Friday, June 30, 2017

இந்த அரசாங்க அதிகாரி செய்கிற காரியங்களைப் பாருங்கள்...

நள்ளிரவு 12 மணியில் இருந்து இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமுல்படுத்தப்படுகிறது.பல வணிகர்களுக்கு இன்னமும் ஜிஎஸ்டி குறித்த தெளிவான புரிதல் இல்லை.எங்கு சென்று எந்தத் தொழில் செய்பவரைப் பார்த்தாலும்,எவ்வளவு நேரம் பேசினாலும்,அந்தப் பேச்சில் முக்கால்வாசி நேரம் ஜிஎஸ்டியே ஆக்கிரமித்துக் கொள்கிறது.அந்த அளவிற்கு ஒருவித சொல்ல முடியாத பதட்டத்தையும் ஜிஎஸ்டி உருவாக்கி விட்டுள்ளது.பெரிய பெரிய மென்பொருள் நிறுவனங்கள் தொடங்கி,மிகச் சிறிய பெட்டிக்கடைகள் வரையிலும் கூட இந்த ஜிஎஸ்டி பேச்சுக்கள் தான்.
இப்படியான ஒரு சூழ்நிலையில் மக்களின் சந்தேகங்களைப் போக்கும் அரும்பணியைச் செய்கிறார் ஒரு அரசு அதிகாரி.
அவர் பெயர் கேசவன்.சாத்தூர் வட்டத்தில் வணிக வரித்துறை ஆய்வாளராக இருக்கிறார்.அதாவது Commercial Tax Officer.சொந்தத் தொழில் செய்பவர்களுக்குப் புரியும் CTO என்றால் யார்,அவரது அதிகாரங்கள் எத்தகையன என்பது.இனி அந்த CTO அதிகாரி செய்யும் காரியத்தைப் பற்றி சொல்கிறேன்.
சாத்தூர் வட்டத்தில் தொழில் செய்பவர்களை எல்லாம்,அது பெட்டிக் கடையாக இருந்தாலும் சரி,மிகப் பெரிய பேப்பர் தயாரிப்பு தொழிற்சாலையாக இருந்தாலும் சரி-எந்தப் பாகுபாடும் இன்றி அவர்களை எல்லாம் இணைத்து,சாத்தூர் வட்டத்தில் இருக்கும் ஆடிட்டர்கள்,அக்கவுண்டன்டுகள் என சகலரையும் இணைத்து "சாத்தூர் ஜிஎஸ்டி" என்ற பெயரில் ஒரு வாட்சப் குழுவை உருவாக்கி,அதில் ஜிஎஸ்டி குறித்து சகல தகவல்களையும் மிக எளிதில் புரியும்படி அதுவும் தமிழிலேயே பதிகிறார்.வாட்சப் பகிர்தலோடு நின்றுவிடாமல்,தொடர்ச்சியாக அந்தப் பகுதியில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை வேறு நடத்துகிறார்.தன்னை நேரில் சந்திக்கும் பொது மக்களுக்கும்,வணிகர்களுக்கும் அவர்களுக்குப் புரியும் வகையில் விளக்கங்களைத் தருகிறார்.எந்த நேரத்தில் எவர் தொடர்பு கொண்டாலும் அவர்களது சந்தேகம் தீரும் வரையில் பொறுமையாகப் பதில் சொல்கிறார்.சில வருடங்களுக்கு முன் VAT எனும் மதிப்புக் கூட்டு வரி அறிமுகப் படுத்தப்பட்ட போது-தனியொரு நபராக 350 நபர்களுக்கு தன் சொந்த முயற்சியில் பயிற்சி தந்துள்ளார்.பணியிலோ படுசுத்தம்.தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் எவரும்,அவர்கள் எந்தப் பகுதியில் தங்கள் நிறுவனத்தைத் தொடங்குகிறார்களோ,அந்த சரக வணிக வரித்துறை அலுவலகத்தில் தங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.நிறுவனங்கள் தரும் தகவல்களைச் சரிபார்த்து-அதற்கு ஒப்புதலைத் தரும் இடத்தில் இருக்கும் அதிகாரி தான் CTO.அந்த நிலையில் இருந்தாலும்,இவர் எந்த நிலையிலும்,எதற்காகவும் ஒரு பைசா கூட லஞ்சம் பெறுவதில்லை.சாத்தூர் சரகத்தில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்வது தொடர்பாக இவரைச் சந்தித்த போதுதான் முதன்முறையாக எனக்கு இவரது அறிமுகம் ஏற்பட்டது.
எதை எதையோ எழுதுகிறோம்,பகிர்கிறோம், பரப்புகிறோம்.,
கடைமையைச் செய்...அதையும் அனுபவித்துச் செய்...இயன்றவரை நேர்மையாக இரு..என்றளவில் இயங்கும் சாத்தூர் வணிகவரி அதிகாரி திரு.கேசவன் அவர்களைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது.எழுதிவிட்டேன்.கேசவன் சார் இந்தப் பதிவைப் படிப்பாரா என்பது கூட எனக்குத் தெரியாது.அது தேவையும் இல்லை.
நேர்மையான,பொது மக்களிடம் அன்பாகப் பழகும் அரசு அதிகாரிகள் எல்லாம் கதைகளில் மட்டுமே இருப்பார்கள் என்ற நிலையில்,நம் கண் முன்னமே இருக்கும் கேசவன்களைப் பாராட்டியேத் தீர வேண்டும்.........

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...