கோடநாடு எஸ்டேட் மர்மம், மரணங்கள், சர்ச்சைகள் நிறைந்தது. அங்கு நுழைந்தவர் எல்லாம் நிம்மதியிழந்த வரலாறு, அதன் நுழைவாயிலில் எழுதப்படாத ஒன்று!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை சென்ற பின் உயிரிழந்தார்... தோழி சசிகலாவும் சிறை புகுந்தார்... எஸ்டேட் காவலாளி கொலையுண்டார்... கொலையில் தொடர்புடைய முக்கிய நபர் சயானின் மனைவி, மகள் விபத்தில் உயிரிழந்தனர்... ஸ்டேட் அலுவலக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தற்கொலை செய்து கொண்டார்... கார் டிரைவர் விபத்தில் பலியானார்... தற்போது, அடுத்து யார் தலையை உருட்டப்போகிறதோ என்ற பீதியில் கதிகலங்கி நிற்கின்றனர், அ.தி.மு.க., புள்ளிகள்.
கடந்த, 1991ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், சசிகலா குழுவினர் கோடநாடு பகுதியில், கிரேக் ஜோன்ஸ் என்பவருக்கு சொந்தமான எஸ்டேட்டை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 1994-95ல் கோடநாடு எஸ்டேட், பங்களா, தொழிற்சாலை ஆகியவற்றை, சசிகலாவுடன் சேர்ந்து ஜெயலலிதா வாங்கினார். அப்போது, 830 ஏக்கரில் இருந்த எஸ்டேட், 900 ஏக்கராக விரிவாக்கப்பட்டது.
2001ம் ஆண்டில் மீண்டும், அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், அரசியலில் பிசியான ஜெயலலிதா சில முறை, சில மணிநேரங்கள் மட்டுமே இங்கு வந்து சென்றாலும், இங்கு தங்கியதில்லை. முதல் முதலாக, 2006ம் ஆண்டு, இங்குள்ள பழைய பங்களாவில் மட்டுமே தங்கி வந்தார். அந்த பங்களாவை ஒட்டி ஏரியுடன் இருந்த சூழல் அவரை வெகுவாக கவர்ந்துள்ளது.
பங்களா கட்டுமான பணி:
அடுத்தபடியாக, 2007ம் ஆண்டில் புதிய பங்களா கட்டுமான பணி வேகம் பிடித்தது. அப்போதே, அந்த கட்டடம் தொடர்பான சர்ச்சைகளும் எழ துவங்கின. அதில் எழுந்த எல்லா தடைகளையும் தாண்டி, 2011ல் ஜெயலலிதா கோடநாடு பங்களாவில் குடியேறினார். மீண்டும் ஆட்சி பொறுப்பில் வந்தபோது, கோடநாடு வருவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். 'கோடநாடு முகாம்' என்ற பெயரில், அரசு அலுவலர்களும் வரத்துவங்கினர்.
தொடர் அசம்பாவிதங்கள்:
கடந்த 2016ல் ஜெயலலிதா மரணம், சசிகலா சிறைவாசம், 2017 ஏப்.,24ல் கோடநாட்டில் காவலர் ஓம் பகதுார் கொலை, பங்களாவில் பொருட்கள் கொள்ளை, ஜெ., டிரைவராக இருந்த கனகராஜ் விபத்தில் மரணம், எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ் தற்கொலை ஆகியவை தொடர்ச்சியாக நடந்தன. அதற்கு பின், கோடநாடு பங்களா குறித்த பல்வேறு சர்ச்சைகள் உருவாகின. இந்த சம்பவத்துக்கு காரணமாக, 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஊட்டி கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. கடந்த மே மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், இந்த வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போல, கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மீண்டும் வாக்குமூலம் பதிவு:
வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட சயானின் வாக்குமூலத்தை, கடந்த 17ம் தேதி மீண்டும் போலீசார் பதிவு செய்துள்ளனர். அதில், அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் பற்றி கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக, 'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், மக்களை திசை திருப்ப, கோடநாடு வழக்கு கையில் எடுக்கப்பட்டுள்ளது; எதையும் அ.தி.மு.க., சந்திக்கும்' என, முன்னாள் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோடநாடு எஸ்டேடை வாங்கியது முதல், தொடரும் சர்ச்சைகளும், பரபரப்பு சம்பவங்களும், அரசியல் திருப்பங்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அந்த சங்கிலி தொடரின் தொடர்ச்சியாக, இந்த வழக்கின் அடுத்த நகர்வு, வரும், 27 ம் தேதி நடக்க உள்ள வழக்கு விசாரணையின்போது தெரிய வர உள்ளது.
வழக்கு இறுதி கட்டத்தை எட்டவில்லை!
சட்ட வல்லுனர்கள் கூறியதாவது: இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டியதாக தெரியவில்லை. அதில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், போலீசாரிடம் சில விஷயங்களை தெரிவிப்பதாக கூறி மனு அளித்துள்ளதும், போலீசாரும், அவரை விசாரிக்க கோர்ட்டில் அனுமதி கேட்டதும் ஒரே நேரம் என்பதால், இதில், முக்கிய ஆதாரங்கள் இல்லாமல் இந்த நகர்வு நிகழ வாய்ப்பில்லை. கடந்த ஆட்சியின் போது, ஆளும்கட்சியின் மீது உள்ள அச்சத்தால், அவர் பகிரங்கமாக போலீசாரிடம் பல தகவல்களை சொல்லாமல் இருந்ததால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கலாம்.
இதில், சயான், வாளையார் மனோஜ் ஆகியோர், ஏற்கனவே டில்லியில் அளித்த ஒரு பேட்டியின்போது, ஆளும்கட்சியினர் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினர். வரும், 27ல் நடக்க உள்ள விசாரணைக்கு பின், கோர்ட் அனுமதி தந்தால், குறிப்பிட்ட சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது. அதற்கு பின், மற்ற விபரங்கள் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
No comments:
Post a Comment