Friday, November 22, 2019

திருவள்ளுவரையும் விட்டு வைக்கவில்லையே!

தி.மு.க., மற்றும் அதன் தாய் கழகமான, திராவிடர் கழகத்தினருக்கு, ஒரு நோய் உண்டு. ஹிந்து மதம், தர்மம் சார்ந்த விஷயங்களில் மட்டும் தான், அவர்கள் குற்றம் கண்டுபிடிப்பர்; பிற மதங்களின் கொள்கைகளையோ, அதன் தலைவர்களையோ விமர்சிக்க மாட்டார்கள்.
'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்ற சொலவடை போல, அவர்களுக்கு ஒரே இலக்கு, ஹிந்துக்களை மட்டம் தட்ட வேண்டும் என்பது மட்டும் தான்.ஜாதியை ஒழிக்கப் போகிறோம்; சமூக நீதியை காக்கப் போகிறோம் என, அறைகூவல் விடும், திராவிடக் கட்சிகளுக்கு, இப்போது வந்துள்ள சந்தேகம், 'திருவள்ளுவர், ஹிந்துவா, இல்லையா' என்பது தான்.
ஏனெனில், அவர்களின் கடவுள் மறுப்பு கொள்கைக்கும், உலகம் போற்றும் திருக்குறளுக்கும் நிறைய மாறுபாடுகள் இருப்பதால், 'திருவள்ளுவர், ஹிந்து அல்ல' என்ற பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.
இதற்கெல்லாம் காரணம், திருவள்ளுவர் தான். ஆம். சாதாரணமாக, கோவிலில் உபயமாக தொங்க விடப்படும் குண்டு பல்ப் மேலேயே, உபயம் இன்னார் என, எழுதுவோர் உள்ள நாட்டில், உலகமே வியக்கும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர், தான் என்ன ஜாதி, மதத்தைச் சேர்ந்தவர் என்பதை தெரிவிக்காமல் விட்டு விட்டார்.அவர் செய்த நற்செயல், திராவிட கட்சிகளால், தப்பிதமாக பிரசாரம் செய்யப்படுகிறது.
திராவிட கட்சிகளின் தலைவர்களுக்கு வேண்டுமானால், திருவள்ளுவர், ஹிந்துவாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால், அவரின் கொள்கைகள், கருத்துகள் அப்படியே, ஹிந்து மதத்தினதாகவே விளங்குகின்றன. இது தான் உண்மை.
திருவள்ளுவர், ஹிந்து தான்; அவர் பின்பற்றிய மதம், ஹிந்து மதம் தான் என்பதை, அவரின் குறள்கள் மூலம் எளிதாக அறியலாம். அவர், ஜைன மதத்தைச் சேர்ந்தவர் என்று சிலர் கூறுவர். அவர், ஜைனர் என்றால், இறைவனின் தாமரைப் பாதத்தில் பணிவது; அவன் புகழ் பாடுவது என்றெல்லாம் எழுதி இருக்க மாட்டார். அவர், புத்த மதத்தவராக இருக்கவும் வாய்ப்பில்லை.ஏனெனில், புத்த மதத்திலும், இறைவனின் தாமரைப் பாதங்களில் பணிதல், வேதங்கள் (மறை) ஆதரவு போன்ற கோட்பாடுகள் இல்லை. அதுபோல, திருவள்ளுவர் பிறந்த பிறகு தோன்றியவை தான், இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதங்கள்.
மேலும், அவர் வாழ்ந்த காலத்தில், இந்தியாவில் ஹிந்து மதம் மட்டுமே இருந்தது; பிற மதங்கள் மட்டுமல்ல; மத எதிர்ப்பாளர்களும் கிடையாது. அதனால் தான், இந்த உண்மையை அறிந்ததால் தான், முஸ்லிம், கிறிஸ்துவர், சமண, புத்த, சீக்கிய மதத்தவர்கள், திருவள்ளுவரை சொந்தம் கொண்டாடுவதில்லை.அவர்களுக்குத் தெரியும், திருவள்ளுவர் ஹிந்து தான் என்று. ஆனால், அதை தெரிந்தும் தெரியாதது போல குழப்பம் விளைவிப்பதே, திராவிட கட்சிகளின் குசும்பு வேலையாக உள்ளது.
தர்மம், அர்த்தம், கர்மம், மோட்சம் ஆகிய நான்கு தர்மங்களை போதிக்கிறது, ஹிந்து மதம். அதைத் தான் திருவள்ளுவரும், அறம், பொருள், இன்பம் என்று, மூன்று பால்களாக கூறி, வீடு பேறு எனப்படும் மோட்சத்திற்கு அவற்றை வழிகாட்டி இருக்கிறார். அவரின் அரசியல் கருத்துகள், சாணக்கியர் எழுதிய, 'அர்த்தசாஸ்திரம்' கருத்துகளை போல உள்ளன.
திருக்குறள் பாடல்கள், 610 மற்றும், 1,103ல், மஹா விஷ்ணு பற்றி, வள்ளுவர் குறிப்பிடுகிறார். 167, 408, 519, 565, 568, 616, 617 ஆகிய குறள்களில், லட்சுமி தேவி பற்றியும் குறிப்பிடுகிறார். இதன் மூலம், அவர் ஒரு வைணவ நம்பிக்கையாளர் என்பது தெரிகிறது. தவிர, பிரம்மா பற்றியும், 'அடி அளந்தான்' என, வாமன அவதாரம் பற்றியும், தன் பாடல்களில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
'திருக்குறளில் அவர் எழுதியிருக்கும் சில பதங்களான, வேதம் எனப்படும் மறை, கடவுள்கள் என்ற பன்மை, நற்குணம், முனி, சாது, மறு பிறவி, ஆதி பகவன் போன்ற வார்த்தைகள், ஹிந்து மதத்திற்கு மட்டுமே உரியவை' என, திருக்குறளுக்கு உரை எழுதிய, பரிமேலழகர் கூறுகிறார்.திருக்குறளை ரஷ்ய மொழியில் பெயர்த்த, ஜெ.ஜெ.க்ளாசவ் என்ற அறிஞர், 'திருவள்ளுவர், ஹிந்து மத நம்பிக்கை கொண்டிருந்தவர்' என, குறிப்பிடுகிறார். 'இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன், அதாவது, கி.மு., 31ம் ஆண்டைச் சேர்ந்தவர், திருவள்ளுவர்' என, முதுபெரும் தமிழறிஞர் மறைமலை அடிகள் கூறியுள்ளார்.
தமிழக அரசும் இதையே, 1935ம் ஆண்டு முதல் பின்பற்றுகிறது. தமிழ் அறிஞரான சோமசுந்தர பாரதியார், திருவள்ளுவரின் காலத்தை, கி.மு., 300 என்கிறார்.திருக்குறளிலேயே கூட, அதன் ஆசிரியர் திருவள்ளுவர் என்று குறிப்பிடப் படவில்லை. பின் வந்த, 'திருவள்ளுவமாலை' என்ற நுால் தான், அதன் ஆசிரியர் திருவள்ளுவர் என்கிறது.
திருவள்ளுவர் மனைவியின் பெயர், வாசுகி என, பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. வாசுகி என்பது, ஹிந்துப் பெயராகும்.ஆங்கிலேயர் காலத்தில் வெளி வந்த திருவள்ளுவரின் படங்களில், ஹிந்து மதச் சின்னங்களுடனே அவர் இருந்துள்ளார்.
பின், காங்கிரசைச் சேர்ந்த பக்தவத்சலம் முதல்வராக இருந்த போது, எதிர்க் கட்சியாக இருந்த, தி.மு.க.,வின் தலைவர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று, சேலத்தைச் சேர்ந்த வேணுகோபால சர்மா என்ற ஓவியரால், கருணாநிதி கூறியபடி வரையப்பட்டதே, இப்போதைய திருவள்ளுவர் படம். அந்தப் படம் தான், தமிழக சட்டசபையில் வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் ஹிந்து எதிர்ப்பு எண்ணப்படி உருவாக்கப்பட்டது தான், திருவள்ளுவர் படம். அதைத் தான், தி.மு.க., மற்றும் தி.க.,வினர், இப்போதும் துாக்கிப்பிடிக்கின்றனர். எனினும், உண்மை தான் எப்போதும் மேலோங்கி நிற்கும்.
ஒருவரின் பின்னணியை, அவரின் படைப்புகளில் இருந்து, ஓரளவுக்கு யூகிக்க முடியும். எனவே, திருக்குறளை ஆராய்வதன் மூலம், திருவள்ளுவரின் ஹிந்து மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களை அறியலாம்.
ஹிந்து தர்மம் எனப்படும், சனாதன தர்மத்தில் மட்டுமே காணப்படும் கருத்துகள், திருக்குறளில் உள்ளன. 'உடல் மட்டுமே அழிகிறது; ஆத்மா உடல் மாறிச் செல்கிறது' என்பது, பகவத் கீதையின் அடிப்படை கருத்து. வள்ளுவரும், திருக்குறள், 338ம் பாடலில், நிலையாமை அதிகாரத்தில், 'முட்டை எனும் கூட்டிலிருந்து வேறிடம் போகும் பறவை போல, உயிர் வேறிடம் செல்கிறது' என்கிறார்.
'இந்த உடலில், பரமாத்மா என அறியப்படும், இறைவனும் இருக்கிறார்' என்கிறது, கண்ணனின் பகவத் கீதை. திருவள்ளுவரோ தன், மூன்றாவது குறளில், 'மலர் மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்' என்கிறார். இதயம் என்ற தாமரை மலரில் வீற்றுள்ளவரின் திருவடிகளை சேர்ந்தவர், அனைத்து உலகுக்கும் மேலான வீட்டில், அழிவின்றி வாழ்வார் என்கிறார். வீடு என்பது, சொர்க்கம் என்பதை குறிக்கும் பரமபதத்தைக் குறிப்பிடுகிறது.
திருக்குறள், 1,103ல், 'தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு' என்ற பாடலில், 'தாமரைக் கண்ணனுடைய உலகமானது, ஒருவன், காதலியின் தோள்களில் துயில்வதை விட இனிமையானதோ?' என, கண்ணனைக் குறிப்பிடுகிறார். இவ்வுலகில், எதுவுமே நிலையானது இல்லை என்பதை குறிக்கும், நிலையாமையை, ஹிந்து தர்மம் மட்டுமே விரிவாகப் பேசுகிறது. திருக்குறள் 336ல், 'நெருதல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ்வுலகு' என்கிறது.
அதாவது, 'நேற்று இருந்தவன் இன்றில்லை என்ற நிலையாமையை பெருமையாகக் கொண்டது இவ்வுலகம்' என்கிறது.அதுபோல, வேறு எந்த மதத்திலும் இல்லாத, ஹிந்து மதத்தில் மட்டுமே உள்ள, கர்மா, ஊழ்வினை போன்ற மிக உயர்ந்த கருத்துகள், திருக்குறளில், வள்ளுவரால் உரைக்கப் பட்டுள்ளன. 'ஊழ்' என்ற தலைப்பில் ஒரு அதிகாரமே, வள்ளுவர் படைத்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
திருக்குறள், 376ல், 'பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம' என்கிறது. அதாவது, கர்மா காரணமாக, தமக்கு உரிமையில்லாத பொருட்களை எவ்வளவு பாதுகாத்தாலும், அது நில்லாது; நமக்கு உரியவை எனில், நாமே விடுவித்தாலும் போகாது' என, பொருள்படுகிறது.அதுபோலவே, திருக்குறள், 380ல், 'ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும்' என்ற பாடலில், 'ஊழை விடவும் வலியது வேறென்ன உள்ளது; ஊழைத் தவிர்க்க, வேறு வழியில் போனாலும், அங்கேயும் ஊழ் தானாகவே முன்னே நிற்கும்' என்கிறார், வள்ளுவர்.இதை விட, திருக்குறளில் உள்ளவை, ஹிந்து மதக் கொள்கைகள் தான் என்பதற்கு வேறு ஆதாரங்கள் வேண்டுமா?
நேரடியாகவே இறைவன் குறித்து, திருக்குறள் 2ல், 'கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்' என்கிறார். இதில், வாலறிவன், நற்றாள் ஆகிய வார்த்தைகள், இறைவனையும், அவன் பாதங்களையும் குறிப்பிடுகின்றன. மேலும், வீடு பேறு அடைவதைப் பற்றிக் குறிப்பிடும், திருக்குறள், 10ல், 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்' என்கிறார்.
ஹிந்து தர்மம் புலனடக்கத்துக்கு முக்கியத்துவம் தருவதுடன், மறு பிறவி மற்றும் பல பிறவிகள் உண்டு என்கிறது. வள்ளுவரும் இதைப் பல இடங்களில் உறுதிப்படுத்தியுள்ளார். திருக்குறள், 126ல், 'ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து' என, 'இப்பிறவியில் ஆமை போல ஐம்புலங்களையும் அடக்கி வாழ்பவனை, ஏழு பிறவியிலும் அது காப்பாற்றும்' என, பல பிறவிகள் பற்றி, திருவள்ளுவர் கூறுகிறார்.இறைவனின் புகழை, திருநாமத்தைப் பாடுவதை, ஹிந்து தர்மம் வலியுறுத்துகிறது.
இதைப் பற்றி வள்ளுவர், திருக்குறள், 5ல், 'இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு' என்கிறார். அதாவது, 'இறைவனின் புகழ் பாடும் ஒருவனிடம், இருளைத் தரும் இரு வினைகளும் சேராது' என்கிறார். நம் நற்செயல்கள் கூடினால், மீண்டும் நல்ல பிறவியைக் கொடுக்கும். ஆனால், அதுவும் தற்காலிகமானவையே. எனவே, பிறவிகளைத் தராத நிலையைப் பெற, இறைவனின் புகழ் பாட வேண்டும் என்கிறார்.
இப்படி ஆராய்ந்தால், திருக்குறளில் திருவள்ளுவர், ஹிந்து தர்மத்தை வலியுறுத்தும் பல கருத்துகளைக் கூறியுள்ளதை உணர முடியும். எனவே, வள்ளுவர் பொது தர்மத்தையே எழுதி இருந்தாலும், அவர் சார்ந்த ஹிந்து தர்மத்தின் தாக்கம், திருக்குறளில் ஆங்காங்கே இருப்பதை அறிய முடியும்.
இந்த உண்மைகளை அறியாமல், பொத்தாம் பொதுவாக கருத்து கூறும், கட்சிகளின் தலைவர்களையும், விவாதம் நடத்துவோரையும் பார்க்கும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...