Friday, May 28, 2021

இயற்பெயர் “விப்ர நாராயணன்”.

 ஆழ்வார்களிலே ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மட்டுமே பாடிய ஆழ்வார் என்ற பெருமை பெற்றவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஆவார். இயற்பெயர் “விப்ர நாராயணன்”. சோழ நாட்டில் மண்டங்குடி என்ற ஊரில், மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ‘திருமால் வனமாலை’யின் அம்சமாக அவதரித்தார்.

திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து அரங்கனுக்கு மாலை தொடுத்து சமர்ப்பித்து வந்தார். குறிப்பாக துளசி மாலை தொடுத்து அரங்கனுக்கு சமர்ப்பிப்பதில் இவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. இவ்வாறு துளசி மற்றும் புஷ்ப கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருந்த இவரை, அரங்கன் மாயம் செய்து சில நாட்கள் தேவதேவி என்ற ஒரு பெண்ணிடம் மயங்கச் செய்தான்.
அரங்கனை முற்றிலும் மறந்து தன் பொருளை அந்தப் பெண்ணிடம் இழந்தார். முடிவில் பொருள் ஒன்றும் இல்லாத நிலையில் அந்தப் பெண் ஆழ்வாரைக் கை விட்டாள். ஆனால் ஆழ்வார் தேவதேவியை மறக்க இயலாமல் வருந்தவே அரங்கன் ஒரு திருவிளையாடல் செய்தான். உயர்ந்த முனிவர்கள் போற்றும் பரந்தாமன், ஒரு சிறுவனாக உருமாறி, தன் சந்நிதியில் இருந்த பொன் வட்டிலை ஏந்திக் கொண்டு தேவதேவியின் வீட்டிற்கு சென்று விப்ர நாராயணர் அளித்ததாகக் கொடுத்தான்.
அந்தப் பெண்ணும் மிகவும் மகிழ்ந்து மறுபடி ஆழ்வாரை தன் வீட்டிற்கு உள்ளே வர அனுமதி அளித்தாள். மறுநாள் காலை, கோயிலில் அரங்கன் சந்நிதியில் பொன் வட்டிலைக் காணாமல், பட்டர் குழாம் அரசனிடம் முறையிட, அரசன் ஆட்களை ஏவி வட்டில் இருக்குமிடம் அறிந்து, ஆழ்வார் அதைத் திருடியதாக நினைத்து அவரை சிறையில் அடைத்தான்.
அன்றிரவு அரசனின் கனவில் அரங்கன் தோன்றி அனைத்தும் தன் திருவிளையாடல் என்பதை உணர்த்தி, ஆழ்வாரை உடனே விடுவிக்க கட்டளை இட்டான். அரசனும் அவ்வாறே செய்ய, ஆழ்வார் அரங்கனின் அருளை நினைந்து நெக்குருகி இனி தன் வாழ்நாள் எல்லாம் அரங்கனுக்கே ஆட்பட்டு இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டு பழையபடி துளவத்தொண்டில் ஈடுபட்டார்.
இடையில் சிறிது காலம் அரங்கனை மறந்ததை பெரியக் குற்றமாக கருதிய ஆழ்வார், அதற்கு பரிகாரமாக அரங்கனின் தொண்டர்களின் திருவடித் தீர்த்தத்தை பருகினார் என்றும் அதன் காரணமாகவே “தொண்டரடிப்பொடி ஆழ்வார்” என்று பெயர் ஏற்பட்டதாகவும் வைணவப் பெரியோர் சொல்வர்.
அரங்கனிடம் கொண்ட பக்தியின் தீவிரத்தில் “திருமாலை” என்னும் பிரபந்தத்தை அருளினார். அர்ச்சாவதாரத்தில் அரங்கனைத் துயில் எழுப்பும் விதமாக, “திருப்பள்ளி எழுச்சி” என்னும் பிரபந்தத்தையும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளியிருக்கிறார்.
தொண்டரடிப் பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...