Wednesday, May 5, 2021

அ.தி.மு.க.,வுக்கு சுய பரிசோதனை அவசியம்.

 'ஆட்சியை பறிகொடுத்த நிலையில், கட்சித் தலைமை, சுய பரிசோதனை செய்து கொள்வதுடன், கட்சியை வலுப்படுத்த, ஆக்கப்பூர்வமான பணிகளை செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தமிழகத்தில், 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தான் வெற்றிபெறும் என, கருத்துக் கணிப்புகள் கூறின. அவற்றை பொய்யாக்கி, தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஆட்சியை பிடித்து, ஜெயலலிதா சாதனை படைத்தார்.அவர் மறைவுக்கு பின், கட்சி பல்வேறு சோதனைகளை சந்தித்தது. எனினும், முதல்வரான இ.பி.எஸ்., அனைத்தையும் சமாளித்து, ஆட்சியை ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்தார்.மூன்றாவது முறையாக, கட்சி ஆட்சிக்கு வரும் என நம்பினார். ஆனால், கட்சி தோல்வியை சந்தித்தது.




இரட்டை தலைமை



தி.மு.க., எதிர்பார்த்த அளவுக்கு, அ.தி.மு.க., தோல்வியை தழுவவில்லை. லோக்சபா தேர்தலில் புறக்கணித்த அளவுக்கு இல்லாமல், மக்கள் ஓரளவு ஆதரவு அளித்துள்ளனர். இதன் காரணமாக, இழந்த ஓட்டு வங்கியை பெற்றதுடன், கட்சி, 66 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. பல இடங்களில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றியை தவற விட்டுள்ளது.
கட்சித் தலைமை, தோல்விக்கான காரணத்தை ஆராய்வதுடன், தன்னைத் தானே சுய
பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என, கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து, மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கட்சியில் தற்போது, இரட்டை தலைமை உள்ளது. இது, குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஆகியோரில் யாரை சந்தோஷப்படுத்துவது; ஒருவரை சந்தித்தால், மற்றொருவர் கோபித்துக் கொள்வாரோ என்ற அச்சம், நிர்வாகிகளிடம் உள்ளது. இருவருக்கும் இடையே, அவ்வப்போது மோதல் வந்து, பின் சரியாவது, கட்சியினரிடமும், மக்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

அ.தி.மு.க.,சுய பரிசோதனை , அவசியம்


மேலும், கீழ்மட்டத்தில், இரு அணிகளாகவே கட்சியினர் உள்ளனர்; அவர்களிடம் ஒற்றுமை இல்லை. இது, தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணம். எனவே, இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில், புதிய நபரை தேர்வு செய்ய வேண்டும்.


தடுமாற்றம்



அதேபோல், இருவரும் கட்சி தலைவராக இருக்கவில்லை. முதல்வராக இருந்த இ.பி.எஸ்., கட்சி இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை நிலையச் செயலர், சேலம் மாவட்ட செயலர் என, அனைத்து பதவிகளையும் வைத்துக் கொண்டார்.கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்த பின்னும், மாவட்ட செயலர் பதவியை விட மனமில்லை.அதேபோல், ஓ.பி.எஸ்., கட்சி ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவியை வகித்து வருகிறார். மூத்த அமைச்சர்களும், பல்வேறு பதவிகளை வகித்து வருகின்றனர். ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதியை அமல்படுத்தி, மற்றவர்களுக்கு பதவியை வழங்கலாம்.

நல்ல திறமைசாலிகளை, மாற்று அணி என்ற காரணத்துக்காகவே, பயன்படுத்திக் கொள்ளவில்லை. தேர்தல் பணிக்காக, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன; அவை பெயரளவுக்கே இருந்தன. முடிவுகளை, வேலுமணி, தங்கமணி ஆகியோர் மட்டுமே எடுத்தனர். இதுவும், கட்சி நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அமைச்சர்கள், மாநிலத்தில் கட்சியை வளர்க்க எதுவும் செய்யாமல், தங்களை வளர்த்துக் கொள்ளவும், மாவட்டத்தில் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவுமே முயற்சித்தனர்.

கட்சி தலைமை சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள், ஜெ., பிறந்த நாள் பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டால், பல இடங்களில் நடத்தப்படுவதில்லை.கட்சி தலைமையும் கண்டுகொள்வதில்லை. தலைமை அறிவிக்கும் பேச்சாளர்களை, யாரும் அழைப்பதில்லை. இதனால் கட்சி வளர்ச்சி என்பதே இல்லாமல் இருந்தது. நிர்வாகிகளை மதிக்காமல் செயல்படுவோர் மீது, கட்சியினர் புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்க, கட்சி தலைமை தயங்கியது. முடிவெடுக்க முடியாமல், தலைமை தடுமாறுவது, கட்சி வளர்ச்சிக்கு உதவாது.




நடவடிக்கை



அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் அளித்த முக்கியத்துவத்தை, கட்சி நிர்வாகிகளுக்கு அளிக்கவில்லை. இது, தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணம். நமக்கு வேண்டியவர் என்று பார்க்காமல், திறமையான நபர்களுக்கு பதவி கொடுத்தால், கட்சி வளரும்; வேண்டியவர்கள் என்று பார்த்தால், கட்சி அழியும்.நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும். தோல்விக்கான காரணங்களை கேட்டறிய வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து, கட்சி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை, மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் நீடிக்க முடியும். இதை, தலைவர்கள் உணர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...