Saturday, May 29, 2021

எச்சில் கையால்கூட காக்காய் ஓட்ட மாட்டார் துரைமுருகன்! - வெளுத்து வாங்கும் ராமு.

 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அ.தி.மு.க சிதறிக்கிடக்கிறது. கே.சி.வீரமணியின் தோல்வி, நிலோபர் கபில் நீக்கம், தி.மு.க வெற்றிக்கு உதவியதாக ஐடி விங் மண்டலச் செயலாளர் ஜனனி சதீஷ்குமார் மீதான புகார் என ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் நீள்கின்றன. அதிலும், காட்பாடி தொகுதியில் துரைமுருகனுக்குக் கடைசிச் சுற்று வரை நெருக்கடி கொடுத்த ராமு விவகாரம் பெரிதாகப் பேசப்படுகிறது. ‘துரைமுருகனிடம் விலைபோய்விட்டார் ராமு’ என்ற புகாரை அடுத்து, ராமுவைச் சேலத்துக்கு அழைத்து விளக்கம் கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்தநிலையில்தான், ராமுவிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.

‘‘வாக்கு எண்ணிக்கையில் கடைசிச் சுற்று எண்ணப்பட்ட பிறகு வாக்குகள் மடை மாறியது எப்படி?’’
‘‘25 சுற்றுகளாக எண்ணப்பட்ட வாக்குகளில், 432 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகனைப் பின்னுக்குத் தள்ளியிருந்தேன். ஆனால், தபால் வாக்குகள் துரைமுருகனுக்குக் கைகொடுத்ததால், 746 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். அதேசமயம், என் மீதான விமர்சனத்துக்குக் காரணமும் உண்டு. தபால் வாக்குகள் மொத்தம் 3,349. அவற்றில் 517 வாக்குகள் செல்லாதவை. அந்த வாக்குகளை நான் துரைமுருகனுக்குத் தூக்கிக் கொடுத்துவிட்டேன் என்று பலரும் பேச ஆரம்பித்துவிட்டனர். என் கட்சிக்காரர்களும், பா.ம.க., பா.ஜ.க கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் என்னுடன்தான் இருந்தார்கள். ஆனாலும், ‘துரைமுருகனுக்கு இவ்வளவு நெருக்கடி கொடுத்துவிட்டானே... அடுத்த முறையும் இவனுக்கே இங்கு வாய்ப்பு கொடுத்துவிடுவார்களே’ என்று நினைத்து என் கட்சியிலுள்ள மாவட்ட நிர்வாகிகள் சிலர் பரப்பிய பொய்ப் பிரசாரம்தான் அது.’’
எச்சில் கையால்கூட காக்காய் ஓட்ட மாட்டார் துரைமுருகன்! - வெளுத்து வாங்கும் ராமு
‘‘ஆனால், ‘நீங்கள் ஒரு டம்மி வேட்பாளர். மாமன், மச்சானாகப் பழகும் துரைமுருகனும் வீரமணியும் பேசி வைத்துக்கொண்டு காட்பாடியில் ராமுவை இறக்கியிருக்கிறார்கள்’ என்று முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் பொதுவெளியிலேயே பேசினாரே?”
‘‘நிலோபர் கபில் உட்பட பலரும் என்னை டம்மி வேட்பாளர் என்று சொன்னபோது, மிகவும் வேதனைப்பட்டேன். வீரமணியும் துரைமுருகனும் பேசி வைத்துக்கொண்டுதான் என்னை இங்கு போட்டியிட வைத்திருக்கிறார்கள் என்றால், நான் வீட்டிலேயே படுத்துக் கொண்டிருந்திருப்பேனே? அந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய். துரைமுருகனையே தடுமாறச் செய்துவிட்டேன்... நான் டம்மியா, ஒரிஜினலா என்று நீங்களே மதிப்பீடு செய்துகொள்ளுங்கள்.’’
‘‘துரைமுருகனிடம் நீங்கள் விலைபோய்விட்டீர்கள் என்கிற குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள்?”
‘‘துரைமுருகன் நூறு கோடி இல்லை... ஆயிரம் கோடி கொடுக்கிறேன் என்றாலும், அந்தப் பணம் என் கால் தூசிக்குச் சமம். பணத்துக்கு விலை போகிறவன் நானில்லை. கூழோ, கஞ்சியோ குடித்தாலும் கௌரவத்தோடு வாழ்பவன் இந்த ராமு. பரம ஏழையான துரைமுருகன் அரசியலுக்குள் வந்த பிறகு, ஷேர் மார்க்கெட்டில் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார். ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளில் நட்சத்திர ஹோட்டல்கள், மலேசியாவில் மசாலா எக்ஸ்போர்ட் கம்பெனி, இங்கு அருவி மினரல் வாட்டர் கம்பெனி, கிங்க்ஸ்டன் பொறியியல் கல்லூரி எனப் பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்திருக்கிறார். இவ்வளவு பணம் இருந்தும், எச்சில் கையால்கூட காக்காய் ஓட்ட மாட்டார் துரைமுருகன். அப்படிப்பட்டவர் எனக்குக் காசு கொடுத்தார் என்பது வேடிக்கையாக இருக்கிறது.’’
‘‘நீண்ட நெடிய அரசியல் அனுபவம்கொண்ட துரைமுருகனை எதிர்த்து போட்டியிடும்போது, அங்கு கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், பிரசாரத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, பெரிதாக துரைமுருகன் குறித்து வாய் திறக்கவில்லை. கூட்டணிக் கட்சித் தலைவர்களும் காட்பாடியைக் கடந்து சென்றார்களே தவிர, தொகுதிக்குள் வரவில்லை. என்ன காரணம்?’’
‘‘குறைந்தது பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்திலாவது நான் வெற்றி பெற்றுவிடுவேன் என்ற நம்பிக்கையில்தான் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை கேட்டுப் பெற்றேன். ‘துரைமுருகனுக்குக் கடும் போட்டியை ஏற்படுத்தக்கூடிய ஒரே ஆள் ராமுதான்’ என்று எடப்பாடி பழனிசாமியிடம் உத்தரவாதம் கொடுத்தார் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி. தலைமை வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காக, தொகுதி முழுவதும் தீவிரமாக வேலை செய்தேன். அதனால், அன்புமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களை பிரசாரத்துக்கு அழைப்பதில் தாமதம் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் தலைவர்கள் பிரசாரத்தில் இருந்ததால், என் தொகுதிக்கு வர தேதி கிடைக்கவில்லை. மற்றபடி சந்தேகிக்கும்படி வேறு காரணங்கள் எதுவும் இல்லை.’’
எச்சில் கையால்கூட காக்காய் ஓட்ட மாட்டார் துரைமுருகன்! - வெளுத்து வாங்கும் ராமு
‘‘உங்களை அழைத்து விசாரித்த எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்?”
‘‘என் இமேஜ் சரிவதற்குக் காரணமாக இருந்த நிலோபர் கபிலின் பேட்டி மற்றும் கட்சியினரின் உள்ளடி வேலைகளைச் சொன்னேன். அதற்கு அவர், ‘மூத்த தலைவரான துரைமுருகனின் செல்வாக்குக்கு நிகராகக் கடும் போட்டி ஏற்படுத்தியிருக்கிறாய். ஒருவேளை துரைமுருகன் தோற்றிருந்தால், இரண்டு முதலமைச்சர்களுக்கு நிகரானவரை வீழ்த்திய பெருமை உனக்குக் கிடைத்திருக்கும். இவ்வளவு நெருக்கடி கொடுப்பாய் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை’ என்று பாராட்டி அனுப்பினார். இதையே, எனக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கிறேன்.’’
May be an image of 1 person and text that says 'எச்சில் கையால்கூட காக்காய் ஓட்ட மாட்டார் துரைமுருகன்!- வெளுத்து வாங்கும் ராமு'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...