Saturday, October 27, 2012

ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?

1922 ம் வருடம், நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று ஒத்துழையாமை இயக்கம் தீவிரமாக நடந்து வந்தது. அப்போது உத்தரப்பிரதேசத்தில் ஸௌரி ஸௌரா என்ற இடத்தில் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து ஒரு காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதையடுத்து நாடே அதிர்ச்சியில் உறையும் விதமாக, ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார் மகாத்மா காந்தி. அஹிம்சை முறையில் போராட்டம் இருக்க வேண்டும் என்பதை மீறி சிலர் வன்முறையில் இறங்கியதால், தார்மிக ரீதியாக, தனது தலைமையிலான போராட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார் மகாத்மா. அதுவே அவரது அஹிம்சை கொள்கை ஆங்கிலேயரிடமும் மரியாதை பெறக் காரணமானது.

இந்நிகழ்வு நடந்து இப்போது 90 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மகாத்மா காந்தி தலைமை வகித்த அந்த காங்கிரஸ் கட்சியில் இப்போது என்ன நடக்கிறது? வெற்றிகரமாக நடந்துவந்த ஒத்துழையாமை இயக்கத்தையே, சிலரது தவறான நடத்தைக்காக நிறுத்திய மகாத்மா காந்தியின் தார்மிக நெறியுணர்வு கொண்ட அந்த காங்கிரஸ் கட்சியுடன் – சோனியா தலைமையிலான ஊழல் காங்கிரஸ் கட்சியை ஒப்பிடுவதே பாவம். ஆனாலும், பழைய நினைவுகளை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
தற்போதைய மத்திய அரசு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. இந்த அரசில் உள்ள 15 அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை வாசித்திருக்கிறார்கள், ஊழல் எதிர்ப்பு இயக்க போராளிகளான ஹசாரே குழுவினர். பிரதமர் மீதே இக்குழு குற்றம் சாட்டி இருக்கிறது. ஆனால், நமது பிரதமர் எந்த கவலையும் இல்லாமல் ஆள்கிறார். கூட்டணிக் கட்சியான திமுகவை (முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை) ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்க வைத்துவிட்டு தப்பிய புண்ணியவானான மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது தான் ஹசாரே குழுவினர் அதிகமான குற்றச்சாட்டுகளைக் கூறி இருக்கின்றனர். அவரோ, ஹசாரே தான் ஊழல் பேர்வழி என்று கூறி டபாய்க்கிறார்.

இந்நிலையில் தான் அண்மையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை முக்கியமான ஒரு வழக்கில் மிக முக்கியமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. நாட்டின் மிக முக்கியமான அரசியல்வாதியான ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது மதுரை நீதிமன்றம். இதன்மூலமாக, ப.சிதம்பரத்தின் தார்மிக அடிப்படை குலைந்துள்ளது. ஆனாலும், அவர் தனது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை ஒரு எறும்புக்கடி போல புறம் தள்ளி இருக்கிறார். வார்டு கவுன்சிலராகக் கூட வெல்லாத தனது மகனைக் கொண்டு தனது ‘பின்களப்’ பணிகளை நிறைவேற்றிவரும் ப.சிதம்பரத்திடம் தார்மிக நெறிமுறைகளை எதிர்பார்த்தால் அது தான் நமது அறிவீனம்.
2009 மே மாதம் நடந்த 15 வது நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தின் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார் ப.சிதம்பரம். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பம் முதலே ராஜ கண்ணப்பன் முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இடையே நிறுத்தப்பட்டது. பிறகு எண்ணப் பட்டபோதும் ராஜ கண்ணப்பனே முன்னிலை வகித்தார். ஆனால், வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் முடிவு அறிவிக்கப்படாமல் தாமதிக்கப்பட்டது. அப்போதே, ப.சிதம்பரத்தை வெல்லச் செய்ய சதி நடப்பதாக பேச்சு எழுந்தது. அதற்கேற்ப, அதிமுக வேட்பாளர் இல்லாத நேரம் பார்த்து, கடைசி சுற்றில் அதிக வாக்குகள் பெற்றதால், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அதிமுகவினர் அப்போதே போராடினர். ஆனால், மாநிலத்தில் இருந்த திமுக ஆட்சியின் ஆசீர்வாதத்துடன், ப.சிதம்பரம் வென்றதாகவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதை எதிர்த்து, தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற ராஜ கண்ணப்பன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். ‘வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதால், ப.சிதம்பரத்தின் வெற்றியை செல்லாது’ என்று அறிவிக்கக் கோரி அவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வரவே மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்நிலையில், கடந்த ஜூன் 7 ம் தேதி, ராஜ கண்ணப்பனின் மனுவை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனது மனுவில், ‘ராஜ கண்ணப்பன் அளித்துள்ள புகார்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. என்னை நீதிமன்ற கூண்டில் ஏற்றி விசாரிக்கக் கூடாது. இந்த தேர்தல் தொடர்பான வழக்கில் நான் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மனுவில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும்’ என்று ப.சிதமபரம் கோரி இருந்தார்.
ஆனால், மொத்தமுள்ள 29 குற்றச்சாட்டுகளில் இரண்டை மட்டுமே நீக்கிய நீதிபதி, ”ராஜ கண்ணப்பன் மனுவில் 4 மற்றும் 5-வது பாராவில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் மட்டும் நீக்கப்படுகின்றன. (ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்ததால், வங்கி அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகளாக இருந்ததால், விசுவாசமாக இருந்ததாக குற்றச்சாட்டு, மகன் கார்த்தி சிதம்பரம் மீதான நிதி உதவி குற்றச்சாட்டு) மற்ற புகார்களை பொருத்தவரை இந்த முறைகேடுகள்,சட்ட மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுகள் இப்போதுள்ள சூழ்நிலையில் நீக்க வேண்டிய அவசியமில்லை. அது சம்பந்தமான மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மற்ற குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படும்” என்று தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment