Tuesday, September 18, 2012

மத்திய அரசில் அங்கம் வகித்து மக்களை மடையராக்கும் தி மு க .


டாலரைக் காரணம் காட்டி , பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ 7.50 உயர்த்தி ,  நடுத்தர மக்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளது மத்திய அரசு. விலைவாசி உயர்வால் அல்லல் படும் நடுத்தர வர்க்கத்தினர்  தற்போதைய பெட்ரோல் விலை உயர்வால் கடும் அவதியைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
டாலரின் மதிப்பு உயர்வே பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணம் என்பது உண்மை எனில், பெட்ரோல் மீது மத்திய மாநில அரசுகள் விதிக்கும் உற்பத்தி வரி, இறக்குமதி வரி, வாட் வரி போன்றவற்றில் சிறிதளவு மாற்றம் செய்தால் விலை உயர்வைத் தவிர்க்கலாம் என்ற அரிச்சுவடி அறியாதவர்களா இந்த நாட்டின் ஆட்சியாளர்கள்?

பெட்ரோல் விலை உயர்வு காரணமாகப் பல்வேறு கட்சிகளும் போராட்டத்தை அறிவித்துள்ளன. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவும் வரும் 30ஆம் தேதியன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பும்
போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. திமுக தலைவர் கை தேர்ந்த அரசியல்வாதி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்.

இலங்கை அரசு , தமிழர்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகள் வீசி அழிப்பதற்கு  இந்திய அரசின் சார்பில் ராணுவ உதவிகள் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டே ஈழத் தமிழர்களின் நலன் எனக் கூறிக் கடற்கரையில் உண்ணாவிரதம் இருப்பார். அதே போன்றே தற்போது மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்துக் கொண்டே பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக வரும் 30ஆம் தேதியன்று போராட்டமாம். என்ன செய்வது ?  தமிழர்களின் நிலை எண்ணி நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

திமுக சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் ''பண வீக்கம், விலைவாசி உயர்வு ஆகிய துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் இந்திய நாட்டு மக்களை மேலும் வாட்டி வதைத்திடும் இந்த பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு அடியோடு ரத்துச் செய்யாவிட்டாலும், பெருமளவுக்குக் குறைத்து மக்களுக்கு உதவிட வேண்டுமென்று வலியுறுத்துவதோடு - அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களை வெகுவாகப் பாதிக்கும் இந்த விலை உயர்வினைச் செய்துள்ள மத்திய, மாநில அரசுகளைக் கண்டிக்கின்ற வகையிலும், தி.மு.கழகத்தின் இந்தக் கோரிக்கையை வலியுறுத்திடும் வகையிலும், வருகிற 30-ஆம்     தேதி அன்று காலை
10 மணி அளவில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மத்திய அரசு அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வினைச் செய்தது மத்திய அரசும் மாநில அரசுமாம். மாநில அரசுக்கு இதில் என்ன பங்கு? பெட்ரோல் விலையை உயர்த்தினால் வாட் வரி தானாக உயரும். மாநில அரசு விலை உயர்வுக்கு என்ன செய்தது என்பதைக் கருணாநிதி தான் விளக்க வேண்டும். கருணாநிதி என்ன சொல்ல வருகிறார் என்றால் அடியோடு ரத்து செய்யா விட்டாலும் ஒரு 50 காசுகளாவது குறைத்தால் திமுகவுக்குப் பயந்து மத்திய அரசு பெட்ரோல் விலையைக் குறைத்து விட்டது என்று கூறிக் கொள்ளலாம் அல்லவா.

இது மக்களை ஏமாற்றும் நடிப்பே தவிர வேறு இல்லை என்பதைத் தவிர வேறு ஒன்றும் கூறுவதற்கில்லை. 2G வழக்கில் மத்திய அரசு ஒத்துழைக்க மறுத்தால் அதற்கெல்லாம் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டப் படும். மக்களைப் பாதிக்கும் பெட்ரோல் விலை உயர்வுக்குத் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தைக் கூட்டி ஆதரவை மறு பரிசீலனை செய்ய வேண்டியது தானே? யாரை ஏமாற்ற இந்த வெத்துப் போராட்டம்?.

குறைந்த பட்சம் மத்திய அரசின் வரியைக் குறைக்கவாவது வலியுறுத்தலாமே. இந்திய மக்களின் மேல் அதீத அக்கறை உள்ள கருணாநிதி, தன் பேரனுக்காகத் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறையை மிரட்டி வாங்கியது போன்று பெட்ரோலியத் துறையை வாங்கி அதில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளைக் களையலாமே?.
இதில், பொது மக்கள் நலனைப் புறந்தள்ளி விட்டு எந்த அரசும் இருக்க முடியாது என்ற பேட்டி வேறு. பொது மக்கள் நலனைப் புறந்தள்ளும் அரசில் இவருக்கென்ன வேலை என்று யாரும் இவரைக் கேட்பார் இல்லை.

 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...