Saturday, January 25, 2020

சொர்க்கத்திலிருந்து சோ - கேள்வி பதில்கள்.

வணக்கம் சார், நீங்க இல்லாமல் அரசியல் சுவாரஸ்யமாகவே இல்லை. ஒரு பத்து நிமிஷம் சில கேள்விகளுக்கு பதில் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.
சோ : ம் ர் ர் (கனைக்கிறார்). வணக்கம்.. நீங்க யார் சார்? ஊடகவியலாளரா?ஒருங்கிணைப்பாளரா? சமூக ஆர்வலரா? இல்லை நெறியாளரா?
ஊடகம் சார்..
சோ : சொல்லுங்க
ஊ: துக்ளக் ஆண்டுவிழாவில் ரஜினி பெரியார் பற்றி பேசியது சர்ச்சையாகி இருக்கிறதே?
சோ : அவர் உண்மையை தான் பேசுவார். உண்மைக்கு ஊடகத்தில் சர்ச்சைன்னு பேரா?
ஊ : இருந்தாலும் ஒரு பெரிய தலைவரை அவமதித்தது சரியா சார்?
சோ : என்ன சார் இது? 80 சதவிகிதம் மக்களின் இறை நம்பிக்கையை அசிங்கப்படுத்திக்கொண்டிருப்பது அவமதிப்பு இல்லையாம். நடந்த நிகழ்ச்சியை துக்ளக் பிரசுரித்ததால் பாப்புலர் ஆனதை சொன்னது அவமதிப்பாம். என்ன சார் நியாயம் இது?
ஊ : இரண்டே நாளில் பெரியார் சிலையை சேதப்படுத்தியதை கண்டித்து ரஜினி அறிக்கை விட்டதை எப்படி பார்க்கறீங்க சார்?
சோ : என்ன செய்ய சொல்றீங்க சார்?. சிலையை சேதப்படுத்தியவருக்கு பாராட்டு விழா, "சிலை அகற்றிய செம்மல்"னு விருது கொடுக்க சொல்றீங்களா? வன்முறை எந்த ரூபத்திலும் வந்தாலும் அதை கண்டிக்கவேண்டியது ஒரு தலைமை பண்பு. அதைத்தானே ரஜினி செய்திருக்கார். கொஞ்ச நாட்கள் முன்பு பெரியார் சிலைக்கு இது போல நடந்ததை மோடியும் அமித் ஷாவும் கூட கண்டித்திருக்கிறார்களே!.
ஊ : சமூக ஊடகங்களில் இதனை ஹிந்துத்வர்களே கூட நக்கலடிக்கிறார்களே?
சோ : யார் சார் அவங்க? ஐநூறு ஓட்டு அவர்களால் வாங்க முடியுமா? ஹிந்து மத காவலர்கள்னு போர்டு போட்டுகொண்டு அலையறதுக்கு இங்கே ஒரு சிறிய கும்பல் இருக்கு. தி க, தமிழ் தேசிய இயக்கங்கள் மாதிரிதான் இவங்களும். கலர் தான் காவி. மத்தபடி ஒரு வித்தியாசமும் கிடையாது. யாராவது வீட்டுல மதம் மாறி கல்யாணம் நடந்துச்சுன்னா போன்ல கூப்பிட்டு மிரட்டி அதை ரெகார்ட் பண்ணி தங்கள் பிரதாபத்தை காண்பிச்சுப்பாங்க. ஹிந்து பேப்பருக்கும் ஹிந்து மதத்திற்கும் என்ன சம்பந்தமோ அதுபோலத்தான் இந்த கும்பலுக்கும் ஹிந்துத்வத்திற்கும்!
ஊ : உங்கள் நண்பர் அரசியலுக்கு வந்துவிடுவாரா? அவருக்கு வாய்ப்பு எப்படி இருக்கிறது?
சோ : முன்னமே சொல்லியிருக்கிறேன். அவர் பல பேரிடம் அபிப்ராயம் கேட்பார். ஆனால் சொந்தமாகத்தான் முடிவெடுப்பார்.
பண்டிதஹ: சம்சயஹா: ஆலோசனஹா:
சர்வோ ஜனா ஸுக்கேன, ராஜ்ய நீதி பரிபாலனாஹா:
சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் சொல்றார். பெருவாரியான மக்களுக்கு நன்மை ஏற்படவேண்டுமென்றால் பல அறிஞர்களிடம் ஆலோசனை கேட்பதே ராஜ நீதி.
எம் ஜி ஆர், ஜெயலலிதா போலவே ஜாதி மதங்களை கடந்து மக்களிடம் அபரிமிதமான செல்வாக்கு அவருக்கு உண்டு. இதை பயன்படுத்தக்கூடிய சாதுரியமும் அவருக்கு இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
ஊ : இரண்டுக்கு மேற்பட்ட கூட்டணிகள் அமைந்தால் அது திமுகவின் வாய்ப்பை அதிகரிக்க செய்யும் என்றே பல அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்களே, அதை பற்றி?
சோ : அதை இப்போதே கணிப்பது சரியாக இருக்காது. எந்த எந்த கட்சி எந்த கூட்டணியில் இருக்கும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை, அதற்குள்ளேயே அவர் எப்போதாவது பேசும் ஒரு சில வார்த்தைகளே பல கட்சிகளுக்கு பயத்தை உண்டு பண்ணியிருக்கிறது. இங்கு சிறுபான்மை வாக்குகள் 15 - 18 % சதவிகிதம் இருக்கிறது. அதை இதுவரையில் திமுக தான் அறுவடை செய்து வந்திருக்கிறது. இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதற்காக ரஜினி சில சமாதானங்களை செய்ய வேண்டி வரலாம். அதை வெற்றிக்கான ஒரு அரசியல் வியூகமாகத்தான் பார்க்கப்படவேண்டும்.
ஊ : தமிழகத்தில் மறைமுகமாவாவது பாஜக கால் ஊன்றி விடுமா?
சோ : என்ன ஆச்சு சார் திடீர்னு, சீரியஸாக கேள்வி கேட்டு கொண்டிருந்தீங்க!
ஊ : இந்த குடியுரிமை சட்டம் இப்ப ரொம்ப அவசியமா?
சோ : பின்ன எப்ப சார் அவசியம்? மோடி அரசு ஏதோ மறைஞ்சு செய்யற மாதிரியில்ல பேசறீங்க. அவர்கள் இதை முன்னிறுத்தி இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்றார்கள். மக்களவையில் விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்தி இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். அதை நடைமுறைப்படுத்தாமல் காங்கிரஸ் போலவே அரசு செயல்படாமல் இருக்கணும்னு சொல்றீங்களா?
ஊ : பொருளாதாரம் இப்படி ஒரு வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கிறதே?
சோ : எனக்கு பொருளாதாரத்தை பற்றி புரிதல் உண்டே தவிர ஆழமாக கருத்து சொல்லும் அளவிற்கு விஷய ஞானம் கிடையாது . குருமூர்த்தி உள்பட பல பேருடன் இதை பற்றி பேசினேன். உலக பொருளாதாரத்தின் உள்ள மந்த நிலையின் தாக்கம் இங்கு இருக்கிறது. பண மதிப்பிழப்பு. ஜி எஸ் டி உள்ளிட்ட பல புரட்சிகரமான சீர்திருத்தங்கள் பாதிப்பும் இருக்கிறது. சிதம்பரம் செஞ்சிட்டு போன குளறுபடிகள் கொஞ்ச நஞ்சமா? இதை சரி செய்ய மோடி அரசு கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறது என தெரிகிறது. சகஜ நிலை திரும்ப சில ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவரை நம்பிக்கையோடு உழைத்துக்கொண்டிருப்பதுதான் சரி என நினைக்கிறேன்.
ஊ : ரொம்ப நன்றி சார்.
சோ :நன்றி.. கொஞ்சம் கொஞ்சம் அப்பப்ப கொஞ்சம் உண்மையை எழுத முயற்சி செய்யுங்க. பழக்கம் தானே!, நாளடைவில் பத்து சதவிகிதமாவது உண்மை வந்துடும்!

Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...