Tuesday, July 25, 2017

காஞ்சியில் தொண்டை மண்டல ஆதீன மடத்தை கைப்பற்ற நித்யானந்தா முயற்சி?

 காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாசர் மடத்தை, நித்யானந்தா கைப்பற்ற முயற்சி செய்துள்ளதாக, ஆதீனத்தை சேர்ந்தவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரத்தில் தொண்டை மண்டல, கொண்டை கட்டி முதலியார் சமுதாயத்திற்குட்பட்ட, தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாசர் மடம் உள்ளது.

புகார் : இந்த மடத்தின், 232வது பட்டம் ஆதீனமாக, திருவம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சார்யார் உள்ளார். மடத்திற்கு, பல இடங்களில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் நிலங்கள் உள்ளன.தற்போது இந்த மடத்தை, நித்யானந்தா ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகவும், அவரின் சீடர்கள் மடத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், ஆதீனம் கடத்தப்பட்டதாகவும், அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தொண்டை மண்டல ஆதீன மடத்தில், சுந்தரேசன், 18; சத்தரதானந்தா, 17; ஞானமூர்த்தி, 50; ஞானப்பிரியா என, நான்கு, நித்யானந்தா சீடர்கள் தங்கியுள்ளனர்.நித்யானந்தா ஆசிரம கொடியுடன் அவர்களின் கார், ஆதீனத்திற்காக, நித்யானந்தா வழங்கியுள்ளதாக கூறப்படும் புதிய காரும், ஆதீனத்தின் வெளியே நிற்கின்றன.
இப்போதைய ஆதீனத்தின் சொந்த ஊர், தேனி மாவட்டம், கம்பம் அருகில் உள்ள காமகவுண்டன்பட்டி. மின் வாரியத்தில் பணியாற்றி, 1991ல் ஓய்வு பெற்ற இவர், 2000ம் ஆண்டு, ஆதீனமாக பொறுப்பேற்றார்.

இதுகுறித்து, தொண்டை மண்டல ஆதீனம் மடத்தின் தலைவர், திருவம்பல தேசிக ஞானபிரகாச பரமாச்சார்யார், கூறியதாவது:இந்த மடம் தொண்டை மண்ட முதலியார் சமூகத்திற்கு சொந்தமானது. என்னை நீக்கி விட்டு வேறு ஒருவரை ஆதீனமாக நியமிக்க எங்கள் சமூகத்தில் உள்ளவர்கள் முயற்சி செய்கின்றனர்.ராஜா விஜயகுமார் என்பவர், இளைய சன்னிதானம் என, கூறிக்கொள்கிறார். ஆதீனத்தை தேர்ந்தெடுக்க கமிட்டி உள்ளது.எனக்கு முன்பே நித்யானந்தாவை தெரியும்.சீடர்களை அனுப்பி எனக்கு உதவி செய்து வருகிறார். காரும், அதற்கு டிரைவரையும் அனுப்பியுள்ளார்.என்னை அவர் கடத்தியதாக சொல்வது பொய். நான் சன்னிதானமாக இருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. அதற்காக இப்படி பொய் புகார்களை கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

முடிவு : தொண்டை மண்டல முதலியார் சமூக குழுவின் உறுப்பினர், சண்முகம் என்பவர் கூறுகையில், ''தொண்டை மண்டல மடத்திற்கு, எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் ஆதீனமாக முடியும். அவரை தேர்ந்தெடுக்க குழு உள்ளது. நித்யானந்தா சீடர்கள் மடத்திற்குள் புகுந்துள்ளனர். ஆதீனத்தை தனிமைப்படுத்தி விட்டனர்,'' என்றார்.

தொண்டை மண்டல சமூக மாநில தலைவர், ராஜா விஜயகுமார் கூறியதாவது:நித்யானந்தா சீடர்கள் மூன்று ஆண்டுகளாக இங்கு தங்கியுள்ளனர். சன்னிதானம் செய்ய வேண்டிய பூஜைகளை இவர்கள் செய்கின்றனர். எங்கள் சமூக நிர்வாகிகள், 3-0ம் தேதி இங்கு வருகின்றனர். அன்று, இந்த பிரச்னைக்கு முடிவு எடுக்கப்படும்.ஆதீனத்திற்கு எதிராக நாங்கள் செயல்பட விரும்பவில்லை. நாங்கள் அவருக்கு கார் வாங்கி கொடுத்துள்ளோம். அந்த காரில் சுவாமி செல்வதில்லை. நித்யானந்தா வழங்கிய காரில் தான் செல்கிறார். மடத்தை நித்யானந்தா கும்பலிடம் இருந்து மீட்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...