கர்நாடகாவில் நடந்த 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 12 ல் பா.ஜ. வென்றுள்ளது. இதையடுத்து கவிழும் ஆபத்திலிருந்து முதல்வர் எடியூரப்பாவின் ஆட்சி தப்பியது; பா.ஜ. சட்டசபையில் முழு பெரும்பான்மை பெற்றுள்ளது.
கர்நாடகாவில் 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தனர். இந்த ஆட்சியின் மீதான அதிருப்தியின் காரணமாக காங்கிரசின் 14 எம்.எல்.ஏ.க்களும் ம.ஜ.த.வின் மூன்று எம்.எல்.ஏ.க்களும் ஜூலையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் 17 பேரையும் தகுதி நீக்கம் செய்தார். பின் முதல்வர் எடியூரப்பா லைமையிலான பா.ஜ. ஆட்சி அமைந்தது.
இந்நிலையில் சபாநாயகர் முடிவை எதிர்த்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட அனுமதித்தது. இதையடுத்து மஸ்கி, ராஜராஜேஸ்வரிநகர் ஆகிய இரு தொகுதிகள் தவிர மற்ற 15 தொகுதிகளுக்கு இம்மாதம் 5ல் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது.
பா.ஜ.- காங். தலா 15 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் என மொத்தம் 165 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பா.ஜ.வில் 13 தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் 15 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பா.ஜ. - 12 தொகுதிகளிலும் காங். இரு தொகுதிகளிலும் சுயேச்சை ஒரு தொகுதியிலும் வென்றன. தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை தோல்வியடைய செய்வதே எங்கள் குறிக்கோள் எனக்கூறி போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதாதளம் படுதோல்வியடைந்தது. அக்கட்சி தலைவர்களான முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரின் பிரசாரத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இது போல காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, தினேஷ் குண்டுராவ், டி.கே.சிவகுமார் உட்பட பலரது பிரசாரமும் எடுபடவில்லை.
இதற்கிடையில் பா.ஜ. அரசுக்கு அறுதிப் பெரும்பான்மைக்கு எட்டு இடங்கள் தேவைப்பட்டன. இதற்காகவும் தன் தலைமையிலான ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும் முதல்வர் எடியூரப்பா மேற்கொண்ட பிரசாரத்தினால் பா.ஜ. 12 தொகுதிகளில் வென்றது. ஹுன்சூர், சிவாஜிநகர் இரு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது.
இதன் வாயிலாக கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ. ஆட்சி ஆபத்திலிருந்து தப்பித்து சட்டசபையில் முழு பெரும்பான்மை பெற்றுள்ளது. எடியூரப்பாவின் கை ஓங்கியுள்ளது. அடுத்த மூன்றரை ஆண்டுகளும் அவரே முதல்வராக பதவி வகிக்க வாய்ப்புள்ளது.
சித்தராமையா ராஜினாமா
இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு பொறுப்பேற்று கர்நாடக சட்டசபை காங். குழு தலைவர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா செய்தார். இதே போல அக்கட்சியின் மாநில தலைவர் பதவியிலிருந்து தினேஷ் குண்டுராவும் நேற்று ராஜினாமா செய்தார்.
No comments:
Post a Comment