Friday, February 8, 2019

அதிரவைக்கும் உண்மை!

கோயிலை நிர்வகிப்பதற்கு அரசுக்கு சட்டபடி உரிமையில்லை...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், வீரவசந்தராயர் மண்டப தீ விபத்துக்கு பின், கோவில் நிர்வாகத்தை, இந்து சமுதாய வசமாக்க கோரிக்கைகள் எழுந்தன. அதற்கு, தீ சேதத்தை பார்வையிட வந்த, துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம், 'ஒரு சம்பவத்திற்காக, கோவில் நிர்வாகத்தை தனியாரிடம் கொடுக்க முடியாது.
'கடைகளால் தீ விபத்து ஏற்பட்டது என, தெரியவந்தால், அவற்றை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என, சாதாரண சம்பவம் நடந்தேறியதைப் போல பதிலளித்துள்ளார். ஒரு சம்பவம் தான் நடந்துள்ளதா; கடந்த ஆண்டு, சுந்தரேஸ்வரர் பிரகாரத்தை விழுங்கிய வெள்ளத்தை மறந்து விட்டார்களா; நிர்வாகத்தை, தனியார் வசம், அரசென்ன மாற்றுவது?
மீனாட்சி அம்மன் கோவிலை, அரசு நிர்வகிப்பதே சட்டப்படி செல்லாது என்பது, பன்னீர் செல்வத்துக்கு தெரியுமா? ஏன் செல்லாது என்பதை தெரிந்து கொள்ள, சற்று பின்நோக்கி பார்ப்போம்.
கடந்த, 1920 - 1937 வரையிலான கால கட்டத்தில், 13 ஆண்டுகள் மெட்ராஸ் மாகாணத்தை, பிரிட்டிஷ் அரசுடன் சேர்ந்து, கூட்டாட்சி செய்த நீதி கட்சி, தன் கொள்கை காரணங்களுக்காக, 1927ல், இந்து சமய அறக்கட்டளை சட்டத்தை இயற்றியது. அதன் வாயிலாக, இந்து சமய வாரியத்தை உருவாக்கி, கோவில்களை கொஞ்சம் கொஞ்சமாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இந்த வாரியம் வந்த பின் தான், கோவில்களுக்குள் கடைகள், உண்டியல்கள் எல்லாம் புகுந்தன.
தெப்பக்குளங்கள் மீன் குத்தகைக்கு விடப்பட்டன, கோவில் நிலங்கள் கேள்விக்குறியாகத் துவங்கின. அதாவது, சிலர் மட்டும், வருமானம் பார்ப்பதற்கான இடங்களாக, கோவில்கள் மாற்றப்பட்டன.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் எல்லாம், சந்தை போல மாறியதற்கு, இந்த சட்டம் தான் பிள்ளையார் சுழி போட்டது.
இந்திய அரசியல் சட்டம், 1950ல், அமலுக்கு வந்தது. அதில், அனைத்து சமூகங்களுக்கும் பாகுபாடின்றி மத உரிமைகள் வழங்கப்பட்டன. மத உரிமை என்றால், அதில் வழிபாட்டு தலங்கள், அவற்றின் நிர்வாகம் எல்லாமும் தான் அடக்கம். அரசியல் சட்டப்படி, அப்போது, பி.எஸ்.குமாரசாமி ராஜா தலைமையில் இயங்கிய, மெட்ராஸ் மாகாண அரசு, கோவில்களை, இந்து சமூகங்களிடம் மீண்டும் ஒப்படைத்து இருக்க வேண்டும். அப்படி செய்யாமல், அவசர அவசரமாக, 1951ல், தற்போதைய அறநிலையத் துறையை உருவாக்கும் வகையில் சட்டம் இயற்றியது.
அந்த சட்டம் அமலாகும் வரை, தனித்தனி அரசாணைகள் மூலம் தான், கோவில்கள் அரசு வசப்பட்டு வந்தன. ஆனால், புதிய சட்டமோ, 'அனைத்து கோவில்களும், அரசால் எடுக்கப்பட்டவையாக கருதப்பட வேண்டும்' என, பிரகடனப் படுத்தியது.
இந்த, மத உரிமைக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து, அன்றைய தரும புர ஆதீன தலைவர், நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடி வந்தார். அப்படி ஒரு வழக்கில், 1965 பிப்ரவரி, 10ம் தேதி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, மதுரை, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ஸ்ரீவில்லிபுத்துார், திருவாரூர், மன்னார்குடி, திருச்செந்துார், பழநி உள்ளிட்ட, 45 முக்கிய கோவில்கள் (பட்டியலை பார்க்கவும்) மீதான, அரசின் கட்டுப்பாடு ரத்தானது.
இந்த உண்மை -தமிழக மக்களுக்கும், இந்து அமைப்புகளுக்கும், தமிழக வழக்கறிஞர்களுக்கும் தெரியாத ரகசியமாக, இன்றளவும் இருந்து வருவது ஒரு பேராச்சரியம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பின்னும், கோவில்களை யாரிடமிருந்து அரசு எடுத்துக் கொண்டதோ, அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வில்லை. அதை செய்யாமல் இருக்க, 1965 ஜூலையில், அறநிலையத்துறை சட்டத்தில், 75- ஏ, 75- பி, 75 சி என்ற, மோசடி பிரிவுகள் நுழைக்கப்பட்டன.
இவை தவறான பிரிவுகள், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க நுழைக்கப்பட்டவை என, சென்னை உயர்நீதிமன்றம், வேறு ஒரு வழக்கில் குறிப்பிட்டு உள்ளது. புதிய பிரிவுகள், 45 கோவில்கள் மீதான அரசின் கட்டுப்பாட்டை, 1966 ஜூலை, 15ம் தேதி வரை நீட்டித்தன. அதன்படி பார்த்தாலும், 1966 ஜூலை, 16ம் தேதி, அந்த கோவில்களில் இருந்து, அரசு வெளியேறி இருக்க வேண்டும்; அதையும் செய்ய வில்லை.
அதாவது, உச்ச நீதிமன்ற உத்தரவை, அவமதித்துள்ளது மட்டுமின்றி, தன் சட்டத்தையே மதிக்காமல், 45 கோவில்களை, கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, தமிழக அரசு. வீரவசந்தராயர் மண்டபத்தின் விலைமதிப்பில்லா தொன்மையையும், எழிலையும் இழந்து நிற்கிறோம் என்றால், அதற்கு;
*52 ஆண்டுகளுக்கு முன், பதவி காலாவதியான செயல் அலுவலர் கோலோச்சுவது
*எந்த காலத்திலும் மூன்று மாதங்களுக்கு மேல் இருக்க முடியாத, இடைக்கால பதவி உடைய தக்கார், சர்வ நிரந்தரமாக தொடர்வது
*ஆகமப்படியும், சட்டப்படியும், கோவில்கள் உள்ளே இருக்க முடியாக்கடைகள் உள்ளிட்ட அவலங்களை சாத்தியப்படுத்தும், தமிழக அரசின் சட்டத்தையும், நீதித்துறையையும் கேலிக்கூத்தாக்கும் செயல்பாடுகள் தான் காரணம்.
மதுரையில், மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய அர்ச்சனை தட்டுக்கும், பூவுக்கும் செலவு செய்யும் பக்தர்கள், அந்த பணத்தை, தமிழக அரசு மீது வழக்கு தொடுத்து, கோவிலுக்கு விடுதலை வாங்கித்தர ஒன்று கூடி செலவு செய்தால், அதுவே வழிபாட்டில் சிறந்த வழிபாடாக இருக்கும்.
-டி.ஆர்.ரமேஷ், தலைவர்,கோவில் வழிபடுவோர் சங்கம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...