கார்த்தி சிதம்பரம் செலுத்திய பிணைத் தொகையை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு....
வெளிநாடு செல்ல அனுமதி பெறுவதற்காக கார்த்தி சிதம்பரம் பிணைத் தொகையாக செலுத்தியிருந்த 10 கோடி ரூபாயை விடுவிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தில் 3,500 கோடி ரூபாயை முதலீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில் வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வெளிநாடு சென்றுவர அனுமதி கோரி கார்த்திக் சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் 10 கோடி ரூபாய் வைப்புத் தொகை செலுத்தவும் உத்தரவிட்டனர். அதன்படி அவர் 10 கோடி ரூபாயை உச்ச நீதிமன்ற கருவூலத்தில் முதலீடு செய்தார்.
இந்நிலையில் அந்தத் தொகையை திருப்பித் தரக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதி தீபக் குப்தா, அடுத்த 3 மாதங்களுக்கு அந்த தொகை வைப்பு முதலீட்டிலேயே இருக்கும் என உத்தரவிட்டார்.
தனது தொகையை விடுவிக்கக் கோரி கடந்த மே மாதம் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment