ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த ஜனவரி 21 அன்று சிபிஐ, மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சில நாட்களில் சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
2007ம் ஆண்டு முந்தைய காங்., ஆட்சியின் போது மத்திய நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை பெற அனுமதி அளித்ததாகவும், இதற்காக சட்ட விரோதமாக பணம் கை மாறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பிப்., முதல் வாரத்தில் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

சிதம்பரத்திடம், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன உரிமையாளர்களான பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோருடன் நடந்த சந்திப்பு, எதன் அடிப்படையில் ரூ.305 கோடி வெளிநாடு முதலீடுகளை பெற அனுமதி அளிக்கப்பட்டது என்பன தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சிதம்பரத்திடம் விசாரிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் பெற்றது, அந்நிய முதலீடுகள் பெறுவதற்கான விதிகளை மீறியது ஆகியவற்றின் அடிப்படையில் சிபிஐ.,யும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி கடந்த ஆண்டு சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டார். ஆனால் வெகு சீக்கிரமே ஜாமினில் வெளி வந்த கார்த்தி, தொடர்ந்து ஜாமினை நீட்டித்து வருகிறார். இந்த வழக்கில் சிதம்பரமும் சமீபத்தில் முன்ஜாமின் பெற்றுள்ளார். இதற்கிடையில் இவ்வழக்கில் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, தான் அப்ரூவராக மாற விரும்புவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

No comments:
Post a Comment