Saturday, July 28, 2018

"உலகமே ஒரு நாடக மேடை!

பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது எமலோகம். வேலையில் ஆழ்ந்திருந்த எமனின் காதுகளில் மெதுவாக சொன்னான் சித்ரகுப்தன்,
"பிரபோ! பூமியிலிருந்து தங்களைப் பார்ப்பதற்காக நரர்கள் கும்பலாய் வந்திருக்கிறார்கள்"
தலையை நிமிராமலே எமன் கட்டளையிட்டான்
"அவர்களை வரச் சொல்!"
கும்பல் உள்ளே வந்தது. ஒவ்வொருவரின் முகங்களிலும் கோபம், துக்கம், விரக்தி என பல்வேறு பாவனைகள் தெறித்தன.
வந்தவர்கள் கோரசாக பேசினார்கள்,
"தர்மமே தெரியாத உனக்கு எவன் எமதர்மன் என தப்பாய் பெயர் வைத்தான்? கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழும் எங்கள் தலைவரின் உயிரை எடுக்கப் பார்க்கிறாய். உன்னோடு போராடி உயிரை மீட்ட சாவித்திரி, மார்க்கண்டேயன் வழியில் வந்தவர்கள் நாங்கள். எங்கள் தலைவரின் உயிரை மீட்காமல் விடமாட்டோம். எங்கள் தலைவர் இல்லாமல் எங்களால் வாழ முடியாது. எங்கள் தலைவரின் உயிரை எங்களிடமே தந்து விடுகிறேன் என நீ சொல்லும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு போகமாட்டோம்"
கும்பல் தரையில் அமர்ந்து தர்ணா பண்ண ஆரம்பித்தது.
ஒரு நிமிடம் அவர்களை உற்றுப் பார்த்த எமன் பேச ஆரம்பித்தான்,
"மானிடர்களே! பூமியில் மனிதனாய் பிறந்த அனைவரும் இறந்ததாக வேண்டும் என்பது விதி. அவதாரங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அதனால் உங்கள் தலைவரின் உயிரை கவராமல் உங்களிடமே தர முடியாது. நீங்களோ உங்கள் தலைவர் இல்லாமல் வாழ முடியாது, இந்த இடத்தை விட்டு போகமாட்டோம் என்கிறீர்கள். உங்களைப் போன்ற தொண்டர்கள் கிடைப்பது அரிது. எனவே உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்து விட்டேன். என்னால் எந்த உயிரையும் பூலோகத்தில் விட்டு வைக்க முடியாதே தவிர எந்த உயிரையும் பூலோகத்திலிருந்து எமலோகத்திற்கு கூட்டி வர முடியும். எனவே உங்கள் தலைவரின் உயிரை கூட்டி வரும் போது அவர் இல்லாமல் வாழ முடியாது என சொல்பவர்களின் உயிர்களையும் என்னோடு கூட்டி வந்து நீங்கள் எப்போதும் உங்கள் தலைவருடன் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்"
பேசி முடித்த எமன் சித்ரகுப்தன் பக்கம் திரும்பி உத்தரவிட்டான்,
"சித்ரகுப்தா! இவர்களின் கணக்கு புத்தகத்தை எடு!"
சித்ரகுப்தன் நீட்டிய கணக்கு புத்தகத்தை எடுத்து கும்பல் அமர்ந்திருந்த பக்கம் பார்த்து எமன் அதிர்ந்தான்.
*கும்பல் காணாமல் போய் இடம் காலியாக இருந்தது* அருகிலிருந்த சித்ரகுப்தனிடம் எமன் சிரித்துக் கொண்டே சொன்னான்,
"உலகமே ஒரு நாடக மேடை! முதலை கண்ணீர் வடிக்கும் மனிதர்களெல்லாம் அதில் நடிகர்கள் என நிரூபித்து போயிருக்கிறார்கள் நரர்கள்! பாசக்கயிறை எடு! நாம் பூமிக்கு கிளம்புவோம்!!"  ** 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...