Thursday, April 28, 2022

துறைகள் வாரியாக ஊழல்: கவர்னரிடம் புகார்!

 ''மின் துறை அதிகாரிகள், 'ஷாக்'ல இருக்காவ வே...'' என, பட்டர் பிஸ்கட்டை கடித்தபடி அரட்டையை ஆரம்பித்தார், அண்ணாச்சி.



''அப்படி என்னங்க நடந்துடுச்சு...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.



''கடந்த ஒரு வருஷத்துல, 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவசமா மின் இணைப்பு குடுத்திருக்காவ... இதை கொண்டாடுற விதமா, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்துல, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சாவ வே... ''இதுல முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கிட்டு, இந்த திட்டத்துல பயன் பெற்ற விவசாயிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்'ல பேசினாரு... இதுக்கான தகவல் தொழில்நுட்ப வசதிகளை அரசின், 'எல்காட்' நிறுவனம் செஞ்சு குடுத்துச்சு... இதுக்கு மட்டும், 2.70 கோடி ரூபாய் செலவாயிருக்கு வே...



''மின் துறைக்கு, 'பில்' அனுப்பிய எல்காட் நிறுவனம், 'தொகையை சீக்கிரமா செட்டில் பண்ணுங்க'ன்னு கடிதமும் அனுப்பியிருக்கு... ஒரு நாள் கூத்துக்கு இவ்வளவு பெரிய தொகையை எதிர்பார்க்காத மின் துறை அதிகாரிகள் அதிர்ச்சியில இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.



''கலெக்டர் ஆபீஸ்ல ரெண்டு அதிகாரிகள் ஆட்டம் தாங்க முடியலைங்க...'' என, அடுத்த தகவலுக்கு தடம் மாறினார், அந்தோணிசாமி.



''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.



''தஞ்சை கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற, உள்ளாட்சி நிதி தணிக்கை அலுவலகத்துல ரெண்டு தணிக்கை ஆய்வாளர்கள் இருக்காங்க... இவங்க, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்களிடம் தங்களுக்கு சாதகமா, 'பில்' அனுப்பி, அதுக்கு கமிஷன் தரணும்னு கறாரா சொல்றாங்க...



''பணிகளை எடுத்து செய்ற கான்ட்ராக்டர்களிடம் பேசி கமிஷனை வாங்கி தாங்கன்னும் அழுத்தம் குடுக்கிறாங்க... இவங்களை பத்தி, உள்ளாட்சி நிதித்துறை உதவி இயக்குனர் ராஜசேகரனிடம், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பி.டி.ஓ.,க்கள் சிலர் வாய்மொழியா புகார் குடுத்தாங்க... ''இதனால கடுப்பான ரெண்டு பேரும், 'நாங்க நிதி அமைச்சருக்கு வேண்டப்பட்டவங்க... கமிஷன் வரலைன்னா, வேற ஊருக்கு உங்களை மாத்திடுவோம்'னு நேரடியாவே மிரட்டுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.



ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''பிரகாஷ்... ஜெயபாண்டியன் ஆத்துக்கு வந்துடுங்கோ... நானும் வந்துடறேன்...'' என, 'கட்' செய்து கடைசி மேட்டருக்கு நகர்ந்தார்... ''நீர்வளம், பொதுப்பணி, உள்ளாட்சி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, உணவு, மாசு கட்டுப்பாட்டு வாரியம்னு சில துறைகள்ல செல்வம் கொழிக்கறது... இந்த துறை அமைச்சர்களின் வாரிசுகள், உடன் பிறந்தவா, பி.ஏ.,க்கள் சேர்ந்து, ஓய்வு பெற்ற அதிகாரிகளை உதவிக்கு வச்சுண்டு, 'கான்ட்ராக்ட், டிரான்ஸ்பர், டெண்டர்'கள்ல விஞ்ஞான பூர்வமா புகுந்து விளையாடறா ஓய்...



''குறிப்பா, கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கறதுக்கான 400 கோடி ரூபாய் டெண்டர்ல, திருப்பூரைச் சேர்ந்த நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கற மாதிரி, 'செட்டப்' செஞ்சுட்டாளாம்... ''டெண்டர்ல பங்கேற்க முடியாத நிறுவனங்கள் தரப்பு, பா.ஜ., தலைவர் அண்ணாமலையை சந்திச்சு விபரங்களை சொல்லிடுத்து... அவரும், இந்த தகவலை கவர்னர் காதுல போட்டுட்டார்... சீக்கிரமே விசாரணை இருக்கும்னு சொல்றா ஓய்...'' என முடித்து, கிளம்பினார் குப்பண்ணா.



மற்றவர்கள் அரட்டை தொடர்ந்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...