
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து “மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி” என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சிக்கு வந்துள்ளன.சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் முதல்- மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
உத்தவ் தாக்கரே சட்ட சபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை வரும் 3-ந்தேதிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு மூலம் நிரூபித்து காட்ட வேண்டும் என்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டடார். அதன்படி மகாராஷ்டிர மாநில சட்டசபையின் 2 நாள் சிறப்பு கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இன்று பிற்பகல் சபை கூடியதும் சட்டப்பேரவை விதிகளின் படி சிறப்புக்கூட்டம் கூட்டப்படவில்லை என பாஜக குற்றச்சாட்டி அமளியில் ஈடுபட்டது. எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகரை நியமித்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் கோரிக்கை விடுத்தார். இடைக்கால சபாநாயகர் நியமனமும் அரசியலமைப்புகு எதிரானது என்று அவர் குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்கும்படி இடைக்கால சபாநாயகர் கேட்டுக்கொண்டார். ஆனால், தொடர்ந்து சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 169 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
No comments:
Post a Comment