
மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை என்றாலும் நம்முடைய திருப்திக்காக சில அபூர்வ விக்கிரகங்கள், யந்திரங்கள், படங்கள் வைத்து வழிபடுவது நம் தொன்று தொட்ட வழக்கம். அதில் 5 தெய்வீகச் சின்னங்கள் நம்முடைய வழிபாடுகளை மேலும் சிறப்பாக மாற்றுகின்றன.
ஒருவரது வீட்டில் இந்த 5 பொருள்களும் இருந்தால் அந்த வீடே தெய்வ சாந்நித்யம் பெற்று ஒரு கோயிலாக உருமாறி விடுகின்றது என பெரியோர்கள் சொல்வதுண்டு. அவை என்னென்ன, அதன் சிறப்புகள் என்னென்ன என்று விரிவாகக் காண்போம்.



*
வெள்ளெருக்கு பிள்ளையார்
*


பூஜை அறை
வெள்ளெருக்கு மலர்கள் விநாயகருக்குப் பிரியமானவை. அதுபோலவே வெள்ளெருக்கு வேரினால் செய்யப்படும் விநாயகர் வடிவமும் தீய சக்திகளை வீட்டுக்குள் வர விடாமல் செய்யும் ஆற்றல் கொண்டது. தரமான வெள்ளை நிற பூக்கள் கொண்ட எருக்கன் செடி ஆறு ஆண்டுகள் வளர்ந்த பிறகு அதன் வேர் விநாயகராக உருமாற வேண்டும். அதுவும் அந்த செடியின் வடக்கு முக வேரை பயன்படுத்துவது வழக்கம். ஆகம முறைப்படி உருவான சிலையே பயன்களை அழைக்க வல்லவை. எனவே முறையாக உருவான வெள்ளெருக்கு விநாயகர் நேர் மறை சிந்தனைகளை உருவாக்கி குடும்ப ஒற்றுமையை பலப்படுத்துவார். இவருக்கு அபிஷேகம் செய்யக் கூடாது. அத்தர், புனுகு, சவ்வாது சாத்தலாம். கைகளால் தீண்டாமல் இருப்பது நலம் அளிக்கும். வெள்ளெருக்கு விநாயகர் வேண்டிய நலன்களை அளிப்பவர் என்பதால் உங்கள் பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டியவர் இவர்.
*
வில்வக்கனி
*


தன ஆகர்ஷண சக்தியை அதிகம் கொண்டது வில்வம். எத்தனை சம்பாதித்தாலும் பணம் நிற்கவே இல்லை என்று கவலைப்படுபவர்கள் தங்கள் வீட்டு பூஜை அறையில் வில்வக்கனியை வைத்து வழிபடலாம். வில்வ இலைகள் எப்படி சிவ பூஜைக்கு மகத்தானதோ, அதேபோல வில்வ பழமும் திருமகளுக்கு உவப்பானது. வில்வக் கனியின் ஓட்டால் ஆன திருநீறுக் கூடு பல வீடுகளில் இருப்பதை பார்த்திருக்கலாம். இதுவும் செல்வம் சேர ஒரு எளிய வழி என்றே சொல்லலாம். வில்வக்கனி நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்ட மூலிகை மட்டுமல்ல நீண்ட ஆயுளை கொடுக்க கூடிய சகாய சஞ்சீவினி என்றும் கூறப்படுகிறது. நீண்ட நாள்கள் கெட்டுப் போகாமல் நிலைத்திருக்கும் ஆற்றல் கொண்டவை இந்தக் கனிகள் என்பதால் நிலைத்த செல்வத்துக்கு இவை அடையாளமாகின்றன.
*
வலம்புரி சங்கு
*


கடன் பிரச்னை, நீங்காத கவலைகள், வாஸ்து தோஷம், கண் திருஷ்டி, பகை விரட்டும் ஆற்றல் கொண்டவை வலம்புரிச் சங்கு. பிரணவ மந்திரத்தின் அடையாளமாகப் போற்றப்படுவது வலம்புரிச் சங்கு. பாற்கடலைக் கடைந்தபோது திருமகளோடுத் தோன்றியது இந்தச் சங்கு. ஆகவே இதுவும் திருமாலை அடைந்தது. ஆயிரம் இடம்புரிச் சங்கில் ஒரே ஒரு வலம்புரிச் சங்கு மட்டுமே தோன்றும். இந்த வலம்புரி சங்கு இருக்குமிடத்தில் தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்காது. கண் திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலிக்காது. கடன் பிரச்னை நீங்கும். வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும். வளர்பிறை நாளில் வாங்கி வந்த வலம்புரிச் சங்கை, புனித நதி நீரால் நீராட்டி மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் கொண்டு அலங்கரித்து ஒரு பீடத்தின் மீது வைக்க வேண்டும். வலம்புரிச் சங்கை எப்போதும் கீழே வைக்கவே கூடாது. நல்ல நாள்களில் தூப தீபம் காட்டி, நெய் தீபமேற்றி, மந்திரங்கள் கூறி வணங்க வேண்டும். வலம்புரி சங்குக்கு வெள்ளியாலான பூண் இடுவது சிறப்பானது. வலம்புரிச் சங்கை வணங்கும் இடத்தில் மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள். தொழில் செய்யும் இடத்தில், பணம் புழங்கும் இடத்தில் இந்த வலம்புரி சங்கு இருப்பது விஷேசமானது.
*
ருத்ராட்சம்
*


ருத்ரனின் கண்கள் என்று போற்றப்படும் ருத்ராட்சம் சிவாம்சம் என்று வணங்கப்படுகிறது. கழுத்தில் அணிந்து கொள்ள முடியாதவர்கள் இதை பூஜை அறையிலாவது வைத்து பூஜிக்க வேண்டும். ருத்ராட்சம் உள்ள இடத்தில் அமைதி, சுபீட்சம் நிலைக்கும் என்பது பெரியோர் வாக்கு. ஒவ்வொரு முக ருத்ராட்சத்துக்கும் ஒவ்வொரு பலன்கள் என்றாலும் பூஜையில் வைக்க பொதுவாக ஐந்து முகமே ஏற்றது. ஐந்து முக ருத்திராட்சம் உள்ள இடத்தில் தீமையே அண்டாது. ஞானமும் செல்வமும் பெருகும். தீவினைகள் ஒழிந்து மோக்ஷ வாழ்வு கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு. ருத்ராட்ச வழிபாடு என்பது புண்ணிய நதிகளில் நீராடியப் பலன்களை அளிக்கும். தெரியாமல் செய்த எந்த பாவங்களையும் ஒழிக்கும். உடலின் ஆற்றலைப் பெருக்கி நலமான வாழ்வை அளிக்கக் கூடியது ருத்ராட்சம். எனவே நலமான வளமான வாழ்வுக்கு ருத்ராட்சம் அவசியம் எனலாம்.
*
சாளக்கிராமம்
*


திருமாலின் அர்ச்சாவதாரமாக வணங்கப்படுவது சாளக்கிராமம். நேபாள நாட்டின் முக்திநாத் பகுதியில் கண்டகி நதிக்கரைகளில் காணப்படும் இக்கற்களில் இயற்கையாகவே சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற திருச்சின்னங்கள் காணப்படுவது விசேஷம். இதனால் இவை மடங்கள், கோயில்கள், வீடுகளில் வைத்து வழிபடப்படுகின்றது. 68 வகை சாளக்கிராமங்கள் உள்ளன என்றும் அவை யாவுமே புண்ணியமானவை என்றும் கூறப்படுகின்றது. சாளக்கிராம திருமஞ்சனத் தீர்த்தம் புனித கங்கைக்கு ஒப்பானது என்றும் கண்டகி நதியில் நீராடியப் பலனைத் தரும் என்றும் சொல்லப்படுகிறது. சாளக்கிராமத்தை வணங்கினால் யம பயம் நீங்கும். சகல பாவங்களும் நீங்கி பரமபதத்தை அடைவர் என்றும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment