Tuesday, February 26, 2019

ஒண்ணரை பக்க நாளேடு - #துக்ளக்

அ.தி.மு.க. அணிக்கு பா.ம.க. போய் விட்டதே என்று கவலைப்படும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளைத் தேற்றும் வகையில், தி.மு.க. அணிக்கு பா.ம.க. போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று விளக்குகிறது இந்த இதழ்.
டூப்-48 : கப்ஸா - 14
ஓசியில் படிக்க வேண்டிய கற்பனை பத்திரிகை.
தி.மு.க. - பா.ம.க. உடன்பாடு
பா.ம.க.வுக்கு 8 தொகுதி, 1 ராஜ்ய சபா ஸீட்
26.12.2019
சென்னை
தி.மு.க.வுடனும் அ.தி.மு.க.வுடனும் கூட்டணிக்காக பேசி வந்த பா.ம.க., இறுதியில் தி.மு.க. அணியில் இடம் பெற்று விட்டது. பா.ம.க.வுக்கு எட்டு எம்.பி. தொகுதிகளையும், ஒரு ராஜ்ய சபா ஸீட்டையும் தரும் ஒப்பந்தத்தில் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
வி.சி.க.நிலை
இதனால் அதிர்ச்சியுற்ற திருமாவளவன், ‘தி.மு.க. எங்கள் முதுகில் குத்தும் என் பது நான் முதலிலேயே எதிர்பார்த்ததுதான். நம்ப வைத்து கழுத்தறுக்கும் தி.மு.க. அணியில் இருப்பதை, தலித் இன மக்கள் முதலிலிருந்தே விரும்பவில்லை. தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருவதால், மக்கள் நலனுக்காக அ.தி.மு.க. அணியில் இடம் பெறுவதென வி.சி. இயக்கம் முடிவெடுத்துள்ளது’ - என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
3 ஸீட் :
இதனால் வி.சி. கட்சிக்கு 3 ஸீட் தர அ.தி.மு.க. தலைமை ஒப்புக் கொண்டுள்ளது. அ.தி.மு.க. அணியில் திருமாவளவன் சேர்க்கப்பட்டுள்ளதை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை வரவேற்றுள்ளார்.
முரண்பாடு :
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களுக்கும் பா.ம.க.வுக்கும் அடிப்படையிலேயே கொள்கை முரண்பாடுகள் உண்டு. மோடியையும் பா.ஜ.க.வையும் தரக் குறைவாக விமர்சிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளவர் பெரியவர் ராமதாஸ். அவர் தி.மு.க. அணிக்குப் போனதற்கு நன்றி. இப்போது அமைந்துள்ளதுதான் இயற்கையான கூட்டணி. ஊழல் ஒழிப்புக் கொள்கையின் அடிப்படையில்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம். சகோதரர் திருமாவளவன் அவர்களை பா.ஜ.க. அன்போடு வரவேற்கிறது’ என்று கூறியுள்ளார்.
ராமதாஸுக்கு அமைச்சர்கள் கடும் கண்டனம்
தி.மு.க. அணியில் சேர்ந்த ராமதாஸைக் கண்டித்து அமைச்சர்கள் கூறியதாவது:
ஜெயகுமார்: மரம் வெட்டியே கட்சி வளர்த்த ராமதாஸ், தன் மகனை மத்திய மந்திரியாக்கும் ஒரே கொள்கையோடு தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார். தி.மு.க.வின் ஊழல்களைப் பற்றி கவர்னருக்கும் மத்திய அரசுக்கும் புகார் அனுப்பியவர், அரசியல் ஆதாயத்துக்காக வெட்கம் மானம் இன்றி தி.மு.க.வை ஆதரிக்கிறார்.
செல்லூர் ராஜு: பா.ம.க.வுக்கு எப்போதும் கொள்கை அரசியலில் நம்பிக்கை இல்லை. செத்தாலும் திராவிடக் கட்சிகளோடு கூட்டு வைக்க மாட்டேன் என்று சவடால் அடித்து விட்டு தி.மு.க. வுடன் கூட்டு வைத்துள்ளார். அம்மாவை எதிர்த்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைகள்தான், அம்மாவின் மரணத்துக்கே காரணம். எனவே, ஆறுமுகசசாமி கமிஷன் ராமதாஸை விசாரிக்க வேண்டும்.
திண்டுக்கல் சீனிவாசன்: பா.ம.க.வுக்கு 2 சதவிகித ஓட்டு கூட கிடையாது. தி.மு.க. ஊழல்கள் பற்றி கடந்த ஆண்டு பிரதமர் கிளிண்டனிடம் புகார் மனு அளித்த ராமதாஸ், அதை மறந்துவிட்டு தி.மு.க. அணியில் சே்ர்ந்துள்ளார். தமிழ்நாட்டில் ஜாதிக் கலவரத்தை வளர்த்து விட்டதே பா.ம.க.தான். சின்ன ஐயா ஜி.கே.மணி மத்திய மந்திரியாக இருந்தபோது செய்த ஊழல் கோப்புகள் எங்களிடம்தான் உள்ளன. நண்பர் திருமாவளவன் மத்திய மந்திரியாக இருந்தபோது ஆற்றிய சாதனைகள் ஏராளம்.
தி.மு.க. - காங்கிரஸ் தலைவர்களுக்கு பா.ம.க. விருந்து.
தி.மு.க. கூட்டணியில் இணைந்ததையொட்டி, தி.மு.க. - காங். தலைவர்களுக்கு தைலாபுரத்தில் ராமதாஸ் விருந்தளித்தார். விருந்தில் ராமதாஸ் பேசியதாவது:
இலங்கைப் பிரச்னையில் கலைஞர் எடுத்த உண்ணாவிரதம் போன்ற ஒப்பற்ற நடவடிக்கைகளால்தான், ஈழத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தது. அவரைப் போல் தமிழை வளர்த்த தலைவர் யாரும் இல்லை. அ.தி.மு.க.வில் யாருக்கும் தமிழே சரியாக வராது. தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடந்தாலும் அதை கலைஞர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அராஜகம் நடந்தாலும் குறிப்பிட்ட அளவைத் தாண்ட விட மாட்டார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இமாலய ஊழல்களைச் செய்து வருகிறது. டெண்டர், முட்டை ஊழல்கள் குறித்து கவர்னரிடம் எத்தனையோ மனு கொடுத்தும் மோடி அரசு பாதுகாப்பதால் அ.தி.மு.க. தப்பித்து வருகிறது. இந்தத் தேர்தல் அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும்..
மோடி மீண்டும் பிரதமரானால் அன்புமணி தப்ப முடியாது
- முதல்வர் எடப்பாடி - ஓ.பி.எஸ்.
கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராமதாஸ் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘அம்மாவின் படத்தை சட்டசபையில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவரை, கூட்டணியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று நாங்கள் மறுத்து விட்டதால்தான் ராமதாஸ் தி.மு.க. அணிக்கு தாவி விட்டார். இவரது மகன் மத்திய அமைச்சராக இருந்தபோது மெடிகல் காலேஜுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்த விவகாரம் இன்னும் முடியவில்லை. மோடி மீண்டும் பிரதமரானால், அன்பு மணி தப்ப முடியாது. சென்ற தேர்தலில் ‘மாற்றம் - முன்னேற்றம் - அன்புமணி’ என்று வீறாப்பாக விளம்பரப்படுத்தி விட்டு, இப்போது திராவிடக் கட்சியிடம் சரணாகதி அடைந் திருப்பது வெட்கக் கேடு’.
இலங்கைப் பிரச்னையில் தி.மு.க. - காங்கிரஸ் துரோகத்தை மன்னிக்க முடியாது - திருமா ஆவேசம்.
அ.தி.மு.க. பிரச்சாரக் கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:
‘வெறி பிடித்த சிங்கள அரசு ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையும் அழிப்பதற்கு, தி.மு.க.வும் காங்கிரஸும் உடந்தையாக இருந்ததுதான் காரணம். தமிழகத்தில் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதில்தான் தி.மு.க. குறியாக இருந்ததே தவிர, இலங்கைத் தமிழர்கள் பலியானதைத் தடுப்பதில் அக்கறை காட்டவேயில்லை. தமிழர்களை ஏமாற்றத்தான் உண்ணாவிரதம் போன்ற கபட நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அந்த துரோக அணியில் தொடர்ந்தால், எதிர்கால சமுதாயம் மன்னிக்காது என்பதால்தான் அங்கிருந்து வெளியேறினேன். ஆகவே 21 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைப்போம்.’
பா.ம.க. இருக்கும் அணியே வெற்றி பெறும். ஸ்டாலின் பேட்டி
ராமதாஸ் விவகாரம் குறித்து ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:
கே.: நம்ப வைத்து கழுத்தறுப்பது தி.மு.க.வின் வழக்கம் என்று திருமாவளவன் கூறியுள்ளாரே?
ப: 2016 சட்டசபைத் தேர் தலில் விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி என்று ஆரம்பித்து, தி.மு.க.வை வெற்றி பெற விடாமல் கழுத்தறுத்தவருக்கு எப்படி கூட்டணியில் இடம் தர முடியும்? அவர் அ.தி. மு.க.வுக்கு ஓடும் மனநிலையில்தான் இங்கு பேசிக் கொண்டிருந்தார்.
கே.: ராமதாஸ் உங்கள் அணியில் சேர்ந்துள்ளது பற்றி?
ப: எப்போதும் மருத்துவர் ராமதாஸ் சரியான நிலைப்பாட்டையே எடுப்பார். அவர் இருக்கும் அணிதான் வெற்றி பெறும் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுதான் இம்முறையும் நடக்கும்.
கே.: அ.தி.மு.க. அணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும் என்கிறாரே திருமாவளவன்?
ப: இவர் இடம் பெற்ற ம.ந. கூட்டணிக்கு என்ன கதி ஏற்பட்டது? அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் முன், ராஜீவ் கொலைக் கைதிகள் விடுதலையை ஏன் நிபந்தனையாக விதிக்கவில்லை.
ராஜபக்ஷவிடம் பரிசு வாங்கியது ஏன்?
- திருமாவளவனுக்கு காங்கிரஸ் கேள்வி
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியதாவது:
தி.மு.க. அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் திருமாவளவன் இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறார். அப்போது ராஜபக்ஷவிடம் அவர் பரிசு வாங்கத் துடித்ததை அருகிலிருந்து பார்த்த கனிமொழியும் டி.ஆர்.பாலுவும், இப்போது எங்கள் அணியில்தான் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எப்போதும் கொள்கை அடிப்படையில் செயல்படுபவர். சமூக நீதியில் அக்கறை கொண்டவர். தி.மு.க.வைத் திட்டிய கமல்ஹாஸனை நான் வரவேற்றது தவறு என்று தி.மு.க. சொன்னதால்தான், நான் ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இல்லாவிட்டால் நானே அழைத்திருப்பேன்.
பா.ஜ.க.வை எதிர்ப்பது ஏன்?
ராமதாஸ் பரபரப்பான பேட்டி
சென்னை
பா.ம.க. தலைவர் அளித்த பேட்டி:
கே: தி.மு.க.வைக் கடுமையாக விமர்சித்து விட்டு, அந்த அணியிலேயே சேர்ந்து விட்டீர்களே?
ப: தமிழ்நாட்டை தி.மு.க. குடிகார நாடாக்கி விட்டது என்று நான் சொன்னதை நட்புணர்வோடு ஏற்றுக் கொண்டவர் கலைஞர். ஆனால், அதன் பின் அ.தி.மு.க. தமிழகத்தை அதை விட கேடு கெட்ட குடிகார நாடாக்கி விட்டது. எனவேதான் அ.தி.மு.க.வை விட தி.மு.க. சிறந்த கட்சி என்ற கொள்கை அடிப்படையில் தி.மு.க. அணியில் சேர்ந்தோம். இதுதான் வெற்றிக் கூட்டணி.
கே: திராவிடக் கட்சிகளுடன் எப்போதும் கூட்டு இல்லை என்றீர்களே?
ப: அப்போது கருணாநிதியும் ஜெயலலிதாவும் உயிரோடு இருந்தார்கள். அவர்களோடு கூட்டு இல்லை என்ற பொருளில்தான் சொன்னேன். அ.தி.மு.க., பா.ஜ.க.வோடு என்றும் கூட்டு இல்லை என்று இப்போதே பத்திரம் எழுதித் தரத் தயார்.
கே: இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் - தி.மு.க. பற்றி திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளாரே?
ப: இலங்கைப் பிரச்னையில் ஐ.மு.கூ. அரசைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில், ‘அழுது புலம்புவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று வீரத்தோடு ஒப்புக் கொண்டவர் கலைஞர். ஆகவே, அவர் மீது குறை சொல்வதை ஏற்க முடியாது. ராஜபக்ஷவை டெல்லிக்கு வரவழைத்து கை குலுக்கிய மோடியை எப்படி ஆதரிக்க முடியும்?
கே: காங்கிரஸை கடுமையாக விமர்சித்த நீங்கள் இப்போது காங்கிரஸை ஆதரிப்பது ஏன்?
ப: மோடி ஆட்சியில், ஜி.எஸ்.டி. குளறுபடிகள், ராஜீவ் கொலைக் கைதிகளுக்கு அநீதி, நீட் விவகாரம் உட்பட பலவற்றை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அ.தி.மு.க. ஊழல்கள் குறித்து புத்தகமே எழுதியிருக்கிறேன். ஊழல் ஆட்சியைப் பாதுகாக்கும் பா.ஜ.க.வை மானமுள்ளவன் ஆதரிக்க மாட்டான். மோடி பிரதமராவதைத் தடுக்க காங்கிரஸால்தான் முடியும்.
கடைசிச் செய்தி
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை தி.மு.க. அணி பக்கம் இழுப்பதற்காக ராமதாஸும், அ.தி.மு.க. அணி பக்கம் இழுப்பதற்காக திருமாவளவனும் தனித் தனியே அவரைச் சந்தித்துப் பேசி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...