும் இடத்திலேயே உற்பத்தி செய்யப்படுவதால், இழப்பு தவிர்க்கப்படுதல், சேமிப்புக்கான வாய்ப்பு ஆகியவை சூரிய ஒளி மின்சாரத்தில் உள்ளன.இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில், சூரிய ஒளி மின்சாரத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த, தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. தமிழகத்தை, சூரிய மின்சக்தியில் முதலிடத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் இதன் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கட்டாயம்:
அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள், குறிப்பிட்ட அளவு சூரிய மின் சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதன் படி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட, உயர் அழுத்த மின் இணைப்புகளை பயன்படுத்துவோர் மற்றும் வர்த்தக மின் இணைப்பு பெற்றிருப்போர், தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தில், 6 சதவீதத்தை சூரிய சக்தியில் இருந்து பயன்படுத்த வேண்டும்.இதற்கான கட்டமைப்புகளை அவர்கள் உருவாக்கிக் கொள்ளவோ, சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்களிடம் அல்லது மின் வாரியத்திடம் இருந்து, மின்சக்திக்கான கட்டணத்திலோ பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கான சிறப்பு மின் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும்.வீட்டு உபயோக மின்நுகர்வோர், மேற்கூரை சூரிய சக்தி அமைப்புகளை நிறுவுவதை ஊக்குவிக்கும் வகையில், மின் உற்பத்தி அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அரசு சார்பில், "பசுமை வீடுகள் 'திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் வீடுகள், சூரிய ஒளி மின் உற்பத்தி அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் புதிதாகக் கட்டப்படும் அனைத்து அரசு கட்டடங்கள், உள்ளாட்சி நிறுவன கட்டடங்களில், சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அரசு கட்டடங்களில், சூரிய ஒளி சாதனங்கள் படிப்படியாக நிறுவவும், சூரிய சக்தி மூலம் இயங்கும், தெரு விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.மேலும், சூரிய சக்தி பூங்காக்கள் உருவாக்குதல், சூரிய சக்தி சாதனங்களை தயாரிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்களுக்கு, மின் வரி செலுத்துவதில் இருந்தும், மின் வெட்டிலிருந்தும் விலக்களிக்கப் பட்டுள்ளது
புதிய குழு:
சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்வது குறித்த அனுமதியானது, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை - "டெடா' மூலம் வழங்கப் படுகிறது. விண்ணப்பித்த, 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும் .மேலும், திட்டங்களுக்கான அனுமதி வழங்க, மின்சாரத் துறை அமைச்சர் தலைமையில், தலைமைச் செயலர், நிதித் துறை செயலர், எரிசக்தித் துறை செயலர், மின் வாரிய தலைவர், "டெடா' உறுப்பினர் செயலர், மின் வாரிய தொழில்நுட்ப அதிகாரி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
யூனிட்டுக்கு 2 ரூபாய் சலுகை!:
வீட்டு உபயோகத்திற்காக வீடுகளின் மேல், சூரிய சக்தி கூரைகள் அமைக்கும் போது, அவற்றில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவின் அடிப்படையில் ஊக்கத்தொகை அறிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு, முதல் இரண்டு ஆண்டுகள் வரை, யூனிட்டிற்கு, இரண்டு ரூபாயும், அடுத்த இரண்டாண்டுகளுக்கு, யூனிட்டிற்கு, ஒரு ரூபாயும், அடுத்த இரண்டாண்டுகளுக்கு, யூனிட்டிற்கு, 50 காசுகளும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 2014ம் ஆண்டு மார்ச் மாதம், 31ம் தேதிக்குள், சூரியசக்தி அல்லது காற்றாலை அமைப்புகளை ஏற்படுத்துபவர்களுக்கு இச்சலுகை பொருந்தும். இதன் மூலம், 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்வோர், தனி மின் மீட்டர்களை அதற்கென பொருத்த வேண்டும்.
3,000 மெகாவாட்எப்படி?:
தமிழகத்தில் அடுத்த மூன்றாண்டுகளில், உயர் அழுத்தம் மற்றும் வர்த்தகம், வீட்டு மின் நுகர்வோர் மூலம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் அமைக்கப்படும் சூரிய மேற்கூரை, ஊரக மின் உற்பத்திக் கழகம் மூலம், 3,000 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதில், மின் நுகர்வோர் மூலம் உற்பத்தி செய்யப்படும், 1,500 மெகாவாட்டில், 1,000 மெகாவாட் உயர் அழுத்தம் மற்றும் வர்த்தக நுகர்வோரிடம் இருந்தும், மீதமுள்ள, 500 மெகாவாட் உற்பத்தி அடிப்படையில் ஊக்கத் தொகை பெறும், வீட்டு மின் நுகர்வோர் மூலமும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
6 சதவீதம் கட்டாயம்!:
தமிழகம் வெளியிட்டுள்ள புதிய சூரிய சக்தி கொள்கையின் அடிப்படையில், உயர் மின் அழுத்தம் மற்றும் வர்த்தக மின் நுகர்வோர், 6 சதவீதம் சூரிய மின் சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதில், அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் 3 சதவீதம் வரையும், 2014 ஜனவரி முதல் 6 சதவீதமும் பயன்படுத்த வேண்டும்.குறிப்பாக, உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், வாரம் முழுவதும் மின்சாரம் பயன்படுத்துவோர், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், தொலைபேசி கோபுரங்கள், அனைத்து கல்லூரிகள், உறைவிடப் பள்ளிகள், 20 ஆயிரம் சதுரடி மற்றும் அதற்கு மேல் பரப்பு கொண்ட கட்டடங்கள் இந்த வரம்பில் அடங்கும்.இதில், வீடுகள், குடிசை வீடுகள், சிறு தொழிற்சாலைகள், விசைத்தறிகள், குறைந்த மின் அழுத்த மின் நுகர்வு தொழில் பிரிவுகள், விவசாய மின் நுகர்வோர் ஆகியோருக்கு, கட்டாய பயன்பாட்டில் இருந்து விலக்களிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment