Friday, January 15, 2021

'நோ நோ!' சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை.

 சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவை புறக்கணிக்கும் வகையில், 'அவரால், நான் முதல்வராகவில்லை; எம்.எல்.ஏ.,க்களால் தான் முதல்வரானேன்' என, முதல்வர் இ.பி.எஸ்., பகிரங்கமாக கூறியுள்ளது, ஆளும் கட்சியினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


அத்துடன், 'ஆளுமை மிக்க தலைவராக, முதல்வர் இ.பி.எஸ்., திகழ்கிறார்' என்ற, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பாராட்டு பேச்சும், அ.தி.மு.க., தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.


இம்மாத இறுதியில், பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகி, சென்னை வரும் சசிகலாவுக்கு, பிரமாண்ட வரவேற்பு அளிக்க, அ.ம.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால், சசிகலாவை புறக்கணித்து, அவரை சேர்க்காமல், அ.தி.மு.க.,வை வழி நடத்திச் செல்ல, முதல்வர் இ.பி.எஸ்., விரும்புகிறார்.

அதற்கு முத்தாய்ப்பாக, 'சசிகலாவால் நான் முதல்வராகவில்லை; எம்.எல்.ஏ.,க்களால் தான் முதல்வரானேன்' என, இ.பி.எஸ்., கூறி வருகிறார். 'தி.மு.க.,வை எதிர்க்க வேண்டுமெனில், சசிகலா போன்றவர்களையும், அ.தி.மு.க.,வில் சேர்த்துக் கொள்ள வேண்டும்' என, சென்னையில் நடந்த, 'துக்ளக்' பத்திரிகை ஆண்டு விழாவில், ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.
அவரது பேச்சை, இ.பி.எஸ்., ரசிக்கவில்லை. 'குருமூர்த்தி தன் ஆலோசனையை, அமெரிக்காவைச் சேர்ந்த டிரம்பிடம் கூறட்டும்' என, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கிண்டலடித்துள்ளார்.

அதே துக்ளக் விழாவில் பங்கேற்ற, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசுகையில், 'ஆளுமை மிக்க தலைவர் இ.பி.எஸ்., ஆட்சியை தக்க வைத்திருப்பது, அவரது ஆளுமையை பறைசாட்டுகிறது' என, பாராட்டினார்.முதல்வர் இ.பி.எஸ்.,சை, நட்டா பாராட்டி பேசிய பேச்சை, அ.தி.மு.க., தொண்டர்கள் பொங்கல் பரிசாக கருதுகின்றனர். மாநில நிர்வாகிகள் முதல், கிளை நிர்வாகிகள் வரை, உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

இது குறித்து, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:முதல்வர் பதவியை, இ.பி.எஸ்., ஏற்றதும், அவர் அதிகபட்சம் ஒரு மாதம் தாக்குபிடித்தால் ஆச்சரியம் என, ஆரூடம் கூறினர். அதனால், கட்சியினர் மத்தியிலும், கடும் குழப்பம் நிலவியது. ஆட்சியை கவிழ்க்க, எதிர்க்கட்சிகள், எல்லா முயற்சிகளையும் செய்தன.

இதனால், முதல்வர் இ.பி.எஸ்., ஆட்சியின் ஆரம்ப கட்டத்தில் நிலையற்ற தன்மை நிலவியது. ஆனால், காவிரி, முல்லை பெரியாறு போன்ற நதி நீர் பிரச்னைகளில், தமிழகத்தின் உரிமைகளை, முதல்வர் இ.பி.எஸ்., மீட்டெடுத்த செயலால், அவரை மக்கள் நிமிர்ந்து பார்க்க துவங்கி உள்ளனர்.

அது போலவே, டெல்டா மாவட்டங்களை, வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவித்ததால், விவசாயிகளும், அவர் பின்னால் அணிவகுக்கத் துவங்கி உள்ளனர்.தமிழகத்தில், கொரோனா நோய் பரவல் கட்டுப்பட்டது; அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது; அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா, 2,500 ரூபாயுடன், பொங்கல் பரிசு வழங்கியது போன்ற திட்டங்கள் வாயிலாக, மக்கள், தொண்டர்கள் மனங்களை கொள்ளை அடித்து, 'மாஸ்' முதல்வராக, இ.பி.எஸ்., புதிய அவதாரம் எடுத்துள்ளார்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் கூறின.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...