Saturday, October 20, 2012

இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் மோடி


இந்திய காங்கிரஸ் கட்சிக்குக் குடைச்சல் கொடுக்கும் மாநிலங்களில் முதன்மையானது குஜராத் .உலகத்துக்கு மஹாத்மா காந்தியைத் தந்த குஜராத் மாநில முதல்வருக்கு உலகளாவிய எதிர்ப்பும் உள்ளது. டிசம்பர் மாதம் குஜராத்தின் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்தியாவின் பார்வை குஜராத்தை நோக்கித் திரும்பியுள்ளது.
 மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, சோனியா, அத்வானி, சிதம்பரம் போன்ற இந்திய அரசியல் தலைவர்கள் உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்தாலும் குஜராத்துக்குச் சென்றால் அனைவரும் மோடியின் பின்னால் மறைந்து விடுவார்கள். குஜராத் சட்டமன்றத் தேர்தலை மோடி அட்டகாசமாக ஆரம்பித்துவிட்டார். மோடிக்கு இணையாக குஜராத்தில் பிரசாரம் செய்வதற்கு காங்கிரஸ் கட்சியில் யாருமே இல்லாமையால் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தை சோனியா காந்தி ஆரம்பித்து வைத்தார்.
குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று முதல்வராக வீற்றிருக்கும் மோடி தொடர்ந்தும் மூன்றாவது முறையாக வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. குஜராத் மாநிலத்தை பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி செய்தாலும் மோடி என்ற தனி மனிதனின் செல்வாக்கே அங்கு அரசாட்சி செய்கிறது. காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளுக்கும் இல்லாத சக்தி மோடி என்ற இரண்டெழுத்துக்கு உள்ளது. மோடி என்ற தனி மனிதனை வீழ்த்த முடியாது காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் டுமா றுகின்றன.
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களினால் மோடி மீதும் குஜராத் மீதும் பாரிய கறை படித்துள்ளது. இந்தியாவின் மிகச் சிறந்த மாநிலமாக குஜராத்தை மோடி மாற்றியதால் இந்தியாவில் ஏனைய மாநிலங்களும் உலக நாடுகளும் குஜராத்தை நோக்கிப் படையெடுக்கின்றன.
இந்தியாவின் பிரதமராகும் தகுதி மோடிக்கு இருப்பதாக பலரும் கருதுகின்றனர். மோடியின் மீது காட்டமாக இருந்த அமெரிக்ககாவும். இங்கிலாந்தும் இறங்கி வந்துள்ளன. மோடிக்கு விஸா வழங்க மறுத்து வந்த அமெரிக்கா விஸா வழங்க முன்வந்துள்ளது. குஜராத்தின் வளர்ச்சியை ஆய்வு செய்வதற்வதற்காக ஒரு குழுவை அனுப்பிவைக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் அது புதியதொரு அத்தியாயத்துக்கு ஆரம்பமாக அமையும். பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதம வேட்பாளராக அத்வானி அறிவிக்கப்படுவார் என்றாலும் அவருக்குப் போட்டியாக மோடியின் பெயர் பிரேரிக்கப்படலாம். வாஜ்பாய்க்குப் பின்னர் பாரதீய ஜனதாக் கட்சியைப் பொறுப்பேற்ற‌ அத்வானியால் கட்சியை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியவில்லை. மோடி தலைமையேற்றால் பாரதீய ஜனதாக கட்சி வெற்றி பெறும் என்று அக்கட்சியில் உள்ள சிலர் நம்புகின்றனர். மோடியின் செல்வாக்கினால் காங்கிரஸ் கட்சியைப் போன்றே பாரதீய ஜனதாக் கட்சியும் கலக்க மடைந்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தேர்தலின் போதும் சட்டமன்றத்தேர்தலின் போதும் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்வதுண்டு. ஆனால் குஜராத்மாநிலத்தில் மோடியின் தனிப்பட்ட செல்வாக்குக் காரணமாக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் முழு மூச்சுடன் பிரசாரம் செய்வதில்லை. கட்சித் தலைவர் தான் தமது மாநிலத்துக்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்றே மாநிலக் கட்சித் தலைவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் குஜராத்தின் நிலைமை தலைகீழானது. மோடியின் செல்வாக்கு அங்கு ஏனையவர்களின் செல்வாக்கை மழுங்கடித்து விடும்.
குஜராத்தில் மோடி அசைக்க முடியாத செல்வாக்குடன் திகழ்கிறார். மோடிக்கு இணையான ஒரு தலைவர் அங்கு இல்லை. மோடி வளர்ந்ததைப் போன்று பாரதீய ஜனதாக் கட்சியோ அல்லது குஜராத்தில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களோ வளரவில்லை. குஜராத் மாநிலத்தில் இருந்து தேசிய அரசியலுக்கு மோடி நகர்ந்தால் குஜராத்தில் பாரதீய ஜனதாக் கட்சியை வழி நடத்தக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை

இந்தியப் பிரதமராகும் தகுதி ராகுல் காந்திக்கு இருக்கிறது என இந்தியக் காங்கிரஸ் கட்சியினர் நம்புகின்றனர். ராகுலை முன்னிறுத்தி இந்தியப் பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என ஒரு சாரார் விரும்புகின்றனர். வட மாநிலத் தேர்தல்களில் ராகுலின் யுக்தி தோல்வியடைந்ததனால் அவரை முன்னிறுத்தக் கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்தியப் பிரதமராகும் ஆசை அத்வானியிடம் நிறையவே உண்டு. அவரதுதுரதிர்ஷ்டம் வெற்றிக் கனி அவரது பக்கம் விழவில்லை.
காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் முலாயம் சிங், மாயாவதி ஆகிய இருவருக்கும் இந்தியப் பிரதமர் மீது கண் உள்ளது. தமிழக அமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமர் பதவியைக் குறிவைத்துள்ளார். இந்தியப் பிரதமராகும் ஆசையில் பலரும் உள்ளதால் பாரதீய ஜனதாக் கட்சி மோடியைக் களமிறங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம் மோடிக்கு இணையான‌ அரசியல் தலைவர் யாரும் இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...