Monday, September 22, 2014

கொள்ளையடிக்கும் செல்போன் நிறுவனங்கள்


இன்றைய உலகில் அடிப்படை தேவையான உணவு, உடை, உறைவிடம் இவற்றோடு அலைபேசியும் சேர்ந்து கொண்டுள்ளது. செல்போன் இல்லாதவர்கள் செல்லாதவர்கள் என்றே சொல்லும் அளவிற்கு தற்போதைய நிலை உருவாகி வருகிறது. இதை பயன்படுத்தி செல்போன் நிறுவனங்கள் செய்யும் மோசடிகளைத் தான் இங்கு விழிப்புணர்வு கட்டுரையாக தரலாம் என்று எண்ணி எழுதியிருக்கிறேன். வலுவான காரணிகள் இருந்தாலும் அனைவரும் சந்தித்த சாதாரணமான காரணிகளையே எடுத்து எழுதியுள்ளேன்.

சிம் கார்டு வழங்கும் அதே நிறுவனங்களே தற்போது செல்போன்களும் விற்க தொடங்கி விட்டன. அவ்வாறு அவர்கள் விற்கும் செல்போன்கள் வாங்கினால் பலவிதமாக சலுகைகள் தருவதாக அறிவித்து தனது வியாபாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். இதில் தவறில்லை. ஆனால் அப்படிப்பட்ட செல்போன்கள் கதிர்வீச்சு அளவு பாதுகாப்பானதா என்பது நாம் கவனிக்க வேண்டியது. பெரும்பாலும் கதிர்வீச்சு அளவு குறித்து மொபைல்போன் விற்கப்படும் பெட்டியின் மீது அச்சடித்தோ, தனியாக அட்டையில் இணைத்தோ அறிவிப்பது இல்லை. இப்பொழுது தான் மத்திய அரசின் சுகாதார துறை செல்போன் நிறுவனங்கள் தங்களின் பொருளின் கதிர்வீச்சு அளவைத் தெரிவிக்க வேண்டுமென்று உத்தரவிட மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுருப்பதாக செய்தி. விரைவில் நடைமுறைக்கு வந்தால் நலமாக இருக்கும்.

நகர்புறங்களில் நன்றாக இருக்கும் டவர் கிராமப் புறங்களில் நன்றாக எடுப்பது இல்லை. ஆனால் அதே கட்டணத்தைத் தான் கிராமப்புற வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கின்றனர். அப்படியென்றால் நுகர்வோர் ஏமாற்றப்படுகிறார் என்று தானே அர்த்தம். எது எதுக்கோ பொதுநல வழக்கு தொடரும் நமது நண்பர்கள் இதையும் கவனித்தால் நன்றாக இருக்கும்.

வாடிக்கையாளருக்கு தெரியாமலே அவர்களின் பணத்தை எடுக்கும் வித்தையை செல்போன் நிறுவனங்களில் தனி அறையில் அமர்ந்து யோசிப்பாங்க போல.

பொதுவாக கடைக்கு சென்று சிம்கார்டு வாங்கும் பொழுது குறிப்பிட்ட நிறுவனத்திற்கு பேசினால் 10 பைசா மற்ற நிறுவனங்களுக்கு பேசினால் 30 பைசா என்றேல்லாம் கூறி நம் தலையில் கட்டி விடுகிறார்கள். ஆனால் நாம் பயன்படுத்தும் போது செல்போன் நிறுவனங்கள் கண்ணுக்கு தெரியாத சிறிய அளவில் போட்டிருக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது எனும் வாசகம் பெரிய அளவில் செயல்பட ஆரம்பித்து விடுகிறது. முதல் கால் கட்டாயம் ஒரு ரூபாய் அதற்கு அப்புறம் அழைக்கப்படும் கால்களுக்கு 10, 30 பைசா என்பது பொருந்தும் என்று கூறி நம்மை ஏமாற்றுகிறார்கள். அதுவும் முதல் குறிப்பிட்ட நொடிகள் பேசினால் மட்டுமே அந்த நாள் முழுவதற்கும் மேற்சொன்ன கட்டணம் பொருந்தும். நம்ம விவரமா ஒரு சில நொடிகளில் துண்டித்து விட்டு விட்டோமானால் அந்த நாள் முழுவதுக்கும் அந்த கட்டணம் பொருந்தாதாம்.

அதே போல குறுஞ்செய்தி அனுப்பதற்கும் தனியாக பணம் செலுத்தியிருந்தாலும் ஒரு நாளின் முதல் குறுஞ்செய்திக்கு 50 பைசா கட்டணம் பிறகு அனுப்பும் செய்திகளுக்கு பூஸ்டர் கார்டு வேலை செய்யும். அதுவும் விழாக்காலங்களில் கட்டணம் வசூலிப்பது கொள்ளையடிக்கும் நிகழ்வு இல்லையா! ஆண்டு முழுவதும் நம்மை வைத்து சம்பாரித்து சந்தோசமாக இருந்து விட்டு நாம் சந்தோசமாக இருக்கும் அந்த குறிப்பிட்ட விழா தினங்களில் கட்டணம் வசூலிப்பது கொள்ளை தான்.

நாம் ஒருவருக்கு அழைப்பு விடுக்கும் போது அவர் வைத்திருக்கும் காலர் டியூன் நமக்கு கேட்டால் பரவாயில்லை. அதற்கு முன்பு இந்த காலர் டியூன் பிடித்திருந்தால் ஒன்றை அழுத்துங்கள், இரண்டை அழுத்துங்கள் என்று சொல்லி நம்மை நேரத்தை வீணடிப்பது சரிதானா!
அவசரத்துக்கு போன் செய்து இது போன்ற கொடுமைகளையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது. கையை வைத்து தெரியாம அழுத்தி விட்டால் அந்த பாடல் (கொடுமை) நமக்கும் வந்து விடும். காசு பறிக்கப்படும்.

அது போல காலையில் முதல் தடவை நாம் அழைக்கும் போது கணினி குரல் அது என்னமோ பேசுது அது பேசி விட்டா தான் நாம் பேச முடியுது. நமக்கு ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் எண்ணிற்கு அழைத்தால் தமிழுக்கு ஒன்றை அழுத்தவும், பிரதிநிதியிடம் பேச 9 அழுத்துங்கள், அவர் பிஸியா இருக்கிறார் கட்டாயம் பேச வேண்டுமென்றால் 1 அழுத்தி உறுதி செய்யுங்கள் இவ்வளவும் செய்யறதுக்குள்ள அதுவாவே அந்த கால் கட் செய்யப்பட்டு விடும். இப்படி அவர்களை அழைப்பதற்கு மாதத்தில் மூன்று முறை தான் பயன்படுத்த வேண்டும் எனும் எழுதப்படாத விதி இருக்கிறதாம். அப்புறம் அழைத்தால் கிடைக்காது.

ஒவ்வொரு செல்போன் நிறுவனங்களும் வியாபாரம் என்ற பெயரில் நம்மிடம் கொள்ளையடிக்க பல்வேறு சூத்திரங்களைப் பயன்படுத்தி ஒரு விடையைத் (கொள்ளையைத்) தான் பெறுகிறார்கள். ஏமாறுவது என்னமோ நாம் தான். டிராய் அமைப்பு இதை கண்டும் காணாமலும் இருப்பது ஏன் என்பது அதன் செயல்பாட்டில் நமக்கு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. நாம் தான் விழித்தெழ வேண்டும். நன்றி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...