Friday, April 22, 2022

அந்த கிஷ்கிந்தை மன்னனுக்கு மனச்சாட்சி இருந்தது.

துாத்துக்குடியில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், குடிபோதையில் இருந்த கணவன், தன் இரண்டு வயது குழந்தையை சுவரில் அடித்துக் கொன்றிருக்கிறான். மது மதியை மயக்கும் என்பதற்கு, இந்த சம்பவம் சிறந்த உதாரணம். துாத்துக்குடியில் நடந்தது போன்ற எத்தனையோ சம்பவங்கள், தினமும் நாட்டில் நடக்கின்றன. போதையில் நிலை தடுமாறி பஞ்ச மாபாதகங்களை செய்கின்றனர் பலர். பஞ்ச மாபாதகமானது, ஐம்பெரும் தீமைகள் எனப்படும், கொலை, திருட்டு, பொய்யுரைத்தல், குரு நிந்தனை மற்றும் மது அருந்துதலாகும். இதில், மது குடிப்பதே மற்ற நான்கு தீமைகளுக்கும் காரணம். கவிச் சக்கரவர்த்தி கம்பர் தன் கம்ப ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்கிரீவன் கதாபாத்திரத்தின் வாயிலாக கூறுகிறார்... மதுவால் மதிமயங்கி, ராமனுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டதை, அனுமன் சுட்டிக்காட்டும் போது, ௧௦க்கும் மேற்பட்ட பாடல்களில் மதுவின் தீமையை சொல்லி வருந்துகிறான் சுக்கிரீவன். அந்த கிஷ்கிந்தை மன்னனுக்கு மனச்சாட்சி இருந்தது; திருந்தினான் சூரிய புத்திரன். அதுபோல, தமிழகத்தில் மது அருந்தும் ஒவ்வொருவரும் திருந்த, 'டாஸ்மாக்' மதுக்கடைகளை மூட வேண்டும். இதுதொடர்பாக, ௨௦௧௬ சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை, ஸ்டாலின் காப்பாற்ற வேண்டும். மதி மயக்கும் மதுவால், நாட்டை ஆண்ட சுக்கிரீவன் தடுமாறியதைச் சொல்வது இதிகாசம். நாட்டை ஆள்பவரே நிதி பெருக்க, குடிமக்களை குடிகாரர்களாக்கி தடுமாற வைத்துள்ளது பரிகாசம். அரசின் கஜானா வருவாய்க்கு அமுதசுரபியாய் விளங்கும் இந்த மதுக்கடைகளை, உடனடியாக மூடுவது நடக்காத காரியம் என்றாலும், படிப்படியாகவாவது மூட முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், அய்யன் திருவள்ளுவரை போற்றும் தமிழக அரசு, அவரின் திறக்குறளில் உள்ள, 'கள்ளுண்ணாமை' என்ற அதிகாரத்தை நீக்கிவிட வேண்டும். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...