ராஜ்யசபாவிலும், குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக, 125 ஓட்டுகளும், எதிராக, 105 ஓட்டுகளும் பதிவாகின. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில், எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதிலளித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் வாயை அடைத்தார்.
பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 'இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது' என, பரவலாக விமர்சிக்கப்படுகிறது. மேலும் இதை எதிர்த்து, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. வட கிழக்கு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.
பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 'இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது' என, பரவலாக விமர்சிக்கப்படுகிறது. மேலும் இதை எதிர்த்து, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. வட கிழக்கு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.
அமோக ஆதரவு:
ராஜ்யசபாவில், நேற்று காலை இந்த மசோதாவை தாக்கல் செய்து, அமித் ஷா பேசியதாவது: திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்களால், முஸ்லிம்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை. இந்த மசோதாவால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தியக் குடியுரிமை பெற்றுள்ள அவர்கள், தொடர்ந்து இந்தியர்களாகவே இருப்பர். யாரும் உங்களை துன்புறுத்த மாட்டர். அதே நேரத்தில், சட்ட விரோதமாக வந்துள்ள முஸ்லிம்களுக்கு குடியுரிமை அளிக்க முடியாது.
அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, அகதிகளாக வந்துள்ள ஹிந்து, பார்சி, சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கப்படும். இதன் மூலம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் என, இதுவரை மறுக்கப்பட்ட வசதிகள் அவர்களுக்கு கிடைக்கும். நாங்கள் ஓட்டு அரசியலுக்காக இதை செய்யவில்லை. தேர்தல் அறிக்கையிலேயே இதை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். அதற்கு மக்களிடம் ஆதரவு உள்ளது. அதனால்தான், லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு அமோக ஆதரவு அளித்தனர். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மசோதாவின் மீது, உறுப்பினர்கள் பேசுவதற்கு, ஆறு மணி நேரம் அவகாசம் அளிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எட்டு மணி நேரத்துக்கு மேல் நடந்த விவாதத்தில் பேசிய, எதிர்க்கட்சியினர், பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மசோதாவை, ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என, வலியுறுத்தினர். இறுதியில், அமித் ஷா அனைத்து கேள்விகளுக்கும் நறுக்கென்று பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: நாட்டின் பிரிவினை, மதத்தின் அடிப்படையில் அமைந்தது என, நான் குறிப்பிட்டது குறித்து சிலர் கேள்வி எழுப்பினர். கடந்த, 1950, ஏப்., 8ல், நேரு - லியாகத் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது, இரு நாட்டிலும், அரசு நிர்வாகம் மற்றும் தங்களுடைய மதத்தை பின்பற்றுவதில், மத சிறுபான்மையினருக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டது.
இது முதல்முறை அல்ல:
இந்தியா, பாக்., பிரதமர்கள் அப்போது, இரு நாட்டிலும் உள்ள மத சிறுபான்மையினர் குறித்து குறிப்பிட்டனர். அதைத் தான் நான் குறிப்பிட்டேன். அண்டை நாடுகள் ஏன் தேர்வு செய்யப்பட்டன எனக் கேட்டுள்ளனர். குடியுரிமை அளிப்பது இந்தி யாவில் நடப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, இலங்கை, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த அகதிகளுக்கு வழங்கப்பட்டது. அப்போது, பாக்., வங்கதேசத்தை ஏன் சேர்க்கவில்லை என்று கேட்க முடியுமா. அப்போது இருந்த சூழ்நிலையில், அந்த நாடுகள் சேர்க்கப்படவில்லை. பாக்.,கில் உள்ள சட்டம் குறித்து எனக்கு தெரியும். அங்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. நேரு - லியாகத் ஒப்பந்தத்தை இந்தியா கடைப்பிடித்து வருகிறது.
இங்கு, தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி போன்ற பதவிகளில் முஸ்லிம் இருந்துள்ளனர். ஆனால், பாக்.,கில் அது பின்பற்றப்படுகிறதா... அதனால், இந்த திருத்தச் சட்டம் தற்போதைய சூழ்நிலைக்கு தேவையானது. சிறுபான்மையின அகதிகள் குறித்த புள்ளிவிபரங்கள் இல்லாமல், இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக, இங்கு விமர்சித்தனர். அதை தெரிந்து கொள்வதற்குதான், இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. முக்கியமான பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே இதில் வேகம் காட்டப்படுவதாக கூறினர். இந்த மசோதாவை, 2015ல் நாங்கள் கொண்டு வந்தோம்.
கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டும், ராஜ்யசபாவில் நிறைவேறவில்லை. அப்போது நாட்டில் வேறு பிரச்னைகள் இல்லாமல் இருந்ததா...
சட்டத்தில் வழி உள்ளது:
இந்த மசோதாவில் முஸ்லிம்களை ஏன் சேர்க்கவில்லை என்ற முக்கியமான பிரச்னையை எழுப்பினர். இந்த மசோதாவில், ஆறு மதத்தினர் பெயரை சேர்த்துள்ளோம். அதற்கு பாராட்டு இல்லை; ஆனால், முஸ்லிம்களை சேர்க்காதது குற்றமா... பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இல்லை. அதனால் தான், அவர்களை சேர்க்கவில்லை. அதே நேரத்தில், இந்த நாடுகளில் பாதிக்கப்பட்டு அகதிகளாக வரும் முஸ்லிம்கள், இந்தியக் குடியுரிமையைப் பெறுவதற்கு, சட்டத்தில் வழி உள்ளது. அவ்வாறு, 566 முஸ்லிம்களுக்கு குடியுரிமையை வழங்கியுள்ளோம். இவ்வாறு, அவர் பேசினார்.
அமித் ஷா பதிலுரைக்கு பின், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக, 125 ஓட்டுகளும், எதிராக, 105 ஓட்டுகளும் பதிவாகின. மசோதாவை ஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பக்கோரும் எதிர்க்கட்சிகளின் தீர்மான மும் தோல்வி அடைந்தது.
ஒளிபரப்பு நிறுத்தம்:
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்தார். 'அசாம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்' என, அவர் கூறினார். அப்போது, எதிர்க்கட்சியினர், அவரை பேசவிடாமல் தொடர்ந்து கூச்சலிட்டனர். அதையடுத்து, ராஜ்யசபா நிகழ்ச்சிகளை, 'ராஜ்யசபா டிவி'யில் நேரடியாக ஒளிபரப்புவதை நிறுத்தும்படி, சபை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். சிறிது நேரத்துக்குப் பின், நேரடி ஒளிபரப்பு மீண்டும் துவங்கியது.
அகதிகளுக்கு குடியுரிமை:
கடந்த, 2016 - 2018ல், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த, 391 பேர், பாக்.,கைச் சேர்ந்த, 1,595 பேருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில், டிச., 6 வரை, 40 ஆப்கானிஸ்தானியர், 712 பாக்., அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், மத்திய உள்துறை இணையமைச்சர், நித்யானந்த ராய் இதை தெரிவித்து உள்ளார்.
1.5 கோடி பேர் பயன்பெறுவர்:
இந்த மசோதா குறித்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளதாவது: இந்த மசோதாவால், 1.5 கோடி பேர் பயன்பெறுவர். அதில், 50 சதவீதம் பேர், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர். குடியுரிமையை பெறுவதுடன், இடஒதுக்கீட்டு பலனும் அவர்களுக்கு கிடைக்க உள்ளது. அசாமில், இந்த மசோதாவில் ஆறு லட்சம் பேர் பயன்பெறுவர். அதே நேரத்தில், மேற்கு வங்கத்தில், 72 லட்சம் பேர் பயன்பெறுவர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment