டெல்லி: டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு என அரசின் சமீப கால நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றன.
நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்து, ஒரு அமைதியற்ற, நிம்மதியற்ற சூழலை உருவாக்கியுள்ளன.
இந்த நிலையில், தமது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பிரதமர் மன்மோகன் சிங் நேற்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் விளக்கம் தந்தார்.
அவரது 15 நிமிட நேர உரை எத்தனை அபத்தம் என்பதைப் பாருங்கள்… இதுகுறித்த உங்களின் பார்வையையும் பகிர்ந்து கொள்ளுங்கள்…
பிரதமர் பேச்சின் அபத்தம் 1: ‘நமது தேசத்தின் நலனை பாதுகாக்க சில நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆகிய விஷயங்களை முன்வைத்து நமது பொருளாதாரத்துக்குப் பெரும் ஆபத்து என்பது போல் பீதியைக் கிளப்புபவர்களை நம்ப வேண்டாம். இப்போது எழுப்பப்படும் கவலைகள் அடிப்படையற்றவை.
1991ம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்தினேன். அப்போது சிலர் இது குறித்து மக்களிடையே அச்சத்தைப் பரப்பினர்.
ஆனால், அவர்களால் தொடர்ந்து அம்முயற்சியில் வெற்றி காண இயலவில்லை. அதேபோல் இப்போதும் மக்களிடையே பீதியைக் கிளப்பும் முயற்சி பலிக்காது.’
உண்மை: முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேசத்துக்கு பொருளாதார சீர்த்திருத்தம் என்ற பெயரில் விஷ ஊசி போட்டது நான்தான் என்பதை எத்தனை கூசாமல், அதுவும் பெருமையாகப் பேசுகிறார் பாருங்கள். இருட்டில் தேசத்தை நிறுத்திவிட்டு ஒளிருது இந்தியா என்ற பாஜவின் அண்டப் புளுகை தோற்கடிக்க, மன்மோகன் சிங் விடும் ஆகாசப் புளுகு இது!‘நியாயமாக ரூ 17 உயர்த்தியிருக்க வேண்டும்’
பொருளாதார சீர்த்திருத்தங்களால் இந்தியா என்ற சந்தைக்கு எக்கச்சக்கமான குப்பைகள் வந்து குவிந்தன. இது பெரிய நன்மையா என்ன?
உடனே வேலை வாய்ப்புகள், ஐடி வளர்ச்சி என கூறிவிட வேண்டாம். நாம் இன்னும் இந்த இரண்டிலும் கூலிகளாகவே உள்ளோம். சுயமான உற்பத்தி, நிறைவான வளர்ச்சி என்ற இரண்டுமே நம்மவர்களுக்கு இன்னும் பிடிபடவில்லை. இங்கேயுள்ள மாபெரும் ஐடி நிறுவனங்கள் ஒன்றும் உற்பத்தி சார்ந்தவை அல்ல.. பிள்ளை பிடிக்கும் பெரிய கம்பெனிகள்… அவ்வளவுதான்!
பிரதமர் பேச்சின் அபத்தம் 2: நமக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 80 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நமது மக்களுக்கு இன்னல் தரக் கூடாதென்பதால், அதே அளவுக்கு இங்கு விலை உயர்த்தப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தாததால் எண்ணெய்த் துறை மானியமாக ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டி வந்தது.இந்த ஆண்டு அது ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும். டீசல் விலையை உயர்த்தாவிட்டால் அது ரூ. 2 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கும்.
டீசல் வகையில் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க அதன் விலையை ரூ.17 உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் வெறும் ரூ. 5 தான் உயர்த்தப்பட்டுள்ளது. மானிய விலையில் விற்கப்படும் டீசல் பெரும்பாலும் பணக்காரர்களின் பெரிய கார்களுக்குத்தான் பயன்படுகிறது. அவர்களுக்குப் பயன், மத்திய அரசுக்குப் பெரும் நிதிப் பற்றாக்குறையா?
உண்மை: இந்தியாவை விட இன்னும் அதிக அளவு, அதாவது கச்சா எண்ணெயை கிட்டத்தட்ட 100 சதவீதம் இறக்குமதி செய்துவரும் பாகிஸ்தானில் இந்தியாவைவிட பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மிகக் குறைவு. அதாவது 30 சதவீதம் வரை குறைவு. எப்படி?பணம் மரத்தில் காய்க்கலை..
சரி, கச்சா எண்ணெயின் இன்றைய விலைதான் என்ன? பீப்பாய் ஒன்று 93 டாலர்கள். ஆனால் இதே கச்சா எண்ணெய் மூன்று ஆண்டுகளுக்கு முன் உச்சத்தில் இருந்தது… அதாவது 160 டாலர்கள் வரை. அன்றைக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ 38தான். அன்றைக்கு காட்டியது லிட்டருக்கு ரூ 5 வரை நஷ்டம் என்ற கணக்கு. இன்று கச்சா விலை 100 டாலருக்கும் குறைவுதானே. மூன்றுமாதங்கள் முன்பே ஆர்டர் தந்தாகிவிட்டது என்று பார்த்தாலும், அன்று விலை இன்னும் 6 டாலர்கள் குறைவாகத்தானே இருந்தது.
பெட்ரோல் விஷயத்தில் தொடர்ந்து அத்தனை அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் ஆண்டுக்கு ரூ 20000 கோடி வரை நிகர லாபம் பார்த்து வருகின்றன. ஆனால் விலையை ஏற்ற நஷ்டம் என்ற ஒரே பொய்யை விதவிதமாகக் கூறி வருகின்றனர்.
இத்துடன் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் இன்னொரு கொடுமை. ஆனால் நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவர் இதுபற்றியெல்லாம் பேசாமல், வெறும் நஷ்டக் கணக்கை பொத்தாம் பொதுவாகக் கூறுவது அபத்தத்தின் உச்சம்.
ஒரு நிறுவனத்தின், அதுவும் அரசு நிறுவனத்தின் நஷ்டத்துக்கு காரணங்களா குறைவு?
அப்புறம் டீசல் பணக்காரர்களின் கார்களுக்குத்தான் அதிகம் பயன்படுகின்றதாம். அடடா.. பிரதமர் அவர்களே.. நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி போலும்.. டீசலின் பயன்பாடு ஏழை எளிய விவசாய மக்களுக்குத்தான் அதிகம் என்பதால்தானே அதில் இத்தனை நாள் கை வைக்காமல் இருந்தீர்கள்? டீசல் பணக்காரர்களுக்கானது என்ற மகா உண்மை இத்தனை நாள் தெரியாமல் போனது எப்படி? அப்படியெனில் ஏழைகளின் எரிபொருளான பெட்ரோல் விலையை ஏன் தாறுமாறாக உயர்த்திக் கொண்டே போகிறீர்கள்?
டீஸல் விலை உயர்வு என்றதும், பஸ், ஆட்டோ, லாரி உள்பட அனைத்துக் கட்டணங்களும் உயர, காய்கறி, மளிகைப் பொருள் என அனைத்தின் விலைகளும் உயர்கின்றனவே… அது சட்ட விரோதம்தானே..? அதைத் தடுக்க உங்களுக்கு துப்பில்லாமல் போனது ஏனோ?
பிரதமர் பேச்சின் அபத்தம் 3: ரூ. 5 உயர்த்திய பிறகும் ஒரு லிட்டர் டீசலின் விலை இறக்குமதி விலையைவிட ரூ. 13.86 குறைவாகவே இருக்கிறது. மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ. 32.70 குறைவாக விற்கப்படுகிறது. சமையல் எரிவாயு ஒரு சிலிண்டருக்கு ரூ. 347 குறைவாக விற்கப்படுகிறது. இதையெல்லாம் சமாளிக்க ஏது பணம்? பணம் மரத்தில் காய்க்கவில்லை. இந்த நடவடிக்கையை இப்போது எடுக்காவிட்டால் வரவுக்கும் மேல் தாங்க முடியாத அளவுக்கு அரசின் செலவுகள் கூடிவிடும்.
அதே சமயம், பெட்ரோல் மீதான ரூ.5 மதிப்பிலான வரியைக் குறைத்துள்ளோம். ஸ்கூட்டர், மோட்டர் சைக்கிள்கள் ஓட்டிச் செல்லும் கோடிக் கணக்கான நடுத்தர மக்கள் மேலும் பாதிக்கப்படக் கூடாதே என்பதால்தான் அவ்வாறு செய்தோம். சமையல் எரிவாயு சிலிண்டரைப் பொருத்தவரை, பெரும்பாலான மக்கள் ஆண்டுக்கு 6 சிலிண்டர்களைத்தான் உபயோகப்படுத்துகிறார்கள். புதிய விதிமுறையினால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. மற்றவர்களைப் பொருத்தவரை, மானிய விலையில் 6 சிலிண்டர்கள் என்பது உறுதி. அதற்கு மேல் பயன்படுத்தினால் அவர்கள் கூடுதல் விலை தந்தே ஆக வேண்டும்.
உண்மை: கவுண்டர் கேட்பது போலத்தான் கேட்கத் தோன்றுகிறது… ‘உன்னையெல்லாம் யார் இப்படி பேசச் சொல்லிக் கொடுக்கிறாங்க!?’சொந்த வணிகத்துக்கு சூனியம்!
பிரதமர் அவர்களே… நாட்டு நிலவரம் தெரியாவிட்டால் தெரியாவிட்டால் வாயை மூடிக் கொண்டு இருப்பதுதானே… பெரும்பாலான மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 12 சிலிண்டர்கள் இருந்தே தீர வேண்டும்.
உண்மையிலேயே நீங்கள் ஏழைகள் மீது கரிசனம் கொண்டவர் என்றால், நியாயமாக பணக்காரர்களுக்கு அனைத்து சிலிண்டர்களையும் மார்க்கெட் விலையிலும், ஏழைகளுக்கு மாநிய விலையிலும் தர வேண்டும். காரணம் ஏழைகள், நடுத்தர மக்களை விட பணக்காரர்கள் பல மடங்கு அதிக சிலிண்டர்கள் வாங்குகிறார்கள். அதேபோல, எம்பிக்கள், அமைச்சர்கள், குடியரசுத் தலைவர்கள் போன்றவர்களுக்கு இலவச சிலிண்டர்களை முற்றிலும் ரத்து செய்திருக்க வேண்டும்.
ஏழை நடுத்தர மக்களுக்கு பணம் என்ன மரத்திலா காய்க்கிறது பிரதமரே? நாங்கள் இத்தனை நாட்கள் கேட்ட கேள்வியை திருப்பிக் கேட்டால் நீங்கள் நியாயவாதி ஆகிவிட மாட்டீர்கள்!
பிரதமர் பேச்சின் அபத்தம் 4: சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து இருப்பதால் சிறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டு அடிப்படை இல்லாதது ஆகும். பெரு நகரங்களில் வணிக வளாகங்கள் அதிகரித்து இருப்பது போல் சிறிய கடைகளும் பெருகி உள்ளன. வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் அனைவருக்குமே வாய்ப்புகள் உண்டு.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் விவசாயிகள் பயன் அடைவார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் சேமிப்பு கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள், நவீன போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றில் 50 சதவீத முதலீட்டை மேற்கொள்ளும். இதனால் காய்கறிகள், பழங்கள் ஆகியவை சேதம் அடைவது தடுக்கப்படும். இது விவசாயிகளுக்கு மட்டும் இன்றி நுகர்வோருக்கும் பலன் அளிப்பதாக அமையும்.
உண்மை: சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ், பிர்லா, பார்தி போன்ற பெருமுதலாளிகளை அனுமதித்தே பெரும் தவறுதான். இந்த பெருமுதலாளிகள் வைத்திருக்கும் கடைகளில் நமக்கு தேவையானதை, தேவையான அளவு வாங்க முடியவில்லை. அவர்களை வைத்ததுதான் அளவு, தருவதுதான் தரம் என்றாகிவிட்டது. இந்த லட்சணத்தில் அந்நிய முதலாளிகள் வேறு.
சொந்த நாட்டு மக்களின் வணிகம் அழியும் என்பது ஒருபக்கம், நமது நுகர்வு முறை மாறி, வருவாய் – நுகர்வு – கடன் என்ற நச்சுச் சூழல் நிரந்தரமாய் நின்றுபோகும்.
சீர்த்திருத்தங்களைச் செய்யாததால்தான் பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது என்ற அரிய கண்டுபிடிப்பையும் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ளார். இது முற்றிலும் பொய்யான வாதம். உலகில் இதுவரை திடீர் வீழ்ச்சி கண்ட அத்தனை நாடுகளும் பொருளாதார சீர்த்திருத்தத்தை கடைப்பிடித்தவைதான். அப்படியெனில் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ந்ததற்கு சீர்திருத்தம்தானே காரணம்? இதை ஒப்புக்கொள்வாரா மன்மோகன்? மாட்டார், அதற்கு வேறு காரணங்கள் கூறுவார்.
தனது கையாலாகாத்தனத்தை மறைக்க விதவிதமான விளக்கங்களைக் கூறி தன்னைத் தானே திருப்திப்படுத்திக் கொள்ளும் ஒரு மூன்றாம் தர அரசியல்வாதியாகிவிட்ட டாக்டர் மன்மோகன் சிங்கைப் பார்த்து பரிதாப்படுவதா? சொந்தப் பொருளாதாரத்தை சொந்த நாட்டின் வளங்களை வைத்துக் கட்டமைக்கத் தெரியாமல், நாட்டை வெறும் சந்தையாக மாற்றுவதே சாதனை என்பதில் உறுதியாக நிற்கும் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டத்தை நினைத்து ஆத்திரப்படுவதா?
பிரதமர் அவர்களே.. என்றைக்கு நீங்கள் வல்லரசுகளின் தரகர் என்ற நிலையிலிருந்து மாறி, 120 கோடி மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கப் போகிறீர்கள்?
No comments:
Post a Comment