Saturday, November 23, 2019

அரங்கேற்றம்! பவார் கட்சியை உடைத்தது பா.ஜ.,

மஹாராஷ்டிரா அரசியலில், நேற்று அதிகாலை அதிரடி மாற்றம் நிகழ்ந்தது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்கட்சியை உடைத்து, பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்தது. பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்., கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். ஆட்சி கனவு கலைந்ததால், எரிச்சல்அடைந்துள்ள சிவசேனா தலைவர்கள், பா.ஜ., அரசை கவிழ்க்கப் போவதாக அறிவித்துள்ளனர்.





மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 105 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனா, 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.இது, தனிப் பெரும்பான்மையை விட அதிகமான தொகுதிகள் என்றாலும், முதல்வர் பதவி விஷயத்தில் இரு கட்சி களுக்கும் இடையே கருத்து வேறுபாடுஏற்பட்டு, கூட்டணிமுறிந்தது.





இதையடுத்து, 54 தொகுதிகளில் வெற்றி பெற்ற, சரத் பவாரின் தேசியவாத காங்., மற்றும் 44 தொகுதிகளில் வெற்றி பெற்ற, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க, சிவசேனா முயற்சித்தது. அதற்குள், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டது. ஆனாலும், சிவசேனா தலைவர்கள், ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியாவை, சரத் பவார் சந்தித்து பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. நேற்று முன்தினம் முழுவதும், மூன்று கட்சிகளின் தலைவர்களும் மும்பையில் முகாமிட்டு ஆலோசனை நடத்தினர்.





கூட்டம் முடிந்ததும், அன்று இரவு செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார், '3 கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு அமையும்' என்றார். செய்தியாளர்கள் இது குறித்து திரும்ப திரும்ப கேட்டதும், எரிச்சல் அடைந்த சரத் பவார், 'உங்களுக்கு ஹிந்தி தெரியாதா... உத்தவ் தாக்கரே தான், அடுத்த முதல்வர்' என, திட்டவட்டமாக கூறிவிட்டு கிளம்பினார்.இதையடுத்து, சிவசேனா, காங்., தேசியவாத காங்., ஆகிய கட்சிகளின் தலைவர்கள், நேற்று காலை, கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோர திட்டமிட்டிருந்தனர்.
Maharashtra CM and Dy CM oath-taking ceremony

அதற்கு பின் தான், பா.ஜ.,வின் அதிரடி அரசியல் அரங்கேறியது.தேசியவாத காங்., கட்சி யின் மூத்த தலைவரும், சரத் பவாரின் உறவினருமான அஜித் பவாருடன் இணைந்து, ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில், பா.ஜ., தலைவர்கள் இறங்கினர். நேற்று முன்தினம் இரவு முழுவதும், இதற்கான வேலைகள் வேகமாகவும், மிகவும் ரகசியமாகவும் நடந்தன.

பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைக்க, தேசியவாத காங்., கட்சியின், 54 எம்.எல்.ஏ.,க்களும் ஆதரவு அளித்துள்ளதாக கூறி, அவர்கள் கையொப்பமிட்டமிட்ட கடிதங்களை, நேற்று அதிகாலை, பா.ஜ., மற்றும் தேசியவாத காங்., தலைவர்கள், கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியிடம் அளித்தனர். இதையடுத்து, அதிகாலை, 5:37க்கு, மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி திரும்ப பெறப்பட்டதாக, ஜனாதிபதி மாளிகை அறிவிக்கை வெளியிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில், பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ், தேசியவாத காங்., கின் அஜித் பவார் உள்ளிட்ட தலைவர்கள், மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றனர். அங்கு நடந்த எளிமையான விழாவில், தேவேந்திர பட்னவிஸ், 49, முதல்வராகவும், அஜித் பவார், 60, துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

காலையில், கவர்னர் மாளிகைக்கு செல்வதற்காக தயாராக இருந்த சிவசேனா தலைவர்கள், 'டிவி' சேனல்களில்,பதவியேற்பு விழா குறித்த செய்தியை பார்த்ததும், அதிர்ச்சியில் உறைந்தனர். காங்கிரஸ் தலைவர்களாலும், இதை ஜீரணிக்க முடியவில்லை. தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரோ, ''அஜித் பவார், தன்னிச்சயைாக இந்த முடிவை எடுத்துள்ளார். அவரது முடிவுக்கும், தேசியவாத காங்., கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என்றார்.

இது குறித்து, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது:மஹாராஷ்டிராவில், பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான், தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு. ஆனால், சிவசேனா, எதிர்க்கட்சிகளுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தது. தற்போது, மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப அரசு அமைந்துள்ளது. இது, 'கிச்சடி' அரசாக இல்லாமல், நிலையான அரசாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

30ம் தேதி வரை கெடு

பெரும்பான்மையை நிரூபிக்க, பட்னவிசுக்கு, வரும், 30 வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளதாக, கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. பா.ஜ., தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்ததை அடுத்து, மஹாராஷ்டிரா முழுவதும், அந்த கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் அஜித் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு, நேற்று போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மஹாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றம், முதல்வர் பதவியை எதிர்பார்த்திருந்த உத்தவ் தாக்கரேக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது கட்சியினரும், இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

பா.ஜ., தலைமையில் அமைந்துள்ள புதிய அரசை கவிழ்ப்பதற்கான முயற்சியில், சிவசேனா தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

நீதிமன்றத்தில் மனு


முதல்வராக பட்னவிஸ், துணை முதல்வராக அஜித் பவாருக்கு, விதிமுறைகளை மீறி, கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளதாகவும், இது செல்லாது என உத்தரவிடக் கோரியும், சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில், பா.ஜ., குதிரை பேரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால், 24 மணி நேரத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வர் பட்னவிசுக்கு உத்தரவிடும்படியும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று காலை 11.30 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது.

கட்சி உடைந்தது!
அஜித் பவாரின் நடவடிக்கையால், கட்சியும் உடைந்து விட்டது; எங்கள் குடும்பமும் சிதறி விட்டது. வாழ்க்கையில், யாரை நம்புவதென்றே தெரியவில்லை. இப்படி ஒரு துரோகத்தை, என் வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை. அவரை நம்பினோம்; நேசித்தோம். பதிலுக்கு அவர் என்ன செய்துள்ளார் என்பதை பார்த்தீர்களா...

சுப்ரியா சுலேஎம்.பி., - தேசியவாத காங்.,


பிரத்யேக உரிமை!

ஒரு மாநிலத்தில், யாரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பது, அந்த மாநிலத்தின் கவர்னருக்கு உள்ள பிரத்யேக உரிமை. அதன் அடிப்படையில் தான், மஹாராஷ்டிரா கவர்னர், ஆட்சி அமைக்கும்படி, தேவேந்திர பட்னவிசுக்கு அழைப்புவிடுத்துள்ளார். இதில், எந்தஅரசியலுக்கும் இடமில்லை.

ராஜ்நாத் சிங்.,ராணுவ அமைச்சர், பா.ஜ.,

அஜித் மீது சரத் பவார் பாய்ச்சல்


தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர், நேற்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சரத் பவார் கூறியதாவது:

அஜித் பவார் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன்; அவர் ஏமாற்றி விட்டார். சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதற்காக, எங்கள் எம்.எல்.ஏ.,க்களிடம், கையொப்பமிட்ட கடிதங்களை வாங்கி வைத்திருந்தோம். அவை அனைத்தும் அஜித் பவாரிடம் தான் இருந்தன. அந்த கடிதங்களைத் தான், பா.ஜ., ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதங்கள் என, கவர்னரிடம் கொடுத்துள்ளார்.

எங்கள் எம்.எல். ஏ.,க்கள் சிலரிடம், எந்த காரணமும் கூறாமல், வலுக்கட்டாயமாக கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அவர்கள் தற்போது எங்களிடம் திரும்பி விட்டனர். கட்சியின் சட்டசபை தலைவர் பதவியிலிருந்து அஜித் பவார் நீக்கப்பட்டுள்ளார். பா.ஜ.,வுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.,க்கள் மீது, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திடீர் அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழும். அதற்கு பின், சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி விரைவில் அமையும்.

என் மகள் சுப்ரியா சுலேவுக்கும், அஜித் பவாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே, இந்த நிகழ்வு நடந்ததாக கூறப்படுவது தவறு. சுப்ரியாவுக்கு, மாநில அரசியலில் ஆர்வம் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

வேடிக்கை பார்க்க மாட்டோம்உத்தவ் தாக்கரே ஆவேசம்


மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:மஹாராஷ்டிரா மீது, பா.ஜ., துல்லிய தாக்குதல் நடத்தியுள்ளது. எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் சிலரை, தங்கள் பக்கம் இழுக்க, பா.ஜ., தலைவர்கள் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு, பணம், பதவி ஆசை காட்டப்படுகிறது. சிவசேனாவை உடைக்க, பா.ஜ., முயற்சித்தால், அதை, மஹாராஷ்டிரா மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். இவ்வாறு, அவர் கூறினார்.

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:அஜித் பவார் மீதுள்ள ஊழல் வழக்குகளுக்காக, பா.ஜ., தலைவர்கள், அவரை, 'பிளாக் மெயில்' செய்து, தங்கள் பக்கம் இழுத்துள்ளனர். அவர்களது மிரட்டலுக்கு பயந்து, சரத் பவாருக்கு, அஜித் பவார், துரோகம் செய்து விட்டார்; முதுகில் குத்தி விட்டார். சிவசேனா ஆட்சி அமைக்க, தேசியவாத காங்., - எம்.எல்.ஏ.,க்களிடம், கையொப்பமிட்ட கடிதங்கள் வாங்கப்பட்டன. இதைத் தான், பா.ஜ., ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதமாக, அஜித் பவார், கவர்னரிடம் கொடுத்துள்ளார். இதைக் கூட சரி பார்க்காமல், அவர்களுக்கு அவசர அவசரமாக, கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.

தவறே இல்லை!

மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: மஹாராஷ்டிரா மக்கள், பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைவதற்கு தான் ஓட்டளித்தனர். அவர்களது விருப்பம் நிறைவேறியுள்ளது. சட்ட ரீதியாகவும், தார்மிக ரீதியாகவும், ஆட்சி அமைப்பதற்கான உரிமை எங்களுக்கே உள்ளது.

இந்த விஷயத்தில், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து துரோகம் செய்தது, சிவசேனா தலைவர்கள் தான். பா.ஜ., சட்டசபை தலைவர் பட்னவிஸ். தேசியவாத காங்., சட்டசபை தலைவர் அஜித் பவார். இவர்கள் கொடுத்த ஆதரவு கடிதங்களின் அடிப்படையில் தான், கவர்னர், அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். இதில் என்ன தவறு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

அஜித் பவாருக்குஎத்தனை பேர் ஆதரவு?
தேசியவாத காங்., கட்சியில், 54 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில், கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவுக்கு, சிலர் சென்றிருந்தனர். ஆனால், எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் அவருடன் சென்றனர் என்ற தகவல் தெரியவில்லை. அதேநேரத்தில், பதவியேற்பு விழாவுக்கு சென்ற, எம்.எல்.ஏ.,க்களில், தனஞ்செய் முண்டே உள்ளிட்ட ஏழு பேர், நேற்று, மீண்டும் சரத் பவாரிடம் திரும்பினர். நேற்று மாலை, மும்பையில் நடந்த தேசியவாத காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், 'அஜித் பவார் உட்பட, ஐந்து பேர் பங்கேற்கவில்லை என, அந்த கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதன்படி பார்த்தால், சரத் பவாருக்கு, 49 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க, 144 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. பா.ஜ., 105 தொகுதிகளை வைத்துள்ள நிலையில், அஜித் பவாருக்கு, எத்தனை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை. இதனால், பட்னவிஸ் அரசு தப்புமா என்பது, நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது தான் தெரிய வரும். நேற்று நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், தேசியவாத காங்., கட்சியின் சட்டசபை தலைவர் பதவியிலிருந்து அஜித் பவார் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஜெயந்த் பாட்டீல் தேர்வு செய்யப்பட்டார்.

'தாதா' அஜித் பவார்!


மஹாராஷ்டிரா அரசியலில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தி, ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கவனத்தையும், நேற்று, தன் பக்கம் இழுத்த அஜித் பவார், 60, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் மூத்த சகோதரர் மகன். அஜித் பவாரின் தந்தை, திரைப்பட துறையை சேர்ந்தவர். அஜித் பவார், தன் தந்தை வழியை பின்பற்றாமல், சித்தப்பா வழியை பின்பற்றி, அரசியலுக்கு வந்தார். மஹாராஷ்டிரா அரசியலில், இவருக்கு, 'தாதா' என்ற பட்டப் பெயரும் உண்டு.

கடந்த, 1991ல், பரமத்தி சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பரமத்தி, சரத் பவாரின் குடும்பத்தினரின் செல்வாக்கு பெற்ற தொகுதி என்பதால், அதில் எளிதாக வெற்றி பெற்ற அஜித் பவார், தொடர்ந்து நடந்த தேர்தல்களிலும், அந்த தொகுதியை தக்க வைத்தார். அதற்கு பின், மஹாராஷ்டிரா அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்தார். மஹாராஷ்டிரா அரசில், பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டார்.

காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சியில், துணை முதல்வராக பதவி வகித்தார். அப்போது, நீர்ப்பாசனத் துறையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேசியவாத காங்., கட்சியின் நிறுவனரான சரத் பவாருக்கு, தேசிய அளவில் செல்வாக்கு இருந்தாலும், மஹாராஷ்டிராவில், கட்சியை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார், அஜித் பவார்.

கடந்த லோக்சபா தேர்தலின் போது, தன் மகன் பர்த் பவாரை, போட்டியிட வைத்தார், அஜித் பவார். ஆனால், அவர் வெற்றி பெறவில்லை. 'என் மகன் வெற்றி பெறுவதை, சரத் பவார் விரும்பவில்லை' என, வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து, தேசியவாத காங்., கட்சிக்குள் சல சலப்பை ஏற்படுத்தினார், அஜித் பவார். சரத் பவாரின் மகள், சுப்ரியா சுலேயின் அரசியல் வளர்ச்சியும், அஜித் பவாருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சரத் பவார், தன் மகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தன்னை ஓரம் கட்டுவதாக, அவர் நினைத்தார். சமீபத்தில், சட்டசபை தேர்தல் பிரசாரம் நடந்தபோதே, மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த, 25 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டில், அஜித் பவாருக்கும், சரத் பவாருக்கும் தொடர்பு இருப்பதாக, அமலாக்க துறை, இருவருக்கும், 'சம்மன்' அனுப்பியது. இதையடுத்து, அரசியலுக்கு முழுக்குப் போடுவதாக அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தினார், அஜித் பவார்.

சரத் பவார் சமாதானப்படுத்தியதை அடுத்து, ராஜினாமா முடிவை கைவிட்டார். சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க, தேசியவாத காங்., தலைவர்கள் பேச்சு நடத்திய போதெல்லாம், அதில் பங்கேற்ற அஜித் பவார், மிகவும் அமைதியாகவே இருந்தார். தற்போது அவர் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜித் பவார்

படங்கள் உடைப்பு
தேசியவாத காங்., கட்சி தொண்டர்களில் ஒரு தரப்பினர், நேற்று, மும்பை உள்ளிட்ட நகரங்களில், அஜித் பவாரின் போஸ்டர்களை அடித்து உடைத்தனர். அஜித் பவாருக்கு எதிராகவும், சரத் பவாருக்கு ஆதரவாகவும் கோஷமிட்டனர். அஜித் பவாரின் சொந்த தொகுதியான பரமத்தியில், பல இடங்களில் சரத் பவாரின் புகைப்படங்களுடன், அவரை வாழ்த்தும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்ட போஸ்டர்களை ஒட்டினர்.


ஜனாதிபதி ஆட்சி'வாபஸ்' எப்படி?


மத்திய அமைச்சரவையின் பரிந்துரை இல்லாமல், மஹாராஷ்டிராவில், அவசர கதியில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மஹாராஷ்டிராவில், ஜனாதிபதி ஆட்சியை திரும்ப பெறுவதற்கான பரிந்துரையை, மத்திய அமைச்சரவைக்கு பதிலாக, பிரதமருக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, மத்திய அரசே, ஜனாதிபதியிடம் கொடுத்தது. இதன் அடிப்படையில், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை திரும்ப பெறுவதற்கான ஒப்புதலை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அளித்தார். இது குறித்து, அறிவிக்கையும் வெளியிடப்பட்டதை அடுத்து, நேற்று அதிகாலை, 5:47க்கு, மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி திரும்ப பெறப்பட்டது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


அதிகார பசியில் அலைவதா?காங்கிரஸ் கடும் தாக்கு


காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, டில்லியில் நேற்று கூறியதாவது: மஹாராஷ்டிராவில் நடந்த அனைத்து விஷயங்களுமே, நீதிக்கு புறம்பானவை. சட்ட நடைமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அங்கு அமைந்துள்ள அரசு, சட்டவிரோதமானது. ஆட்சியமைப்பதற்காக, இந்த கூட்டணியை, யார் முன்மொழிந்தனர்? நள்ளிரவு, 2:00 மணிக்கு, மஹாராஷ்டிர கவர்னரை, தேவேந்திர பட்னவிஸ் சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். கவர்னரும் சம்மதித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கைப்பாவையாக, கவர்னர் செயல்பட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, ஏதோ, தன் கையில் இருக்கும் விளையாட்டுப் பொம்மை என, அவர் நினைத்துவிட்டார். ஏற்கனவே, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும் நிலையில், அதை விலக்குவதற்கான ஒப்புதலை பெற வேண்டும். அப்படியெனில், மத்திய அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட வேண்டும்.அதுபோன்ற கூட்டம், டில்லியில், எப்போது நடந்தது என, தெரிய வேண்டும். அதிகார வெறியில், பா.ஜ., அலைகிறது. இந்திய வரலாற்றில், மிகவும் கவலைக்குரிய கருப்பு நாள் இது.தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை, பா.ஜ., மிரட்டியுள்ளது.

அஜித் பவாரை, ‛சிறையில் அடைத்துவிடுவேன்' என, பா.ஜ.,மிரட்டியுள்ளதாலேயே, அவரும், கட்சியை உடைக்க நேரிட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு, பா.ஜ., தலைவர்கள் வலை வீசக்கூடும் என்பதால், அவர்களை, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்ல, காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது.

மஹாராஷ்டிரா, 'நாடகம்' எப்படி...

*அக்., 21 - 2019: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடந்தது

* அக்., 24: தேர்தல் முடிவு அறிவிப்பு. பா.ஜ., 105, சிவசேனா, 56, தேசியவாத காங்., 54, காங்., 44 தொகுதிகளில் வெற்றி
* 'ஆட்சியில் சம பங்கு வேண்டும்' என, பா.ஜ., விடம் சிவசேனா கோரிக்கை. முதல்வர் பதவியை பங்கிட வேண்டும் என்றும் சிவசேனா பிடிவாதம்

* நவ., 8: முதல்வர் பட்னவிஸ் ராஜினாமா. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த, பா.ஜ., வை,
கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்தார்

* நவ., 10: பெரும்பான்மை இல்லாததால், ஆட்சியமைக்க, பா.ஜ., மறுப்பு

* நவ., 11: இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனா ஆட்சியமைக்க, கவர்னர் அழைப்பு

* நவ., 12: மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்., ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு. யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஜனாதிபதி ஆட்சி அமல்.

* நவ., 22 : சிவசேனா - தேசியவாத காங்., - காங்., ஆட்சியமைக்க உள்ளதாக கூட்டாக அறிவிப்பு

விடிய விடிய...


* நவ., 22, நள்ளிரவு, 11:45 மணி: அஜித் பவார் - பா.ஜ., ஒப்பந்தம் இறுதி முடிவு
11:55: பா.ஜ., தலைமையுடன், பட்னவிஸ் ரகசிய ஆலோசனை. ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின்
விபரம் அளித்து, முதல்வராக பதவியேற்க கட்சி மேலிடத்திடம், பட்னவிஸ் கோரிக்கை

* நவ., 23, அதிகாலை, 12:30: டில்லி பயணத்தை ரத்து செய்தார் கவர்னர்
2:10: ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறும் உத்தரவு குறித்து, செயலர் மற்றும் அதிகாரிகளுடன் கவர்னர் கோஷியாரி ஆலோசனை.
5:30 மணி: கவர்னர் மாளிகைக்கு, பட்னவிஸ், அஜித் பவார் வருகை. ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலை அளித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார் பட்னவிஸ்.

5:47: ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டது. பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
7:30: முதல்வராக பட்னவிஸ், துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்பு.

திரும்புகிறதா '1978'


மஹாராஷ்டிராவில் 1978 மார்ச்சில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சி 99, காங்., 69,
இந்திரா காங்., 62, உழவர் மற்றும் தொழிலாளர் கட்சி 13, மார்க்சிஸ்ட் 9, சுயேச்சைகள் 28,
மற்றவை 8 இடங்களில் வென்றன.தனித்து போட்டியிட்ட காங்., மற்றும் இந்திரா காங்., தேர்தல் முடிவுக்குப்பின், கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. காங்கிரசின் வசந்த்தாதா பாட்டில் முதல்வரானார். சரத் பவார் தொழிலாளர் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

1978 ஜூலை 18ல் காங்., கட்சியில் இருந்து 38 எம்.எல்.ஏ.,க்களுடன் வெளியேறி, ஜனதா கட்சி,
உழவர் மற்றும் தொழிலாளர் கட்சியுடன் இணைந்து சரத் பவார் ஆட்சி அமைத்தார். அப்போது 38 வயதான அவர் மாநிலத்தின் இளம் முதல்வரானார். இந்திரா மீண்டும் பிரதமரானவுடன் 1980 பிப்., 17ல் பவார் ஆட்சி கலைக்கப்பட்டது. இவரது வழியை தற்போது அஜித் பவார் பின்பற்றிஉள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...