மத்திய புலனாய்வுத்துறை மற்றும் மாநில ஊழல் தடுப்பு பிரிவுகளின் 19வது மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் ஊழல் தடுப்பு குறித்து பேசியுள்ளார்.
அதன் முக்கியமான அம்சங்கள்;


- ஊழல் தடுப்பு சட்டத்தின் ஓட்டைகள் அடைக்கப்படும் வகையில் திருத்தப்படும்.
- ஊழல் கார்பரேட் நிறுவனங்களின் மீதும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் பாயும்.
- ஊழலில் பணம் பெற்றவர் மட்டுமின்றி தருபவரும் தண்டனைக்குட்படுத்தப்படுவார்.
- ஊழல் தடுப்பில் சி.பி.ஐயும், மாநில ஊழல் தடுப்பு பிரிவும் இணைந்து செயல்படலாம்.
- நேர்மையான அரசு அலுவலர்கள் பாதுகாக்கப்படுபவர், நிர்வாகத்திறன் நிலைநாட்டப்படும்.
- ஊழலை ஒழிக்கும் நடிவடிக்கைகளில் எதிர்மறைச் சிந்தனை, தோல்விமனப்பான்மை பலனளிக்காது. அவை நாட்டின் நன் மதிப்பை குலைக்கும்.

நமது பிரதமர் கூறியுள்ள அனைத்து கருத்துகளும் அனைவருக்கும் ஏற்புடையது தான். ஆயினும், பிரதமரின் பேச்சு பெரும் விவாதிமாகியுள்ளது காரணம் பிரதமரின் பேச்சில் சாதுர்யம் வெளிப்பட்டுள்ளதேயன்றி சத்தியத்தை நாம் அதில் தரிசிக்க முடியவில்லை... என்பதே!
- ஆட்சியாளர்களின் அடுத்தடுத்த ஊழல்கள் நாட்டையே உலுக்கிக் கொண்டுள்ளன. ஆதர்ஸ் ஊழல், 2ஜிஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்... போன்ற ஊழல்களை தடுக்கவும், தண்டிக்கவும் கூடிய அதிகாரத்திலிருக்கும் பிரதமர் எல்லாவற்றையும் ஒரு பார்வையாளர் கோணத்திலிருந்து அணுகுகிறார்.

"1990களுக்குப் பிறகு ஏற்பட்ட பிரம்மாண்டமான பொருளாதார வளர்ச்சிக்கேற்ப ஊழலும் வளர்ந்துள்ளது. அதற்கேற்ப ஊழல் தடுப்பு அமைப்புகளும் சவால்களை சந்திக்கின்றன" என்பதை தன் பேச்சில் ஒத்துக்கொண்டுள்ள பிரதமர் ஏன் ஊழல் தடுப்பு அமைப்புகளை பலப்படுத்தவில்லை...? அவற்றிக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை? என்பதற்கும் வினையாற்றவேண்டும், நமது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் வெறும் 200உறுப்பினர்களைக் கொண்டு எப்படி 120கோடி மக்கள் வாழும் நாட்டில் ஊழல்களை தடுக்கமுடியும்?
மேலும் சி.பி.ஐயையும், விஜிலென்சையும் அரசியல் நிர்பந்தல்களிலிருந்து விடுவிக்க பொறுப்பு இன்றைய ஆட்சித்தலைமைக்குரியது தானே! இதை எப்போது செய்யப்போகிறார்கள்? என்பது தான் மக்கள் கேள்வி!
காந்திய சகாப்தத்தை கண்ட நமது பாரத தேசம் - இன்று 'கரப்சன்' சகாப்தத்தை சந்திக்கும் அவலத்திற்கு ஆட்சியாளர்கள் தங்களை சுயபரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொள்ளவேண்டும்.
இங்கங்கெனாதபடிக்கு இன்று நீதித்துறை வரைக்கும் ஊழல் தன் கோர நகங்களை நீட்டத்துணிந்துள்ளதானது, சாதாரண பாமர மனிதனையும் நிலைகுலைய வைத்துள்ளது. இன்று எந்த அமைப்பை நம்பி ஊழல் புகார்களை தருவது என்பதே மக்கள் தவிப்பு!
அப்படியே ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகி விசாரணைக்கு ஏற்கப்பட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள், மிகவும் செல்வாக்கானவர்கள் தண்டிக்கப்படுவதில்லை விசாரணைக்கான அதீத காலதாமதத்தால் அவை வீரியமிழந்துவிடுகின்றன.
ஊழல்வாதிகளின் சொத்து முற்றிலும் பறிமுதல் செய்யப்படும் என்பதற்கு உத்திரவாதமிருந்தால் தானே ஊழல் வாதிகளுக்கு உதறல் எடுக்கும்!
அது ஊழலைத் தடுக்கும். எனவே, வலுவான 'லோக்பால் சட்டம்' அவசியமாகிறது.
நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியது போல, 'இன்றைக்கு ஊழலை ஒழிக்க - ஊழல் என்ற புற்றுநோயை அழிக்க - அதிரடி கதிரியக்க சிகிச்சை மிகவும் அவசியமாகிறது!
ஆனால் இன்றைய தேர்தல் அரசியலும், தேர்தல் வெற்றியை மனதில் கொண்டு நடைமுறைபடுத்தப்படும் 'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்' போன்றவையும் மக்களையும் ஊழல்மயமாக்கி வருகிறது.
இது தான் மிக மிக அபாயகரமானதாகும்! ஏனெனில் மக்கள் எவ்வாறு இருக்கிறார்களோ, அதற்கேற்பவே அவர்களின் தலைவர்களும் அமைவார்கள்!


எனவே பரவிவரும் ஊழல் சிந்தனை மற்றும் செயல்பாடுகளிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்வது எப்படி? என்று தெளிவாகவும், திடமாகவும் முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது! இது தான் ஊழல் ஒழிப்பில் எதிர்மறைச் சிந்தனை, தோல்வி மனப்பான்மையிலிருந்து நம்மைவிடுவித்து, நாம் முன்நகர்ந்து வழிவகுக்கும்! ஊழல் ஒழிப்பு என்பது வெறும் ேப்சல்ல. அனைவரும் சேர்ந்து நடத்தவேண்டிய வேள்வி!
No comments:
Post a Comment