Monday, December 24, 2018

நவீன திருவிளையாடல் :

( சிரிப்பதற்கு மட்டும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் )
உடல் மண்ணுக்கு உயிர் உப்புமாவிற்கு
உறவுக்கு கை கொடுப்போம்
உப்புமாக்கு வாய் திறப்போம்
( உப்புமாவை நேசிப்பவர்களுக்கும் உப்புமாவை சுவாசிப்பவர்களுக்கும் சமர்ப்பணம் )
இடம் : மதுரை அரண்மனை வாயில் :
தண்டோரா அடிப்பவன் :
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி
நளபாகம் கற்றவர்களுக்கு ஓர் நல்ல வாய்ப்பு
நமது மன்னர் செண்பகபாண்டியன் அவர்களுக்கு உப்புமா கிண்டுவதில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது அதை தீர்த்து வைப்பவர்களுக்கு ஒரு வருடம் உப்புமா தயாரிக்க மூலப்பொருட்கள் பரிசாக வழங்கப்படும்
இடம் : மதுரை கோவில் :
தருமி : சொக்கா அரசன் அறிவித்த பரிசுத்தொகை எனக்கே கிடைக்கும்படி அருள்வாய்
சிவன் : புலவரே
தருமி : யாரு
சிவன் : அழைத்தது நாம்தான்
தருமி : ஏன் அழைச்சீங்க யாரு நீங்க
சிவன் : பாண்டியன் சந்தேகத்தை தீர்க்கும் பாட்டை உனக்கு தர வந்துள்ளேன் இந்தா
சென்று வா வென்று வா
இடம் : மதுரை முத்தமிழ் சங்கம் :
சிவன் : இப்புலவன் கொண்டு வந்த பாட்டில் இச்சபையில் குற்றம் கண்டவன் எவன்
நக்கீரன் : அவன் இவன் என்ற ஏகவசனம் வேண்டாம் அவையடக்கத்தோடு நடந்து கொள்ளவும்
சிவன் : யார் இந்த கிழவன்
மன்னன் : முத்தமிழ் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரர்
சிவன் : ஓ கீரனா ம் சொல் என் பாட்டில் என்ன குற்றம் கண்டீர் சொல்லிலா இல்லை பொருளிலா
நக்கீரன் : சொல்லில் குற்றமில்லை பொருளில்தான் குற்றம்
சிவன் : என்ன குற்றம்
நக்கீரன் : எங்கே உமது செய்யுளைச் சொல்லும்
சிவன் : 'தின்பதோ வாழ்க்கை வேலை வேறில்லை தம்பி ஓமம் சேர்க்காமல் கண்டதும் உளதே கடுகும் ; பருப்பும் ; உளுந்தும் ; மிளகாயும் சேர்த்து எண்ணெயில் தாளித்த பாவையே இதை விடுத்து வேறென்ன நீயறியும் ரவா உப்புமாவே '
என்று எழுதியுள்ளேன்
நக்கீரன் : இப்பாட்டின் உட்பொருள்
சிவன் : அங்காடித் தெருவில் விற்கும் மளிகைப் பொருட்களையெல்லாம் வரிசையாய் வாங்கி குவிக்கும் பெண்ணே நீ வாங்கிய பொருட்களில் ரவாவைப் போல் வேறு அரியவகை பொருளுண்டோ அதில் நீ செய்த உப்புமாக்கு ஈடுஇணையுண்டோ என்பதே இதன் பொருள்
நக்கீரன் : இப்பாட்டின் மூலம் எம் மன்னருக்கு நீர் கூறும் பொருள்
சிவன் : ஹா ஹா புரியவில்லை பெண்களுக்கு இயற்கையிலேயே உப்புமா கிண்டும் ஆற்றலுண்டு என்பதுதான்
நக்கீரன் : ஒருக்காலும் இல்லை அன்னையிடம் சமையல் கலை கற்றுக் கொள்வதாலும் தொடர்ந்து சமையல் வேலை பார்ப்பதாலும் மசாலா வகைகளை போடுவதாலும் இது சாத்தியம்
சிவன் : தேவலோகப் பெண்களுக்கு
நக்கீரன் : அவர்களுக்கும்தான்
சிவன் : சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி வழியும் கும்பகர்ணன் அவன் மனைவிக்கும் இதே கதிதானோ
நக்கீரன் : சந்தேகமென்ன நான் அன்றாடம் நினைவில் வைத்திருக்கும் நளமகராஜாவின் தர்மபத்தினியான தமயந்திக்கும் இது பொருந்தும்
சிவன் :
அங்கம் புழுதி பட
அங்காடியில் விழுந்து புரண்டு
வரிசையில் நிற்போரை
மிதித்து தள்ளி
அரிசியும் பருப்பும்
தலையில் சுமந்து
டெபிட் கார்டில் உள்ள
மினிமம் பேலன்ஸையும் கரைத்து
இல்லம் சென்று ஏன் தாமதமாய் வந்தீர்
என இல்லாளிடம் பல்பு வாங்கி
அடி வாங்கிய நக்கீரனோ எம் கவியை
ஆராயத் தக்கவன்
நக்கீரன் :
பல்பு வாங்குவது எங்கள் குலம்
படியளக்கும் பரமனுக்கு ஏது குலம்
பல்பை டெஸ்ட் செய்து வாங்குவோம்
நரனே உன் போல் ப்யூஸ் போன பல்பாக
ஒரு போதும் இருக்க மாட்டோம்
சிவன் : நக்கீ====================ரா
மன்னன் : இறைவா சொக்கேசா ஜோதிச்சுடரே ஆராயமல் எதிர்வாதம் செய்த நக்கீரனை மன்னித்து உயிர்ப்பிக்க வேண்டும்
சிவன் : செண்பக பாண்டியனே கவலை வேண்டாம் எமது விளையாட்டுகளில் இதுவும் ஒன்று சினம் இல்லை எமக்கு கொதிக்கும் பாமாயிலை மேலே ஊற்றியதால் ஏற்பட்ட காயத்தின் வெம்மை தாளாமல் அவதியுறும் நக்கீரன் நலமுடன் வருவான்
இடம் : பொற்றாமரைக் குளம் :
சிவன் : நக்கீரா எழுந்து வா
நக்கீரன் : இறைவா
உப்பும் நீயே பருப்பும் நீயே
உலகும் நீயே உயிரும் நீயே
உப்புமாவும் நீயே
அறியாமல் வாதம் புரிந்த இந்த சிறுவனை மன்னியுங்கள்
சிவன் : நக்கீரா உம் தமிழோடு விளையாடவே யாம் வந்தோம் வந்திருப்பது இறையென்று அறிந்தும் சாப்பாட்டின் மீது உனக்கிருந்த பற்றின் காரணமாக நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய உமது வாதம் வெகு சூப்பர் இனி முகநூல் ; ட்விட்டர் ; வாட்ஸ்ஆப் இவைகளில் உன் புகழ் இவ்வுலகம் உள்ளவரை பரவட்டும்
நக்கீரன் : மிக்க மகிழ்ச்சி மன்னா தாங்கள் அறிவித்த பரிசுத்தொகையை தருமிக்கே வழங்கும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்..
பி.கு..
இன்னிக்கு யார் யார் வீட்ல உப்புமா...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...