இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் யாரும் எடுக்காத ஒரு துணிச்சலான காரியத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செய்து இருக்கிறார்கள். ஒரு தொலை நோக்கு திட்டத்தோடு “தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012” ( Tamil Nadu Solar Energy Policy 2012 )என்ற ஆவணத்தை நேற்று ( 20.10.2012 ) தலைமைச் செயலகத்தில் வெளியிட்டுள்ளார்.
பொதுவாகவே ஆட்சிக்கு வருபவர்கள் எந்த திட்டம் போட்டாலும் தங்களுக்கு இதில் என்ன லாபம் என்றுதான் கவனித்தார்கள். குறிப்பாக தாங்கள் ஒரு திட்டத்தை கொண்டுவந்து, பின்னர் தாங்கள் ஆட்சிக்கு வரமுடியாமல் எதிர்க் கட்சியினர் ஆட்சிக்கு வந்து அவர்களது காலத்தில் இந்த திட்டம் செயல்பட்டால் என்ன ஆவது என்று தெரிந்தால் அதனை செயல்படுத்த மாட்டார்கள். இதனாலேயே தமிழ்நாட்டில் பல நல்ல தொலைநோக்கு திட்டங்கள் அரசியல் காரணமாக செயல்படாமல் போய்விட்டது. இன்று தமிழ்நாடு முழுவதும் இருக்கும் தலையாய பிரச்சினை மின்வெட்டுதான். தற்காலிகமாக இந்த பிரச்சினையைத் தீர்க்க அண்டை மாநிலங்களை மட்டுமே நம்பியிராமல் சூரிய சக்தியைக் கொண்டு தன்னிறைவு அடைவதுதான் ஒரேவழி என்பதனை அறிந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இதனைக் கொண்டு வந்துள்ளார்கள். இதனால் அவரை உண்மையிலேயே பாராட்ட வேண்டும். இந்த திட்டத்தை இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்து இருந்தால் தமிழ்நாடு இந்த அளவுக்கு மின்வெட்டால் பாதித்து இருக்காது.
இதுபற்றி தினமணி தந்துள்ள தகவல்:
தமிழ்நாடு சூரிய சக்திக் கொள்கை 2012-ன் சிறப்பு அம்சங்கள்:
சூரிய சக்தி பூங்காக்களை உருவாக்குதல்.
வீட்டு உபயோக மின் நுகர்வோர்கள் மேற்கூரை சூரியசக்தி அமைப்புக்களை நிறுவ ஊக்குவிக்கும் வகையில் மின் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை அளித்தல்.
அனைத்து புதிய அரசு கட்டடங்கள் / உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டடங்களில் சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் அமைப்பது கட்டாயமாக்கப்படும்.
தற்போதுள்ள அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டடங்களில் சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் அமைப்பது படிப்படியாக செயல்படுத்தப்படும்.
உள்ளாட்சி நிறுவனங்களின் அனைத்து தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் வழங்கும் அமைப்புகள் படிப்படியாக சூரிய சக்தியைக் கொண்டு இயக்கப்படும்.
பெரும் தொழிற்சாலைகள் மற்றும் உயர் அழுத்த மின் நுகர்வோர் குறிப்பிட்ட சதவீத மின்சாரத்தை சூரிய சக்தி மின்சாரத்திலிருந்து பயன்படுத்த வேண்டும்.
சூரிய சக்தி சாதனங்களைத் தயாரிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும்.
சூரிய சக்தி மின் உற்பத்தி தயாரிப்பாளர்களுக்கு கீழ்க்கண்ட முனைப்பான கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
அ) நிகர அளவியல்
ஆ) மின்சாரவரி செலுத்துவதிலிருந்து விலக்களித்தல்
இ) மின்தேவை வெட்டிலிருந்து விலக்களித்தல்
ஆ) மின்சாரவரி செலுத்துவதிலிருந்து விலக்களித்தல்
இ) மின்தேவை வெட்டிலிருந்து விலக்களித்தல்
(நன்றி: தினமணி ஞாயிறு, அக்டோபர் 21, 2012)
எந்த திட்டமாக இருந்தாலும் அதனை நிறைவேற்றும் பொறுப்பு அரசு அதிகாரிகளின் பொறுப்பில் அரசு ஊழியர்கள் கையில்தான் உள்ளது. இந்த திட்டம் முறைப்படி செவ்வனே நடந்தால் நாட்டுக்கு நல்லது.
ஒரு நல்ல நோக்கத்தோடு , தொலைநோக்கோடு இந்த “தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012” (Tamil Nadu Solar Energy Policy 2012) திட்டத்தினை கொண்டு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டு.
No comments:
Post a Comment