Monday, December 17, 2018

வைகுண்ட ஏகாதசி விழா ஸ்பெஷல்...!

மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியில் விரதமிருந்து, துவாதசியில் ஸ்ரீகேசவனை ஆராதிப்பது ரொம்பவே விசேஷம். அதாவது அப்படி வணங்கினால், அஸ்வமேத யாகம் செய்த பலன் முழுவதும் கிடைக்கும். பிரும்மஹத்தி தோஷம்கூட விலகும் என்கிறது பாத்ம புராணம்.
மாதங்களில் நான் மார்கழி என்றான் ஸ்ரீகண்ணபிரான். மகத்தான இந்த மார்கழி மாதம், தேவர்களுக்கெல்லாம் விடியற்காலைப் பொழுதாம். நற்காரியங்கள் செய்வதற்கு நல்ல காலம் இது. இந்த மாதம் முழுவதும் பகவானை ஆராதனை செய்பவர்கள் ஒரு வருடம் பூஜித்த பலனை அடைவார்கள்.
ஸ்ரீபாஞ்சராத்ரம் எனும் ஆகமமானது, மார்கழி வளர்பிறை ஏகாதசி திதியில் இருந்து, பகவானின் ஸந்நிதியில் வேதம் ஓதத் தொடங்கி, தேய்பிறை பஞ்சமி நாளில் பத்து நாட்கள், பூர்த்தி செய்து, இந்த உத்ஸவத்தைக் கொண்டாடச் சொல்கிறது. இதற்கு ’மோக்ஷ உத்ஸவம்’ என்று பெயர்.
நான்கு வேதங்கள் வடமொழியில் அமைந்துள்ளவை திராவிட வேதம் என்பது ஆழ்வார்களால் அருளப்பட்ட நாலாயிர திவ்ய பிரபந்தங்கள். இதற்குத் 'தமிழ்மறை’ என்று பெயர். வடமொழியில் அமைந்துள்ள வேதசாரத்தை தமிழ்மொழியில் அருளியதால் 'வேதம் தமிழ் செய்த மாறன்’ என்று நம்மாழ்வார் போற்றப்படுகிறார்.
திருமங்கையாழ்வார், 'திருநெடுந்தாண்டகம்’ இயற்றினார். அதனைத் தன் பிறந்தநாளில், அரங்கனுக்கெதிரில் அனுபவித்துப் பாட, கிறங்கிப்போன அரங்கன், 'ஆழ்வாரின் விருப்பம் என்னவோ?'' என்று அன்போடு வினவ, ஆழ்வார் அதற்கு, ''மார்கழியின் மோக்ஷ உத்ஸவத்தன்று வேதங்களுடன் தமிழ்மறையான திருவாய்மொழியையும் அரங்கன் கேட்டருள வேண்டும்'' என வேண்டினார். அரங்கன் மகிழ்வுடன் இணங்கினான். அன்று முதல் இந்த உத்ஸவமானது தமிழ்மறை உத்ஸவமாக மாறியது.
திருமங்கை மன்னன் காலம் முதல் நாதமுனிகள் காலம் வரை, இந்த நடைமுறை தொடர்ந்தது. நாதமுனிகள் அனைத்து ஆழ்வார்களின் பாடல்களையும் அரங்கன் விரும்பிக் கேட்கும் விதமாக, இந்த உத்ஸவத்தை பகல்பத்து, இராப்பத்து என்று இரண்டு பிரிவுகளாக்கி, பகல் பத்தில் நம்மாழ்வார் நீங்கலாக இதர ஆழ்வார்களின் பாடல்களையும், இராப்பத்தில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியையும் கேட்டருளுமாறு திருத்தியமைத்தார். இவை திருமொழித் திருநாள் (பகல்பத்து), திருவாய்மொழித் திருநாள் (இராப்பத்து) என்றே அழைக்கப்படுகின்றன.
ஆழ்வார்களின் பாடல்களை 'அரையர்கள்’ எனும் நாதமுனிகளின் வம்சாவளியினர் ஆடிப்பாடி, அபிநயித்து, இசை, இயல், நாடகம் எனப்பொழிய, முப்பெரும் விழாவாக ஒரு சேர இந்த விழா விமரிசையாக நடைபெற்றது. திருமங்கைமன்னன், ஸ்ரீமந் நாதமுனிகள், ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீமணவாளமாமுனிகள் ஆகியோர் இந்த விழாவைப் படிப்படியாக சீர்படுத்தி, இதில் மோஹினி அவதாரம், திருக்கைத்தல சேவை, வேடுபறி, மற்றும் நம்மாழ்வார் மோக்ஷம் போன்ற பல சிறப்பு அம்சங்களைச் சேர்த்து பிரமாண்ட விழாவாகவே மாற்றி அமைத்தனர்.
இந்தத் திருநாளன்று ஸ்ரீராமானுஜரின் உள்ளக்கிடக்கை ஒன்றும் அர்ச்சை ஸ்வரூபத்தில் பூர்த்தியாகிறது. அதாவது, ஸ்ரீராமானுஜர் வாழ்ந்த காலத்தில், அவர் திருக்கச்சிநம்பிகள் சாப்பிட்டு மிகுந்த சேஷத்தை ஸ்வீகரிக்க ஆசைப்பட்டு, அது நிராசையாகவே போனது. ஆனால் இந்தத் திருநாளில், திருக்கச்சி நம்பிகளுக்கு அமுது செய்த அதே பிரஸாதம், அவருக்குப்பின் ஸ்ரீராமானுஜருக்கும் சமர்ப்பிக்கப்படுகிறது.
பகல்பத்து (திருமொழி திருநாள்):
இந்தப் பத்து நாட்களும், அரங்கன் பூரணமான அலங்காரத்துடன், அன்றன்று அரங்கேறும் பாசுரங்களுக்கு ஏற்ப தம்மை அலங்கரித்துக்கொண்டு, தமது துவாரபாலகர்கள் வாசல் வழியே வெளியே எழுந்தருளும்போது, எப்படி குகையிலிருந்து சிங்கம் வெளிவருமோ... அதேபோல் புறப்படுவார். இதற்கு 'சிம்மகதி’ என்று பெயர். பிறகு 'ஒய்யார நடை’ (வ்யாக்ர கதி) எனும் புலி போன்று நடையிட்டு படியேற்றம் கண்டு, துலுக்கநாச்சியாரை அனுக்கிரஹித்து அர்ஜூன மண்டபத்தில் அமர்ந்து திருமொழிப் பாடல்களான, நம்மாழ்வார் தவிர்த்த ஏனைய ஆழ்வார்களின் பாடல்களை அரையர்கள் ஆடிப்பாடி அபிநயிக்க, ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் குழாம்களோடு, ஆனந்தமாகக் கேட்டு ரசிப்பார்.
மோஹினி அலங்காரம்:
அரங்கனைப் பொறுத்தவரை 'மாறுவேட அலங்காரம்’ என்பது இந்த ஒரு திருநாளில் மாத்திரமே நிகழும்! 'மம மாயா துரத்யா’ (என்னுடைய மாயை அளவில்லாதது. அதை யாரும் கடக்க முடியாது.) எனும் திருமாலின் வசனத்துக்கு ஏற்ப, மாயாவதாரமான மோஹினி அலங்காரத்தில், அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் செய்த அவதாரத்தில், பக்தர்களாகிய நாம் அனைவரும் இதை நினைவிற்கொண்டு திருந்தும்படியாகக் காட்சி தருகிறான் அரங்கன்.
'திருவரங்கத்தாய்’ எனும் ஆழ்வார்களின் வர்ணனைக்கு ஏற்ப, உலகுக்கெல்லாம் தாயாகவும் உள்ளவன் என்பதை உலகுக்கு உணர்த்த, காட்சி தருகிறான் என்றும் பொருள் கொள்ளலாம்.
இராப்பத்து (திருவாய்மொழி திருநாள்):
இந்த உத்ஸவமானது மார்கழி சுக்லபட்ச ஏகாதசி (வைகுண்ட ஏகாதசி) தொடங்கி நடக்கும் பத்து நாள் உத்ஸவத் திருவிழாவாகும்! இராப்பத்துத் திருநாளில் வைணவ பக்தனான ஒரு முக்தன் எவ்விதம் வைகுந்தம் அடைகிறான் என்பது நம்பெருமாளாலேயே நடத்திக் காட்டப்படுகிறது.
விரஜாநதி மண்டபம் எனப்படும் விரஜாநதி ஓடும் வைகுந்தத்திற்கு ஒப்பாக சிறப்பாகக் கூறப்படும் இந்த மண்டபம் வரை, அரங்கன் போர்வை சாற்றிக்கொண்டு புறப்படுவார். இந்த மண்டபத்தில் வேதவிண்ணப்பங்கள் நடைபெறும். இது ஒரு முக்தன் விரஜாநதிக் கரையை அடையும்போது, 'விரசைதனில் குளித்து, இங்கு அமானவனால் ஒளிக்கொண்ட சோதியும் பெற்று, அமரர் வந்தெதிர் கொண்டலங்கரித்து வாழ்த்தி வழிநடத்த’ (ஆர்த்தி பிரபந்தம் 24) என்று மணவாளமாமுனிகள் அருளியபடி, வேதகோஷத்துடன் தேவர்கள் எதிர்கொண்டு அழைப்பதற்கு ஈடாகப் போற்றப்படுகிறது, இந்த வைபவம்.
வைகுண்டவாசல் திறக்கப்படும் முன்பு, போர்வை களையப்பட்டு நம்பெருமாள் அலங்காரங்கள் பளிச்சிட பிரகாசமாக ஸேவை தந்தருள்வார். இது விரஜாநதியைக் கடந்ததும் அந்த முக்தன் சரீரவாசனை துறந்து, சுத்த தேஜோமயமான அழிவில்லாத பிரகாசமான சரீரத்துடன் பயணப்படுவதைக் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. பரந்தாமனே தன் பக்தர்களுக்காக இதை நடத்திக்காட்டுவது, நம்மை அவனிடத்தே அதிக பந்தப்படுத்துவதற்கு வழி வகுக்கிறது!
அரங்கன் திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் புடைசூழ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழிப் பாடல்களை அரையர்கள் அபிநயிக்கக் கேட்டும் கண்டும் இன்புறுவார் அரங்கன். இந்த மண்டபத்தை அரங்கனது 'லீலாவிபூதி’ என்பார்கள். 'நித்யவிபூதி’ என்பது நித்யம் வாஸம் செய்யும் இடமாம். லீலாவிபூதி அரங்கனின் லீலைகள் அரங்கேறும் இடம். இங்குதான் திருக்கைத்தல ஸேவை, நம்மாழ்வார் மோட்சம் போன்ற வைபவங்கள் நடந்தேறுகின்றன.
அடுத்து, நம்பெருமாள் ஆஸ்தானம் திரும்பும்போது, நாழிகேட்டான் வாசல் கடந்ததும், மேற்கு முகமாக திரும்பியவுடன், அங்கு வீணாகானத்தோடும், சாத்தாத பூவிதழ்களோடு கலந்து தூவும் பச்சைக் கற்பூரத்தோடும் ஸ்ரீவைஷ்ணவர்கள் நிற்பார்கள். அப்போது, மெதுவாக தளிர்நடையிட்டும் அசைந்து அசைந்து ஆடியும் அரங்கன் ஆஸ்தானம் ஏறும் படியேற்ற ஸேவையைக் காணக் கண்கோடி வேண்டும்.
திருக்கைத்தல ஸேவை:
அரங்கன் அதிக மகிழ்ச்சியில் இருந்தபோதும், அவசர கதியில் இருந்தபோதும், அர்ச்சகர்களின் கைத்தலத்திலேயே எழுந்தருளியதை 'கோவிலொழுகு’ எனும் திருவரங்கத்து வரலாற்றுத் தொகுப்பில் காணலாம். இன்று நம்மாழ்வார் நாச்சியார் திருக்கோலம் கொண்டு 'பராங்குச நாயகி’யாக, இறைவனிடம் வேண்ட, அரங்கன் அர்ச்சகர்களின் கைத்தலங்களில் எழுந்தருளி நம்மாழ்வாரைக் கடாக்ஷிக்கிறார். திருக்கைத்தல ஸேவையின் போது அரங்கன் அதிக அலங்காரமில்லாமல் அடுக்கடுக்காக சில பீதாம்பரங்களை மட்டும் சாற்றிக்கொண்டு காட்சி தருவார்.
ஒவ்வொரு ஏழாம் திருநாளன்றும், நம்பெருமாள் ரங்கநாச்சியார் ஸந்நிதி அடைந்து, அங்கு தாயார் முன் மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளி, பிறகு ஆஸ்தானம் திரும்புவது வழக்கம். ஆனால் இந்த ஒரு திருநாளில் மட்டும், இதற்கு விதிவிலக்கு. ஆழ்வார் மீது உள்ள அளவற்ற காதலால், பராங்குசநாயகியாகக் காத்திருக்கும் நம்மாழ்வாருக்காக, தன் நாச்சியாரையும் மறந்து இங்கு எழுந்தருளுவது அவனது சௌலப்யத்தின் எல்லை!
வேடுபறி:
திருமங்கைமன்னனை நினைவுகொள்ளும் வகையில் ஏற்பட்ட வைபவம் இது. நம்பெருமாள் அப்போது குதிரை வாகனத்தில் காட்சி தருவார். திருமங்கைமன்னனின் வம்சாவளியினர், திருமங்கை மன்னன், பெருமாள் நகைகளைக் கொள்ளையடித்ததையும், பின் பெருமாளின் அருளால் அவர் ஆழ்வாராக மாறியதையும் நடித்துக் காட்டுவார்கள். பிறகு இவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு, திருமாமணி மண்டபம் சேர்வார், அரங்கன்.
நம்மாழ்வார் மோட்சம்:
இந்தத் திருநாட்கள் அனைத்திலும் முக்கியமான திருநாள் இதுதான்! இதை 'ஆழ்வார் திருவடி தொழுதல்’ என்று போற்றுவார்கள். அரங்கன் எப்போதும் இரவில், வெளி மண்டபங்களில் எங்கும் தங்குவதே இல்லை. எந்நேரமானலும் மூலஸ்தானம் திரும்பிவிடுவார். இந்த ஒரு திருநாளில் மட்டும் 10-ம் திருநாள் தீர்த்தவாரி முடிந்து வந்தவர், 'ஆழ்வார் மோட்சம்’ வைபவத்துக்காக, திருமாமணி மண்டபத்திலேயே இராத்தங்கி நம்மாழ்வாருக்கு மோட்சம் தருகிறார்.
11-ம் நாள் விடியற்காலை இரண்டு அர்ச்சகர்கள் கைத்தலங்களில், நம்மாழ்வாரை ஏந்திய அரையர் 'சூழ்விசும்பணிமுகில்’ எனும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைப் பாடிக்கொண்டுவர, அரங்கனின் திருவடியில் நம்மாழ்வாரின் திருமுகம் பதியும்படி, எழுந்தருளச் செய்வார்கள். அப்போது, 'முனியே..! நான்முகனே..' என்கிற கடைசி திருவாய்மொழியை, அதீத உயிர்ப்புடனும் ஆழ்வார் நம்மை விட்டுப் பிரிகிறாரே என்ற உள்ளத் தவிப்புடனும் அரையர்கள் கதற, ஆழ்வாரின் சிரம் மீது திருத்துழாய் சமர்ப்பித்துக் கொண்டே இருப்பார்கள் அர்ச்சகர்கள்.
நம்பெருமாள், நம்மாழ்வார் ஆகிய இருவரும் அர்ச்சா (விக்ரஹ) ரூபமாக இருந்தாலும் இருவரின் திருமேனியிலும் ஒரு தெய்வீக சிலிர்ப்பையும், நம்மாழ்வாரிடம் தெய்விகமான, அமைதியான, அழகு ததும்புகிற பொலிவையும், அரங்கனிடம் பெரும் வாட்டத்தையும் அப்போது கண்டு உணரலாம்!
அரங்கனையும் ஆழ்வாரையும் காணக் காண ஒரு பரவசம், மெய்சிலிர்ப்பு, உயிரோட்டம், அசாத்திய அதிர்வு. இருவரின் உணர்வு பூர்வமான திருவுள்ளப் பரிமாற்றத்தை அர்ச்சையிலும் காண்பது என்பது அரிது. இந்த அரிய நிகழ்வை உளப்பூர்வமாக பலர் கண்ணீர் கசிய தரிசிக்கலாம்!
'அவாவறச் சூழ்அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன
அவாவிலந்தாதிகளால் இவையாயிரமும்* முடிந்த
அவாவிலந்தாதியிப் பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே..!
என்று உணர்வெல்லாம் ஒன்று திரட்டி அரையர்கள் தாளத்தோடு பாட, நம் அங்கமெல்லாம் விதிர்த்து நிற்கும். அரங்கன் தான் சாற்றிக்கொண்டிருந்த மாலையைக் களைந்து ஆழ்வாருக்குச் சாற்றி, தன் நெற்றியில் இருந்து கஸ்தூரியை, ஆழ்வாரின் நெற்றியில் திலகமிட்டு தன் பெருவீட்டுக்கு அந்தாதி பாடிய ஆழ்வாரை அனுப்புகையில் பக்தர்களின் 'ஹோ’வென்ற சப்தம் வேதனை கலந்த கூக்குரலாக எதிரொலிக்கும்!
நம்பெருமாளும் கோவிலார்களுக்கு, தக்க மரியாதைகள் ஆனதும் ஆஸ்தானம் சேருவார். இத்துடன் இந்தத் திருவிழா, இனிதே நிறைவுறுகிறது.
அரங்கனின் லீலைகள் அளவில்லாதவை. வார்த்தைகளால் விவரிக்கமுடியாதவை. அவனை உள்வாங்கி அனுபவிப்பவர்கள் இதை உணர்வார்கள். நீங்களும் இந்தத் திருநாட்களில், அரங்கனை அனுபவித்து உணர வாருங்கள். அவனுக்கு உற்றம் ஆவோம்..! உணர்வோம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...