Thursday, April 28, 2022

திருவிழா... ஸ்ரீரங்கம் .. சித்திரை திருவிழா..திருத் தேரோட்டம்..

 ஊரே 2 நாளைக்கு முன்பிருந்தே களை கட்டும்... கிராமத்து ஜனங்கள் எல்லாம் வண்டி கட்டி கொண்டு , தூக்கு சட்டியில் புளி சோறுடன் வந்து இறங்கியவுடன் அம்மா, அப்பா பிள்ளைகள் , குடும்பமே மொட்டை போட்டுவிடும்.

வீதியில் பீ பீ, க்ரீச் ,க்ர்ர்ச்....பலூன் தடவும் சத்தம். டிங் டிங் டிங் கடலை வண்டி சத்தம், கச்சா முசன்னு ஜனங்கள் நடந்து போய் கொண்டே இருப்பார்கள் ... வாசலில் தண்ணி தெளித்து கோலம் போட்டவுடன் பெஞ்ச் கொண்டுவந்து போட்டு உட்கார்ந்து விடுவோம் வேடிக்கை பார்க்க...
இதில் ஓர் சாரார் காவிரியில் குளித்து ஈர மஞ்ச துண்டோடு, கையில் தோல் பையில் காவிரி தண்ணி யோடு கோவிந்தா புஸ், புஸ் , கோவிந்தா புஸ், புஸ் ....(தோல் பை கார்க் வழிய கொஞ்சம் தண்ணி ரோட்ல தெளிப்பாங்க)
ரெண்டு நாள் முன்னாடியே தேர் அலங்காரம் ஆரம்பித்துவிடும். ஜனங்கள் குவிய ஆரம்பிச்சுடும். மெதுவா மடங்கள் நிறைய ஆரம்பிக்கும், பிறகு ஒரு ஒவ்வொரு வீட்டு திண்ணையும்....., கதவு போட்ட வீடுகளில் அனுமதியின் பேரில் சிலர் தங்குவர். தேர் அன்று காலையில் பார்த்தால் வீட்டோரங்களை ஆக்ரமித்திருப்பார்கள் .. யாரையும் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்... பாட்டி கூட வாசலில் குடிப்பதற்கு ஜலம் எடுத்து வைப்பார்கள்.
ஆச்சு நம்பெருமாள் தேரில் ஏறியாச்சு... தேர் இழுக்க ஆரம்பிச்சாச்சு.... சித்திரை வீதியிலேயே எங்கள் வீடு இருப்பதால் கும்பல் அதிகமாகுமுன்னே எங்களை தேர் இழுக்க வைப்பார்கள் பாட்டி.. தேர் அன்று விடியற்காலை எழுந்திருந்து தலைக்கு குளித்து , பாட்டி வாங்கிவைத்திருக்கும் பூ சூடி , மாமி பண்ணி வைத்திருக்கும் பொங்கலையும் , கொத்சுவையும் வேக வேகமாக முழுங்கி ,வாசலுக்கு ஓடி வந்து பெஞ்சில் உட்கார்ந்து மாமியின் தங்கையுடன் கதை அளந்து கொண்டு, கலாட்டா பண்ணி கொண்டு. பாட்டி கொடுக்கும் தேர் காசில் வளையல், கண் மை, கிளிப் எல்லாம் வாங்கி கொண்டு, மாமாவை தாஜா பண்ணி ஐஸ்கிரீம், திரும்பினால் மதியம் வடை பாயசத்தோடு ஒரு சாப்பாடு... இடையில் மாமாவின் நேரடி வர்ணனை தேர் எங்கு இருக்கிறது என்று.... ஒரு குட்டி தூக்கம்... 3 மணிக்கு எழுந்து ஒரு டீ மீண்டும் திண்ணை...(பெஞ்சில் வெயில் அடிக்கும் அதனால்) திரும்பி முகம் அலம்பி அலங்காரம்,வாசல் தெளித்து கோலம் , பிறையில் விளக்கேற்றி வைத்தவுடன் பாட்டியுடன் கோவில்... வழியெல்லாம் கோவிந்தா கூட்டத்தை ஆர்வத்துடன் ஒரு பார்வை.... வீடு திரும்பிய பின்பு மீண்டும் பெஞ்ச், டிரான்சிஸ்டரில் சுசீலம்மா , டிஎம் எஸ்,பிபிஎஸ் ,ஜானகி அம்மா , எல் ஆர் ஈஸ்வரி எல்லோரும் அற்புதமாக பாட,அம்மாவோட கசின்ஸ் எல்லோரும் தேர் நமஸ்காரம் பண்ண பாட்டி தாத்தாவை விசிட் செய்த கையோடு எங்கள் ஜமாவில் சேர வீடே தேர் திருவிழா தான்... இரவு மாமி செய்து கொடுக்கும் கல் தோசையை சாப்பிட்டு நீர் மோர் குடித்து அட்டகாசமாக ஒரு தூக்கம் ( என்னமோ தேரை முழுக்க இழுத்தாற்போல் ஒரு களைப்பு )
மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் தெருவே விரிச்...
May be an image of temple and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...