Friday, September 6, 2019

நிதானம் தான் வாழ்க்கையின் அஸ்திவாரம்...

1) நிதானமாக இருப்பவர் புகழுக்கு உரியவர் ஆகின்றார். நிதானமாக இருப்பவரை எந்த ஒரு வியாதியும் தாக்குவதில்லை. நிதானம் என்பது தாமதப்படுத்தப்பட்ட செயலல்ல. நிதானம் என்பது விவேகத்தின் வெளிச்சம்.
2) நிதானமாக இருப்பவர் உலகத்தின் கலங்கரை விளக்கு ஆவார்.எண்ணத்தை கட்டுப்படுத்தியவராக, வார்த்தையை யோசித்துப் பேசுபவராக,காரியங்களின் விளைவுகளை அறிந்து பிறகு காரியம் செய்பவரே நிதானம் மிக்கவர்.
3) நிதானமாக இருப்பவர் கடவுளின் நண்பன். அவர் யாரையும் எடுத்தெறிந்து பேசமாட்டார். எந்த வார்த்தையும் மனதை புண்படுத்துவதாக பேசமாட்டார்.அவரது வார்த்தை மற்றவர்களுக்கு மனதிற்கு குளிர்ச்சியைத் தரும். அவரது செயல் மற்றவர்களுக்கு வழிகாட்டும்.
4) நிதானம் உடையவர் ஒரு முறை செய்த தவறை மறுமுறை செய்யமாட்டார். நிதானம் தான் தியானம்.நிதானம் உடையவர் இடத்தில் கோபம் என்பது இருக்காது. நிதானம் உடைய ஒருவரின் வார்த்தைகள் பிறரின் மனதிற்கு ஆறுதலை ஏற்படுத்தும்.
5) நிதானம் உடையவர் உலகின் உயர்ந்த நிலை அடைவார். எங்கே கடும் வார்த்தைகள் இல்லையோ அவர் மனிதருள் மாணிக்கம். நிதானம் உடையவர் பிறரின் தவறுகளை யோசிக்க வைப்பவர் ஆவார். பிறர் தனது தவறுகளை திருத்திக் கொள்வதற்கு பாடமாய் அவரது வாழ்க்கை அமைந்திருக்கும்.
6) நிதானம் உடையவரிடத்தில் நல்லெண்ணம் நிறைந்திருக்கும்.பொறுமைதான் நிதானத்தின் அஸ்திவாரம் ஆகும்.தீய எண்ணம் உடையவர் காட்டும் நிதானமும் பொறுமையும் அவரது தோற்றத்திற்கும் செயலுக்கும் ஒட்டாததாக மாறுபட்டு இருக்கும். உண்மையான நிதானத்தில் தெய்வீகம் கலந்திருக்கும்.
7) நிதானமுடன் இருப்பவர் எந்த சூழ்நிலையும் எதிர்கொள்பவராக இருப்பார்.நிதானத்தினுள் அஹிம்சை கலந்திருக்கிறது.அஹிம்சை சகிப்புத் தன்மையால் ஏற்படுகின்றது. சகிப்புத்தன்மைக்குள் பொறுமை இருக்கின்றது.பொறுமை நிதானத்தை வெளிப்படுத்துகின்றது.
8) நிதானம் மிக்கவர் படிக்காத மேதை ஆவார். நிதானம் மிக்கவர் தன்னுடைய செயல்களால் பிறருக்கு படிப்பினையை கொடுக்கின்றார். நிதானம் என்பது ஆன்மீகத்தின் முக்கிய அம்சம். நிதானம் என்பது தெய்வீகத்தின் தோற்றம். நிதானம் என்பது தர்மத்தின் படிக்கட்டு. நிதானம் என்பது சத்தியத்தின் வாசல்.
9) நிதானம் என்பது எல்லா இடத்திலும் அமைதியாக இருப்பதல்ல.தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் தனது கருத்தை தெளிவாக புரிய வைப்பதாகும். பிறர் இகழும் போது அமைதி காத்தலும் அவர் அமைதியான பின் அந்த சூழ்நிலையின் இக்கட்டை புரிய வைப்பதும் தான் நிதானமானவரின் விசேஷ தன்மை.
10) நிதானம் தவறாத ஒருவர்தான் விதியை மதியால் வெல்கின்றார். நிதானம் உடையவர் தீர்க்கமாக சிந்திக்கிறார் தீர்க்கமாக சிந்தித்து பின் உறுதியாக செயலாற்றுகின்றார்.அவரது செயல் பட்டை தீட்டப்பட்ட வைரம் போல் ஒளி வீசுகின்றது.
11) நிதானம் என்பது தீபமாகும். அந்த வெளிச்சம் பலரது அறியாமை இருட்டை அகற்றும். நிதானம் ஆனவர் நிர்மலமான மனம் கொண்டவர். நிதானம் உடையவர் முட்களுக்கு இடையே இருக்கும் நறுமணமிக்க ரோஜாமலர் போன்றவர்.
12) நிதானம் உடையவர் அனைவரிடமிருந்தும் கற்றுக் கொள்கின்றார். நிதானம் உடையவர் அனைவருக்கும் தனது செயல்களால் கற்றுக் கொடுக்கின்றார். நிதானம் இறைவனின் கிரீடத்தில் வைரம் போன்றது. அது மங்காது ஒளிவீசி வழி காட்டிக் கொண்டே இருக்கும்.
எனவே,வாழ்க்கையில் ஒருவர் முன்னேற விரும்பினால் முதலில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.நிதானத்தின் மூலம் அனைத்து தெய்வீக குணங்களும் அவருக்குள் நிரம்பும். நிதானம் சகல ஐஸ்வர்யங்களையும் கொண்டுவந்து இறையருள் நிரம்பியவராக ஒருவரை வாழ்க்கையில் மாற்றும்.எனவே, நிதானத்தை தானம் செய்யும் மாமனிதராக இப்பூமியில் ஒவ்வொருவரும் மாற்றமடைந்து மகிழ்வுருவோம் .நல்லது.வாழ்த்துக்கள் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...