ஒரு ஊருல பொழப்பத்த ஒருத்தன் இருந்தான். அவனுக்கு 30 வயசு இருக்கும். ஏதாவது சொல்லிண்டிருப்பான். ஊர்ல அவனை #திருவாழத்தான்னு கூப்பிடுவா(அந்தப் பெயரில் ஒரு எழுத்தாளர் உண்டு)
இந்தத் திருவாழத்தான் ஒரு நாள் அலைஞ்சு திரிச்சுட்டு ஊருக்கு வரும் போது இராத்திரி இருட்டி விட்டது.
ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தான். அந்த வீட்டு அம்மாள் அதிரசம் பண்ணிக்கொண்டிருந்தாள். அதிரசத்தை எண்ணெயில் போடும் போது சொய்ய் ன்னு சத்தம் வரும். திருவாழத்தான் சொய்ய் சப்தங்களை எண்ணிக்கொண்டே வந்தான். மொத்தம் 64 சப்தம் வந்தது.
வீட்டுக்கார அம்மா எல்லாம் முடிச்சுட்டு தூக்கில் எண்ணி அதிரசங்களைப் போட்டு மூடி மேலே மாட்டினாள். காத்து வாங்கறதுக்காக வாசத்திண்ண்க்கு வந்தாள்.
திருவாழத்தான் உட்கார்ந்து இருப்பதைக் கண்டாள்.
யாரப்பா நீ? என்றாள்.
அம்மா ரொம்பப் பசிக்குதம்மா, ஏதாவது கொடுங்கம்மா என்றான்.
இந்த நேரத்தில ஒண்ணுமில்லை என்றாள் அவள்.
ஏம்மா நீ பண்ணிவச்சுருக்கிற 64 அதிரசத்தில ஒண்ணு குடேன் என்றான்.
அந்தம்மாவுக்கு அதிசயமாகப் போச்சு. அய்யோ இவன் மந்திரவாதி என்று நினைத்து அடியே மீனாட்சி,காமாட்சி,சுப்பம்மா,குப்பம்மா எல்லாம் வாங்கடி. மந்திரவாதி வந்திருக்காரு என்று சத்தம் போட்டாள். பெரிசில இருந்து குஞ்சு குளுவான் வரை திருவாழத்தானைப் பார்க்க ஒரே கூட்டம். விஷயம் ராஜாகாதுக்குப் போச்சு. அவனும் ஒரு நல்ல மந்திரியா தேடிகிட்டு இருந்தன். உடனை திருவாழத்தானை மந்திரியாக்கி அவனுக்கு ஓரு அரண்மனையும் கொடுத்து, காவல்காரன், வேலைக்காரன், குதிரை, வண்டி எல்லாம் வழங்கப்பட்டன.
திருவாழத்தான் மந்திரியாக சுக போகத்தோடு வலம் வந்தான்.
ஒரு நாள் சலவைக்காரன் கழுதை காணாமல் போய் விட்டது. அரண்மனை முழுவதும் , ஊருக்குள்ளும் துணிகள் தரவேண்டும்.
ராஜாவிடம் புகார் கொடுக்க வந்திருந்தான். தலைமேல் பல துணி மூட்டைகள் வைத்திருந்தான்.
ராஜா உடனே மந்திரியைக் கூப்பிட்டார். ராஜாவின் அரண்மனைக்குப் பின் தான் திருவாழத்தான்..தப்பு தப்பு மந்திரி வீடு.
மந்திரிவந்தார். அதிரசம் கணக்குப் பண்ணின மந்திரிக்கு சூழ்நிலை டக்கெனப் புரிந்தது.
மாமன்னரே இந்தச் சலவைக்காரன் விஷயமாகவும் இவன் கழுதை விஷயம் பற்றித் தானே என்னை அழைத்தீர்கள்? என்றான்.
(மூட்டை மூட்டையாகத் துணியைப் பார்த்ததும் இவன் சலவைக்காரன், இவனே சுமக்கிறான், அதனால் கழுதையில்லை என்று நம்ம மந்திரி புரிந்து கொண்டார்)
மன்னர் அசந்து விட்டார். சலவைக்காரனும் தான்.
டேய் நீ கவலைப் படாதே என் மந்திரி உன் கழுதையை ஒரு வாரத்தில் கண்டு பிடித்துத் தருவார், நீ போய் வா என்றார்,ராஜா.
மந்திரி என்னடா செய்வது என்று எண்ணினார். 100 தங்க நாணயங்களை எடுத்துக் கொண்டு பக்கத்து ஊர் சலவைக்காரனிடம் இரவு சாதாரண உடையில் சென்றார். அவனிடம் ஐந்து கழுதைகள் இருந்தன.
கதவைத் தட்டினார். அவனும் திறந்தான். நான் போன ஜன்மத்தில் உன் அண்ணனாக இருந்தேன். இப்ப உன்னைப் பார்க்கவந்தேன் என்றார். வாங்கண்ணா என்று அவனும், அவன் மனைவியும் அழைத்தனர். இந்த வழியாகப் போனேன். முன் ஜன்ம வாசனை வந்தது. அதுதான் வந்தேன். இந்தா என் சொத்தில் பாதி 50 தங்க நாணயங்கள். வாங்கிக் கொள். எனக்கு ஒரு நல்ல கழுதையாகக் கொடு என்றார்.
கழுதைக்கு 50 பொற்காசா?
மனசுக்குள் அவனுக்கு மகிழ்ச்சிப் பிரவாகம். நல்ல கொழுத்த கழுதையாகத் தந்தான். இரவோடு இரவாக நம்ம மந்திரி கழுதையை ஓட்டி வந்து அரண்மனைக்குப் பின்னால் மரத்தில் கட்டினார்.
மறுநாள் ராஜாவிடம் போய் கழுதை கிடைத்து விட்டது என்றார். ராஜா சலவைக்காரனை ஆளனுப்பி வரச்சொன்னான். அவனும் வந்தான். கழுதையைப் பார்த்தான். அவன் தொலைத்த கழுதை நோஞ்சான் கழுதை. இது கொழு கொழு கழுதை. யாருக்குத் தெரியப் போகிறது ?என் கண்ணே கிடச்சுட்டியா என்று கழுதையைக் கட்டிக் கொண்டான். ராஜாவையும்,மந்திரியையும் பல முறை வணங்கி கழுதையை ஓட்டிச் சென்றான். அன்று அரசவையில் நமது மந்திரி பிரதம மந்திரியாகப் பிரகடணம் பண்ணப்பட்டார்.
50 பொற்காசில் தலமை அமைச்சர். இன்னும் கூடுதல் வசதி, வாய்ப்புக்கள்.
சில நாட்கள் கழிந்தன.
ராஜாவின் தங்க எண்ணெய் கிண்ணத்தைக் காணோம்.
மந்திரியாரே அந்தக்கிண்ணம் மூன்று தலைமுறையாக அரண்மனையில் உள்ளது. இரண்டு நாட்க்களில் கண்டு பிடித்துத் தர வேண்டும், இல்லையேல் உம் கண்ணை நோண்டி மூக்கை அறுத்து விடுவேன் என்றார் ராஜா.
முக்கிய மந்திரி புலம்பிக் கொண்டே பின் புறம் உள்ள தன் அரண்மனைக்குப் போனார். போச்சு போச்சு கண்ணுக்கும்,மூக்குக்கும் ஆபத்து வரப்போகிறது என்று சொல்லிக் கொண்டே போனார்.
அங்கு வேலை செய்து கொண்டிருந்த வேலைக்காரிகளில் ஒருத்தி பெயர் கண்ணாத்தா, இன்னொருத்தி பெயர் மூக்காயி.
இருவரும் ஓடிவந்து மந்திரி காலில் விழுந்து சாமி நாங்கதான் தங்கக் கிண்ணத்தைத் திருடி இந்தக் கிணத்துக்குள் போட்டிருக்கிறோம், காப்பாத்துங்க என்று காலை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.பிறகு என்ன? நாளைகாலை மந்திரி ராஜகுருவாகப் பதவி ஏற்கிறார். அனைவரும் வருக,
No comments:
Post a Comment