Wednesday, September 5, 2012

அழகிரி, சிதம்பரம் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் கடும் உயர்வு

மத்திய அமைச்சர்களின், சொத்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, சில அமைச்சர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. இதில், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் சொத்து மதிப்பு, கடந்த ஓராண்டில், 17 சதவீதம் அதிகரித்துள்ளது.


கடந்தாண்டு சொத்து பட்டியலில், முதல் இடத்தை பிடித்த அமைச்சர்கள், கமல்நாத், பிரபுல் பட்டேல் ஆகியோரின் சொத்து மதிப்பு விவரம் வெளியிடப்படவில்லை. மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம், ஆண்டுதோறும் வெளியிடப்பட வேண்டும் என்பதில், பிரதமர் மன்மோகன் சிங் உறுதியாக இருக்கிறார். இதன்படி, ஒவ்வொரு ஆண்டும், மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம், பெறப்பட்டு, அவற்றை பிரதமர் அலுவலகம் முறைப்படி அறிவிப்பாக வெளியிடும். இந்த வகையில், இந்தாண்டு அமைச்சர்களின் சொத்து விவரத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில்,சில அமைச்சர்களின், சொத்துகள் மதிப்பு, கணிசமாக அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. அமைச்சர்களின் சொத்து விவரம் வருமாறு:



அழகிரி:

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, அவரின் மனைவி காந்தி ஆகியோரின் சொத்து மதிப்பு, 37 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, அவர் சொத்து மதிப்பு, 32 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, 17 சதவீதம் உயர்ந்துள்ளது. அழகிரியிடம், 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, "ரேஞ்ச் ரோவர்' ரக காரும், ஹோண்டா சிட்டி காரும் உள்ளன. அவரின் மனைவி காந்தி, 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, பி.எம்.டபிள்யு., காரை பயன்படுத்துகிறார்.



சிதம்பரம்:


மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், அவரின் மனைவி சொத்துகளின் மதிப்பு, இந்த ஆண்டு, 30 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு, 23.67 கோடி ரூபாயாக இருந்தது. காரைக்குடி மானகரியில் உள்ள நிலம் மற்றும் கட்டடத்தின் மதிப்பு, 3.11 கோடி ரூபாய். அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு, 1.6 கோடி ரூபாய் மதிப்பு சொத்துகள் உள்ளன.



சரத்பவார்:


விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் மற்றும் அவரின் மனைவியின் பெயரில், 16 கோடி ரூபாய் மதிப்பு சொத்துகள் உள்ளன. டில்லியில், துவாரகா செக்டாரில் ஒரு பிளாட்டும், வங்கியில் "பிக்சட் டெபாசிட்'ஆக, 1.15 கோடி ரூபாயும் உள்ளன. பவாருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை.



ராஜிவ் சுக்லா:


தற்போது, வெளியாகி உள்ள பட்டியலின்படி, கடந்த ஓராண்டில், அபரிமித வளர்ச்சி கண்டுள்ளவர், பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் ராஜிவ் சுக்லா. கடந்த ஆண்டு, சுக்லா மற்றும் அவரின் மனைவியின் சொத்து மதிப்பு, 16.56 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு, 29.25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முக்கிய செய்தி சேனல் ஒன்றை, இவர்கள் நடத்தி வருகின்றனர்.



சுசில்குமார் ஷிண்டே:


உள்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள, சுசில் குமார் ஷிண்டேவின் சொத்து மதிப்பு, 7 சதவீதம் அதிகரித்து, 14.18 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. புனே, பந்த்ரா பகுதிகளில், இவருக்கு பிளாட்டுகள் உள்ளன. கார் வாங்காத அமைச்சர்களில், ஷிண்டேவும் ஒருவர். இருப்பினும், 10 ஆண்டு பழமையான, "மிட்சுபிஷி' டிராக்டர் இவரிடம் உள்ளது. கடந்த ஆண்டு, சொத்து மதிப்பை வெளியிட்ட பல மத்திய அமைச்சர்களின் தற்போதைய சொத்து விவரம், இன்னமும் வெளியிடப்படவில்லை. 260 கோடி ரூபாயை தாண்டிய அமைச்சர், கமல்நாத், 101 கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாக அறிவித்த அமைச்சர் பிரபுல் பட்டேல் ஆகியோர், இந்த ஆண்டு சொத்து விவரத்தை தெரிவிக்கவில்லை.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், இந்த ஆண்டுக்கான, தமது சொத்துக் கணக்குகளை இன்னும் காட்டவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...