ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்குப் போய் இருப்பீர்கள்.
எல்லாக் கோபுரங்களும் வண்ணமயமாக ஜொலிக்க... ஒரேயொரு கோபுரம் மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
காரணம் இதோ:-
சுமார் 750 ஆண்டுகளுக்கு முன் அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்திய படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் முகமதியப் படைகளின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானது. ஸ்ரீரங்கத்தையும் ஸ்ரீஅரங்கன் திருக்கோவிலையும் காக்க ஸ்ரீரங்க படைகளும் மக்களும் பல நாள் துலுக்கருடன் போரிட்டனர்.
ஆனாலும் கோயிலுக்குள் புகுந்துவிட்ட முகமதியப் படைகள் கண்ணில் பட்ட அனைவரையும் வெட்டி சாய்த்தது. ஏராளமான பொன், வைர ஆபரணங்களைக் கொள்ளையடித்தனர்.
ஆனாலும் கோயிலுக்குள் புகுந்துவிட்ட முகமதியப் படைகள் கண்ணில் பட்ட அனைவரையும் வெட்டி சாய்த்தது. ஏராளமான பொன், வைர ஆபரணங்களைக் கொள்ளையடித்தனர்.
இன்னும் மதிப்புமிக்க பொக் கிஷங்களைத் தேடி அங்கேயே டேரா போட்டு இருக்கிறார்கள். நடந்துவிட்ட திடீர் விபரீதங்களை எண்ணிக் கண்ணீர் வடித்தனர் தப்பி பிழைத்த ஸ்ரீரங்கத்து மக்கள்.
அரங்கனுக்காக கண்ணீர் வடித்த மக்களுக்கு அதைவிட அதிர்ச்சியாக இருந்தது, அரங்கன் கோயில் தேவதாசியான வெள்ளையம்மாள் எடுத்த முடிவு. கோயில் கொள்ளைக்குத் தலைமை தாங்கி வந்த முகமதியப் படைத் தளபதிக்கு ஆசை நாயகியாக இருக்கச் சம்மதித்து விட்டாள் வெள்ளையம்மாள் என்பதுதான் அது.
'இப்படியொரு முடிவெடுக்க இவளுக்கு எப்படி மனசு வந்தது? அரங்கன் புகழ் பாடியவள் எப்படி மனித அரக்கனிடம் மயங்கிப் போனாள்?’ என்று கோபம் அடைந்தனர். அவளை மயக்கியது பொன்னா... வீரமா... புகழா? என்று புரியாமல் சஞ்சலப்பட்டனர். அவளது சுயரூபத்தை மற்றவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இறைவன் நடத்திய விளையாட்டுதான் இந்தக் கொள்ளை நாடகம் என்று மக்கள் தங்களைத் தாங்களே தேற்றிக்கொண்டனர்.
நடுநிசியைத் தாண்டிய நேரம். வெள்ளையம்மாள் தளபதியை சந்திக்க ஆசைப்பட்டாள். வழக்கத்தை விட தன்னைக் கூடுதலாக அலங்கரித்துக் கொண்டாள். உடன் கிளம்பிய தோழியை இருக்கச் சொல்லிவிட்டு, இருட்டில் தனியாகச் சென்றாள். எப்போதும் அவளது வருகையை முன்னறிவிப்பு செய்யும் கொலுசு, அன்று மௌன கீதம் இசைத்தது. ஆம்... இரவு நேரத்தில் படைத் தளபதியை சந்திக்கப் போவது யாருக்கும் தெரியக்கூடாது என்று, முத்துக்கள் கொஞ்சும் கொலுசுகளைக் கழற்றி விட்டாள்.
ஸ்ரீரங்கம் முழுவதும் முகமதியர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால், வீதிகளில் உள்ளூர் மக்களின் நடமாட்டம் சுத்தமாக இல்லை. முகமதியப் படை வீரர்கள் மட்டும் ஆங்காங்கே காவல் பணியில் இருந்தனர். இருந்தார்கள் என்று சொல்வதை விட தூங்கி வழிந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். கோயிலைக் கைப்பற்ற கொடூரமாக போரிட்ட களைப்பில் அதிகமாக மதுஅருந்தி மயங்கிக் கிடந்தனர். அதனால், பலரையும் எளிதில் தாண்டிப் போனாள் வெள்ளையம்மாள்.
ஸ்ரீரங்கம் கோயில் மண்டபப் பகுதியில் கூடாரம் அமைத்துத் தூங்கிக் கொண்டிருந்த தளபதியின் குடிலுக்குள் நுழைந்தாள். அந்த நேரத்திலும் சுதாரித்துக்கொண்டு விசுக்கென எழுந்தான்.
''யாரது...'' என்றபடி தீப்பந்தத்தை உயர்த்தினான்.
'வணக்கம் தளபதியாரே!' எழிலாகக் கும்பிட்டாள் வெள்ளையம்மாள்.
''ஓ... நீயா? இங்கே ஏன் வந்தாய்? தகவல் அனுப்பி இருந்தால் நானே உன் இல்லம் வந்திருப்பேனே..?' என்று அவளைத் தொட வந்தான்.
''அரசே இது அரங்கனின் வீடு. இங்கே என்னை நீங்கள் தொடக்கூடாது. என் இல்லம் வாருங்கள். ஆசை தீர இன்பம் பெறலாம். ஆனால், அதைவிட ஒரு முக்கியமான சங்கதி கேள்விப்பட்டேன். அதைச் சொல்லத்தான் ஓடோடி வந்தேன்'' என்றாள்.
''அப்படி என்ன செய்தி?''
''இங்கே நீங்கள் எதற்காக படையெடுத்து வந்தீர்கள்?'
'எதிரிகளை வெற்றிகொண்டு, செல்வங்களையும் கன்னிப்பெண்களையும் மற்றும் அழகிகளையும் அள்ளிச் செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் படையெடுப்பின் ஒரே நோக்கம்'
'வெற்றி அடைந்து விட்டீர்கள். செல்வங்களை எடுத்துக் கொண்டீர்கள். ஆனாலும் ஏன் இங்கே இருக்கிறீர்கள்?''
''விலை மதிக்க முடியாத செல்வங்களைப் புதையலாக ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதை எடுக்கத்தான் காத்திருக்கிறோம்''
''நானும் அதற்காகவே வந்தேன்...''
''என்ன... உனக்கு அந்த ரகசியம் தெரியுமா?''
''மெள்ளப் பேசுங்கள். ஐம்பொன் சிலைகளும் வைர மாலைகளும், முத்து மணிகளும் பாதுகாப்பாக எங்கே இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும்?''
''எங்கே என்று சொல். உன்னை என் நாட்டுக்கு அழைத்துச் சென்று பொன்னாலேயே அலங்கரிக்கிறேன்'' தளபதியின் முகத்தில் ஆர்வம் மின்னியது.
''அதை சொல்லத்தானே வந்திருக்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. அதை நிறைவேற்றுவதாக நீங்கள் சத்தியம் செய்துகொடுத்தால் அந்த இடத்தைக் காட்டுவேன்'' என்று செல்லம் கொஞ்சினாள்.
''சொல் வெள்ளையம்மா. புதையலுக்காக உனக்கு என்ன வேண்டும்?''
''எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால், அந்தப் புதையலை நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால், நீங்களும் நானும் மட்டும் முதலில் சென்று பார்ப்போம். அதன்பிறகுதான், நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்'' என்றாள்.
''ப்பூ... இவ்வளவுதானா? பெண்புத்தி என்பது சரியாகத்தான் இருக்கிறது. சரி வா... நீயும் நானும் மட்டும் போய்ப் பார்ப்போம். ஆசைப்பட்ட அத்தனையையும் நீயே எடுத்துக்கொள். மீதி இருப்பதை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்'' என்று சந்தோஷமாக சிரித்தான்.
''சரி, வாருங்கள். உங்கள் ஆட்கள் யாருக்கும் தெரியாதபடி மறைந்து வாருங்கள்'' என்று அழைத்துச் சென்றாள். ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு கோபுரம் அருகே வந்து நின்றாள் வெள்ளையம்மாள்.
'இங்கேதான் இருக்கிறது. ஆனால் மேலே போகவேண்டும்'' என்று அண்ணாந்து பார்த்தாள்.
''வா... போகலாம்...''
''வெளவால், புறாக்கள் இருக்குமே...''
''அட, இதற்கா பயப்படுகிறாய். பயம் வந்தால் என்னைக் கட்டிக்கொள். வா... சீக்கிரம் வா... உடனே புதையலைப் பார்க்க வேண்டும்'' என்று அவசரப்பட்டான்.
சில நிமிடங்களில் இருவரும் கோபுரத்தின் உச்சியை அடைந்தனர். இரவின் நிசப்தத்தை கலைத்துக்கொண்டு சலசலத்தபடி தூரத்தில் ஓடிய காவிரி ஆற்றின் இரைச்சல் கேட்டது. குளிர்ந்தக் காற்று கொஞ்சம் நடுக்கம் கொள்ளச்செய்தது. கோபுரத்தின் உச்சியில் இருந்தபடி, இரவு நேர ஸ்ரீரங்கத்து அழகை ரசித்துப் பார்த்த தளபதி, வெள்ளையம்மாளிடம் உற்சாகமாகப் பேசினான்.
'ஆஹா... அற்புத தரிசனம். வெள்ளையம்மா, இந்தக் கோபுரத்தின் உச்சியில் இப்போதுதான் முதன் முறையாக ஏறி இருக்கிறேன். இந்த இடத்தில் இருந்து உங்கள் ஊரை ரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது. அத்தனை அழகாக மின்னுகிறது, ஆமாம் எங்கே இருக்கிறது பொக்கிஷங்கள்?''
'அதோ... அங்கே பாருங்கள்...' என்று கை நீட்டினாள்.
ஸ்ரீரங்கநாதர் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தைத்தான் காட்டினாள். அவனும் ஆர்வமாய் பார்த்தான்.
''கீழேதான் பொக்கிஷம் இருக்கிறதா... பிறகு ஏன் மேலே அழைத்து வந்தாய்?'' என்று சொல்லி வாய் மூடுவதற்குள் அந்த சம்பவம் நடந்து விட்டது.
சிணுங்கலும் சிருங்காரமுமாக பேசிக்கொண்டிருந்த வெள்ளையம்மாள், திடீரென்று புயலாய் மாறினாள். கோபுரத்தின் உச்சியில் இருந்து தளபதியை கீழே தள்ளி விட்டாள். தளபதி எழுப்பிய அபயக் குரல் கேட்டு முகமதியப் படையினர் கிழக்குக் கோபுரம் பகுதிக்கு ஓடி வந்தனர். அங்கே, தங்களது படைத்தளபதி இறந்துக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கோபுரத்தின் உச்சியைப் பார்த்தனர். அங்கே, வெள்ளையம்மாள் வெற்றி தேவதையைப் போன்ற பெருமிதத்துடன் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பிடிக்க வீரர்கள் சிலர் கோபுரத்தின் மீது வேகமாக ஏறினர். அதைக் கண்டு கொஞ்சமும் அச்சம் அடையவில்லை வெள்ளையம்மாள்.
ஸ்ரீரங்கநாதர் புகழை வாய்விட்டு பாடியபடி... குவிந்த கரத்துடன்... நினைத்ததை சாதித்த திருப்தியுடன் கோபுரத்தின் மேலே இருந்து கீழே குதித்தாள். அவளுடைய உயிர் பிரிந்தது.
தகவல் கேள்விப்பட்டு ஸ்ரீரங்கத்து மக்கள் ஓடோடி வந்தனர். வெள்ளையம்மாளின் பக்தியைக் குறைவாக மதிப்பிட்டதை எண்ணி தங்களைத் தாங்களே நொந்து கொண்டனர். ஒரு பெண்ணுக்கு இருக்கும் துணிச்சல் தங்களுக்கு இல்லாமல் போனதே என்று ஆண்கள் வீரம் வரப்பெற்றனர். மேலும் ஸ்ரீரங்கத்தை காக்க வெளியிலிருந்து ஹிந்துப்படைகளும் சேர்ந்துகொண்டன. தலைவன் இல்லாத படையை சிதறடித்தனர். கொள்ளை அடித்து வைத்திருந்த நகைகள், பொன், பெண்களை அப்படியே விட்டு, உயிர் பிழைத்த வீரர்கள் தப்பி ஓடினர்.
ஸ்ரீரங்கமாநகரையும் கோவிலையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக தன் உயிரைக் கொடுத்த வெள்ளையம்மாளின் நினைவாகத்தான், அந்தக் கோபுரம் இன்னமும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. வெள்ளையம்மாளின் தியாக வரலாறு செவிவழிக் கதையாகவே பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், அவள் குதித்து உயிர்விட்ட கிழக்கு கோபுரம்தான் இப்போது, 'வெள்ளைக் கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது.
வெள்ளையம்மாளின் உயிர்த்தியாகம் குறித்துப் பேசுகிறார் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் நண்பரும், வைஷ்ணவப் பெரியவருமான ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரி.
'வெள்ளைக் கோபுரத்தில் இருந்து குதித்து உயிருக்குப் போராடிய வெள்ளை யம்மாள், தனது உயிர் பிரியும் தறுவாயில், 'இனிவரும் காலங்களில் என்னைப் போன்ற தேவதாசிகளில் யாரேனும் மரணம் அடையும்போது, கோயில் திருமடப் பள்ளியில் இருந்து நெருப்பும், திருக்கொட்டாரத்தில் இருந்து அரிசி, தீர்த்தம், மலர் மாலை, திருப்பரிவட்டம் ஆகியவற்றைக் கொடுத்தனுப்ப வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அந்த வழக்கம் வெகுகாலத்துக்கு நடைமுறையில் இருந்தது. 1953-ல் தாசிகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்த பிறகுதான் இந்த வழக்கம் நின்று போயிற்று.
திருவரங்க ஸ்வாமிகள் திரு கமல பாதங்களே சரணம்...🙏
No comments:
Post a Comment