இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவின் தனியார் நிறுவனத்திற்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கிய ஒப்பந்தத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே ரத்து செய்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டில் அதிபர் சிறிசேனா அரசு செயல்பட்டது. சீனாவின் தனியார் நிறுவனத்திற்கு இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கிய ஒப்பந்தத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கையெழுத்திட்டார். இந்த துறைமுகத்தை போர்க்கப்பல் நிறுத்தும் தளமாக சீனா மாற்றலாம் என்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனை மறுத்த சீனா, இந்தியா - ஐரோப்பியா கண்டத்தை இணைக்கும் பாலமாக இத்துறைமுகம் நிகழும் எனவும் இதன்மூலம் வர்த்தகம், இலங்கையின் பொருளாதாரம் மேம்படும் எனவும் விளக்கம் அளித்தது. மேலும், ராணுவத்தளம் அமைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என இலங்கையும் மறுப்பு தெரிவித்தது. சமீபத்தில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே, வெற்றி பெற்றால் இந்த குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.

அதன்படி, அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய, ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் பொருளாதார ஆலோசகர் அஜித் நிவார்ட் கபிரால் தெரிவித்துள்ளார். முன்பு 10 ஆண்டுகளாக அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சே அரசில் கோத்தபய ராணுவ அமைச்சராக இருந்தார். அப்போது சீனாவுக்கு ஆதரவாக பல்வேறு திட்ட பணிகள் செய்தனர். தற்போது கோத்தபய அதிபரானதும் சீனாவிற்கு எதிராக தனது அணுகு முறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளார்.
No comments:
Post a Comment