Saturday, October 27, 2012

கேள்விக்குறியாகும் இந்திய எதிர்காலம்!:

 இன்றைய இந்தியாவின் ஆட்சியாளர்களும் சரி, அடுத்த கட்டமாக ஆட்சியைப் பிடிக்க ஆயத்தமாகும் இதர, பல்வேறு அரசியல்வாதிகளானாலும் சரி, எவருக்குமே இந்திய எதிர்காலத்தின் வளர்ச்சி பற்றியும், தங்களுக்கு வாய்ப்பளிக்கும் மக்களின் வாழ்வாதரங்களின் முன்னேற்றம் பற்றியும், துளியும் அக்கறை இல்லை. அவர்களின் நோக்கமெல்லாம், தேர்தலில் ஜெயிக்க வேண்டும்; பதவியைப் பிடிக்க வேண்டும்; கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டும் என்பதோடு, இந்நாடு எக்கேடு கெட்டுப் போனால், எங்களுக்கென்ன என்ற நிலைப்பாடு தான்.

மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்கள் நலன், தங்கள் மாநிலங்களின் வளர்ச்சி குறித்த விவாதங்கள் நடத்தி, சில பயனுள்ள திட்டங்களை உருவாக்கவே, பார்லிமென்ட் உருவாக்கப்பட்டது. ஆனால், இன்றைய பார்லிமென்டில் நடப்பதெல்லாம், ஒருவருக்கொருவர் தங்களின் ஊழலுக்குள் உள்ள ஒற்றுமை, வேற்றுமை, ஏற்றத் தாழ்வுகள் குறித்து, பகுப்பாய்வு செய்யும் யுத்தத்தில் இறங்கி, கூட்டத் தொடர்கள் முழுவதையுமே வீணடிக்கின்றனர்.இன்றைய ஆளும் வர்க்கத்தினரின், இந்த நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்ட, எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. ஒருவருக்கொருவர் காழ்ப்புணர்ச்சி, சுயநலம், நம்பிக்கை மோசடி போன்ற தங்களின் தவறான அணுகுமுறைகளால், மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கின்றனர்.அதோடு, துடிப்புமிக்க இளைஞர்கள் கையில், கட்சி மற்றும் ஆட்சி அதிகாரங்களை கொடுக்க, தற்போதைய முதிர்ந்த தலைவர்கள் எவருமே முன்வருவதில்லை. பல சர்ச்சைகளில் சிக்கிய, 86 வயது என்.டி.திவாரி கூட, "இன்னும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவேன்; மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள்' என்று, இந்த தள்ளாத வயதிலும் பதவிக்கு வரத் துடிக்கிறார்.அதே நேரத்தில், இன்றைய இளைஞர்களுமே, அவ்வளவு நம்பகத்தன்மை உடையவர்களாகத் தெரியவில்லை.
இந்தியாவின் எதிர்காலம், இளைஞர்கள் கையில்; எதிர்கால இந்தியாவின் தூண்கள் அவர்கள் என்றெல்லாம் முழக்கமிட்ட காலம், மலையேறி விட்டது. இந்த நாட்டில் நடக்கும் முக்கால்வாசி கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்போர் எல்லாருமே, "இந்த நாட்டின் எதிர்காலத் தூண்கள்' என, வர்ணிக்கப்பட்டவர் தான்.மாணவப் பருவத்தில் ஆசிரியரை கொலை செய்கின்றனர்; வளர் பருவத்திலே, வெட்ட வெளியில் வைத்து, காதலியை கொலை செய்கின்றனர். இவர்கள் அத்தனை பேருமே, படிக்காத, கிராமத்து அறிவிலிகள் அல்ல. நன்கு படித்து, பட்டம் பெற்ற, கல்லூரி பேராசிரியர் வரை, தரம் உயர்ந்தவர்கள் தான். இப்படிப்பட்ட இளைஞர்கள், எதிர்கால இந்தியாவிற்கு எப்படி தூணாக இருப்பர் என்பது தான், இன்றைய கேள்விக்குறி.

அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில், இன்றைய இளைஞர்களை முன்னிலைப்படுத்தி, அவர்களின் எதிர்கால சிந்தனைகளில் ஒரு புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்தக் கூடிய வல்லுனர்கள், இந்த நாட்டில் குறைந்துவிட்டனர். உண்மையான, தேசப்பற்று மிக்கவர்கள் காணாமல் போய்விட்டனர். ஊழலை எதிர்த்துப் போராடுபவர்கள், ஓரங்கட்டப்படுகின்றனர்.
இன்னொரு முறை காந்தி, நேரு, லால்பகதூர் சாஸ்திரி, ராஜேந்திர பிரசாத் போன்றோர், இந்நாட்டில் பிறக்கும் வாய்ப்பு இருக்குமேயானால், அன்று தான், இந்திய எதிர்காலம் பிரகாசிக்கும் வாய்ப்பு உருவாகும்.இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கனவை, உயர்வான சிந்தனைகளை இளைஞர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும், இடம் பெறச் செய்து, பெருமைப்பட நினைத்த அப்துல் கலாமையே, இன்றைய சுயநல அரசியல்வாதிகள் ஓரங்கட்டிவிட்டனர்.இந்தியாவை, நேருவின் குடும்பத்திற்கு பட்டயம் போட்டுக் கொடுத்து விட்டதைப் போல, இந்திரா, ராஜிவை தொடர்ந்து, இன்று சோனியாவின் பிடியில், இந்தியா சிக்கி, சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது.
ஆயுத பேர ஊழல், மாட்டுத் தீவனம், பாமாயில் போன்றவைகள், பாகுபாடின்றி அனைத்துக் கட்சியின் ஆட்சியாளர்களுமே, ஊழலுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று, ஒருவருக்கொருவர் மார் தட்டிக் கொண்டு, கிட்டத்தட்ட இந்த நாட்டின் சொத்துக்கள், வளங்கள் அனைத்தையுமே சுரண்டிவிட்டனர்.அதிகபட்சமாக, "2ஜி' ல், 1.76 லட்சம் கோடியை மிஞ்சி, நிலக்கரியில், 1.86 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்து, இன்று மீண்டும் காங்கிரசே முதலிடத்தை பிடித்துள்ளது.இவர்களை, பொதுநலன் விரும்பிகள் எவரும் கேள்வி கேட்கக் கூடாதாம்; தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், நாட்டின் பொருளாதார சீர்த்திருத்தங்கள் என்று எதைக் கொண்டு வந்தாலும், கண்ணை மூடி ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்.
இனியும் இந்த நாட்டில் கொள்ளையடிக்க ஒன்றுமில்லை என்று தான், இந்த நாட்டையே அடகு வைக்கத் துணிந்துவிட்டனர். நாட்டில் நிதி பற்றாக்குறை, பொருளாதார சீர்குலைவு என்று, சில்லரை வர்த்தகம் மற்றும் காப்பீட்டுத் துறை போன்றவற்றில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்ததன் மூலம், மீண்டுமொரு கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவில் ஊடுருவ வழிவகுத்து கொடுத்துவிட்டனர். மன்மோகன் சிங்கை, "செயல்படாத பிரதமர்' என்று அன்னிய பத்திரிகைகள் அசிங்கப்படுத்துவதை கூட, அவர் சோனியாவின் கடிவாளத்தில் சிக்குண்ட குதிரையாக இருப்பதால் தான்.இன்றைய சராசரி மக்களின், ஒரு நாள் உணவு செலவு, 35 ரூபாய் என்று நிர்ணயிக்கும் திட்டக்குழு, அதன் அலுவலக கழிப்பறையை நவீனப்படுத்த, 35 லட்ச ரூபாயை, ஏன் செலவழிக்க வேண்டும்? சாதாரணமாக ஒரு சடங்காக நடக்கும் நிகழ்வான, ராணுவ அணிவகுப்பு மரியாதையை, ஜனாதிபதி ஏற்கும் ஒரு நிகழ்ச்சிக்கு, 12 லட்ச ரூபாய்க்கு, மினரல் வாட்டர் வாங்கி இருக்கின்றனர்.
இவர்களின் ஆட்சி லட்சணத்தின், மூன்று ஆண்டு நிறைவு விழா, ஒரு கேடு என்று, அதற்கும் அரசுப் பணம், 29 லட்ச ரூபாயை வீணடித்திருக்கின்றனர். இப்படியாக, இவர்களின் தான்தோன்றித் தனமான நிர்வாகத்தால், அரசுக்கு ஏற்பட்டுள்ள, நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி, மறுபடியும் டீசல் விலை உயர்வு, காஸ் கட்டுப்பாடு என, பொதுமக்களைப் பாதிக்கக் கூடிய வகையில், ஒரு மோசமான பொருளாதார சீர்த்திருத்த கொள்கையின் மூலம், இந்த நாட்டின் எதிர்காலத்தையே கேள்வி குறியாக்கிக் கொண்டிருக்கின்றனர்.ஆக, மீண்டும் ஒரு அடிமை இந்தியாவை, நினைத்துக் கூட எங்களால் பார்க்க முடியாது; இனியொரு விதி செய்வோம்; வளமான இந்தியாவை உருவாக்கும் வரை ஓய மாட்டோம் என்று, ஒவ்வொரு இந்தியக் குடிமக்களின் மனதிலும், ஒரு புரட்சிகரமான மாறுதல் உருவாகி, அடுத்து வரும் தேர்தலிலாவது, ஊழலற்ற, சுயநலமற்ற, தேசப்பற்றுடன் கூடிய, சிறிதளவேனும் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் முன்னேற்றங்களில், அக்கறை உள்ளவர்களையே தேர்ந்தெடுத்து, நாட்டை சூறையாட நினைக்கும் நயவஞ்சகர்களை விரட்டி அடிப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...